மினி ஃப்ரூட் டார்ட்ஸ்
சமையலைவிட பேக்கிங் செய்வது எளிது. நல்ல ரெசிபியைச் சரியாகச் செய்தால், சுவை தானாக வந்துவிடும். நான் செய்த பேக்கிங் ஐட்டங்களை விருந்தினர்கள் விரும்பிச் சாப்பிடும்போது ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். இந்தப் புத்தாண்டு சமயத்தில் எனக்குப் பிடித்த மினி ஃப்ரூட் டார்ட் ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன். என்ஜாய்!

மினி ஃப்ரூட் டார்ட்ஸ்

தேவையான பொருட்கள்

(க்ரீம் சீஸ் ஃபில்லிங் செய்ய)
க்ரீம் சீஸ் (ரூம் டெம்பரேச்சர்): 8 அவுன்ஸ் பேக்
கண்டென்ஸ்டு மில்க் : 14 அவுன்ஸ்
எலுமிச்சை சாறு : 3 மேசைக்கரண்டி
வனில்லா எசன்ஸ் : 1 மேசைக்கரண்டி

(மினி டார்ட்ஸ் செய்ய)
மைதா மாவு : 1 ½ கிண்ணம்
ஐஸிங் சர்க்கரை (அ) தூள் சர்க்கரை : ½ கிண்ணம்
உப்பு சேர்க்காத வெண்ணெய் : 1 கிண்ணம் (ரூம் டெம்பரேச்சர்)
வனில்லா எசன்ஸ் : 1 மேசைக்கரண்டி
சோள மாவு (அ) அரிசி மாவு : 3 மேசைக்கரண்டி
உப்பு : ¼ மேசைக்கரண்டி

அலங்கரிக்க:
பெர்ரி வகை பழங்கள் (புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி)

க்ரீம் சீஸ் ஃபில்லிங் செய்முறை
க்ரீம் சீஸை எலெக்ட்ரிக் மிக்சர் (அ) ஃபுட் ப்ராசஸரில் மென்மையாக வரும்வரை அடிக்கவும். இதில் கண்டென்ஸ்டு மில்க், எலுமிச்சை சாறு, வனில்லா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.(சரியான பதத்திற்குமேல் அடித்தால் ஃபில்லிங் நீர்த்துவிடும்). இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி மூடி, ரெஃப்ரிஜிரேட்டரில் 6 முதல் 8 மணிவரை (அ) முழு இரவு வைக்கவும். இதை நன்கு மூடிவைத்து ஒரு வாரம்வரை உபயோகிக்கலாம்.

மினி டார்ட்ஸ் செய்முறை
24 மினி மஃபின் பானில் வெண்ணெய் (அ) நான் ஸ்டிக் ஸ்ப்ரே செய்யவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து எலெக்ட்ரிக் மிக்சர் (அ) ஹேண்டு மிக்சரில் வனில்லா எசன்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் மென்மையாக வரும்வரை அடிக்கவும். இதனுடன் மைதாமாவு, சோளமாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவை சரியான பதத்தில் வந்தவுடன், மூடி ரெஃப்ரிஜிரேட்டரில் 30 முதல் 60 நிமிடம்வரை வைக்கவும். இந்த மாவை ஒரு மேசைக்கரண்டி எடுத்து மஃபின் கப்பில் வைக்கவும். விரல்நுனியால் அந்த மாவை மஃபின் கப்பின் அடி பகுதியிலும் மேல் பகுதியிலும் அழுத்தி விடவும். பிறகு இதை மஃபின் பானில் வைத்து மூடி 15 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும். இதனால் டார்ட் கடினமாக மாறும், இப்படி செய்வதால் பேக் செய்யும்போது டார்ட் உப்பாமல் இருக்கும்.

இதற்கிடையில் அவனை (Oven) 325 டிகிரி F (170 டிகிரி C) சுடவைக்கவும். மஃபின் பானை அவனின் நடுத்தட்டில் வைக்கவும். தோராயமாக 20 நிமிடம் அல்லது பொன்னிறமாக வரும்வரை பேக் செய்யவும். இடையே டார்ட் உப்பினால் ஃபோர்க் (fork) உதவியால் டார்ட்டின் அடியில் லேசாகக் குத்திவிடவும். டார்ட் சரியான பதத்திற்கு வந்ததும் அவனிலிருந்து வெளியே எடுத்துக் குளிரவைக்கவும். நன்றாக ஆறியபின் பானில் இருந்து டார்ட்டை வெளியே எடுக்கவும்.

பரிமாற
பரிமாறுவதற்குப் பலமணி நேரத்துக்கு முன், 2 மேசைக்கரண்டி க்ரீம் ஃபில்லிங்கை டார்ட்டில் நிரப்பவும். இதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். பெர்ரி பழங்களை மேலே வைத்துப் பரிமாறவும். இந்தச் செய்முறையில் 36 டார்ட்வரை செய்யலாம்.

ஜெயஸ்ரீ கிருஷ்ணன்,
இர்விங், டெக்சஸ்

© TamilOnline.com