எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம்
அத்தியாயம் – 3

வகுப்பு ஆரம்பித்து முதல் இரண்டு மணிநேரம் மிக வேகமாகப் போனது. அருணுக்கு மதியச் சாப்பாட்டு நேரம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது.

வகுப்பில் ஆசிரியை கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஃப்ராங்க் டாண் டாண் என்று பதில் கொடுத்தான். என்னதான் ஹோம் ஸ்கூலிங் செய்திருந்தாலும் வகுப்பில் எல்லா மாணவர்களையும்விட அதிக புத்திசாலியாகத் தென்பட்டான். கொஞ்சம் கொஞ்சமாக அருணுக்கு ஃப்ராங்க் மேலிருந்த மதிப்பு கூடிக்கொண்டே போனது. அது மட்டுமல்ல, மிஸ். ரிட்ஜ் அவர்களுக்கும் ஃப்ராங்கை மிகவும் பிடித்துவிட்டது.

மதிய உணவு மணியடித்தது. எல்லா மாணவர்களும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர்."

அருண் சாப்பாட்டுப் பையைத் தூக்கிக்கொண்டு சாப்பிடுமிடம் நோக்கி வேகமாகப் போனான். அங்கே போகுமுன்னரே ஃப்ராங்கிடம் பேச நினைத்திருந்தான். அவனால் அது முடியவில்லை.

மதிய உணவு சாப்பிடுமிடத்தில் ஃப்ராங்கைத் தேடினான் அருண். எங்கும் அவன் காணப்படவில்லை. அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தான். அங்கிருந்த மாணவர்கள் கூட்டத்தில் ஃப்ராங்க் காணப்படவில்லை. வகுப்பு நண்பர்கள் சிலரிடம் விசாரித்தான்.

"ஹே டானியல், ஃப்ராங்கை பாத்தியா?" என்று அருண் கேட்டான்.

"ப்ராங்க்? யாரது?"

"அதான், நம்ம வகுப்புக்கு வந்திருக்கிற புதுப்பையன்."

"யார், அந்த பீமனா? நான் பாக்கலியே. எங்காவது அவன் சைஸுக்கு பெஞ்ச் கிடைக்குதான்னு தேடிட்டு இருப்பான்" என்று நக்கலாகப் பதில் சொன்னான் டானியல்.

"அது இல்லைடா. அந்த ஃப்ராங்க் ஒரு பெரிய ட்ரக்கையே முழுங்கிட்டு இருப்பான் எங்கயாவது" என்று பதில் வந்தது மற்றொரு நண்பனிடம். எல்லோரும் அருண் எரிச்சல் படும்படி ஓவென்று சிரித்தனர்.

அருணுக்குக் கோபத்தில் அழுகை அழுகையாக வந்தது. ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

சாப்பிடப் போகாமல் ஃப்ராங்கைச் சிறிதுநேரம் கூட்டத்தில் தேடினான். ஒரு மூலையில் செரா ஃப்ளவர்ஸ் உட்கார்ந்து, புத்தகம் படித்துக்கொண்டு சாப்பிடுவதைப் பார்த்தான் அருண். செராதான் ஃப்ராங்கின் Buddy ஆச்சே, அவளுக்கு ஃப்ராங்க் எங்கிருக்கிறான் என்று தெரிந்திருக்கும். அவளை நோக்கிப் போனான்.

"செரா… செரா…" அருண் அவளருகில் போய்ச் சத்தமாகக் கூப்பிட்டான். ஒருகையில் சான்ட்விச், மறு கையில் புத்தகம். அமைதியாகப் படித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் செரா.

"செரா… செரா!" மீண்டும் சத்தம் போட்டான் அருண்.

அத்தனை கூச்சலிலும் கொஞ்சங்கூடப் பதட்டமே இல்லாமல் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தாள் அவள். மதிய உணவு முடிந்து பெல் அடிக்கும் நேரம் ஆனது. சில நிமிடங்களே பாக்கி. அருணுக்கோ வருத்தத்துடன் பசியும் சேர்ந்து கொண்டது. கையில் அவனுடைய மதிய உணவு திறக்கப்படாமல் அப்படியே இருந்தது. சாப்பிடாமல் வீட்டுக்குப் போனால் அம்மா திட்டுவார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவனுக்கு இன்னும் கோபம் வந்தது.

"செரா, பதில் சொல்லு!" என்று கத்தி, அவளை ஒரு உலுக்கு உலுக்கினான்.

எரிச்சல் படவில்லை அவள். நிதானமாகக் கடைசித்துண்டு ரொட்டியை சாப்பிட்டுவிட்டு, புத்தகத்தை மூடிவைத்தாள். கண்ணாடியைச் சரிசெய்து விட்டு, "அவன், அந்தச் சறுக்கு பக்கத்துல விளையாடிட்டு இருந்தான். அங்க போய்ப் பாரேன்" என்றாள்.

அவள் கண் புத்தகத்தின் மீதே இருந்தது. "அவனா? எவன்?" என்று கேட்டான் அருண்.

"நீ யாரைத் தேடுறையோ, அவன்" என்றாள் செரா.

"யார்? ஃப்ராங்கா? உனக்கெப்படி....?"

சறுக்கு இருக்கும் திசையைக் காட்டிவிட்டு அவள் எழுந்து போனாள். அருண் அவளை ஒரு வினோத பிராணியைப் பார்ப்பதுபோல் பார்த்தபடி நின்றான். சிறிது தூரம் நடந்து போனபின், செரா திரும்பி "அருண், 5 நிமிஷத்துல மதிய உணவு முடிஞ்ச பெல் அடிக்கும். வேகமாப் போ" என்றாள்.

அருண் சறுக்கு இருக்கும் இடத்திற்கு ஓடினான். ஃப்ராங்க் அங்கேயும் தென்படவில்லை. அதற்குள் மணி அடித்தது. எல்லோரும் வகுப்புக்குத் திரும்பினர். அருண் வகுப்புக்குள் நுழையுமுன் ஒரு மாணவன் சடாலென்று குறுக்கே வர, அவன்மீது மோதினான்.

"சாரி" என்றான் அருண், யார்மீது மோதினோம் என்றுகூடப் பார்க்காமல்.

"ஹலோ மிஸ்டர் மேகநாத், எப்படி இருக்கீங்க?" என்று பதில் வந்தது மோதினவனிடமிருந்து. அருண் அது யாரென்று முகத்தைப் பார்த்தான். அது ஃப்ராங்க்! சந்தோஷம் தாங்கவில்லை அருணுக்கு. எப்படிடா தன் பெயர் ஃப்ராங்கிற்கு தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான்.

"Buddy, உன்னை நேர்ல பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று சொல்லி, தனது ஆள்காட்டி விரல்களைக் காட்டி ஒரு ஆக்‌ஷன் செய்துவிட்டு வகுப்பிற்குள் போனான் ஃப்ராங்க்.

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com