'தாழம்பூ' கோவிந்தராசன்
கையெழுத்து இதழாகத் துவங்கிய சிற்றிதழ்கள் இன்று அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றும் விடாப்பிடியாகத் 'தாழம்பூ'வைக் கையெழுத்து இதழாகவே நடத்தி வருகிறார், அறந்தாங்கியைச் சேர்ந்த எம்.எஸ். கோவிந்தராசன். 38 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழை வல்லிக்கண்ணன், மு. மேத்தா, மன்னர்மன்னன் (பாரதிதாசனின் மகன்), வ.உ.சி. வாலேஸ்வரன், மணிமேகலை குப்புசாமி (பாரதிதாசனின் பேத்தி), ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் எனப் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம், நேர்காணல்கள், உலக நிகழ்வுகள் எனப் பல்சுவை இதழாகக் கோவிந்தராசனின் கையெழுத்திலேயே மலர்ந்து கொண்டிருக்கிறது தாழம்பூ.

Click Here Enlargeபுதுக்கோட்டையில் 1958ல் பிறந்த கோவிந்தராசன், புதுகை மாமன்னர் கல்லூரியில் பி.யூ.சி. முடித்துவிட்டு அரசு ஓவிய ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் தந்தை வழியில் சித்த மருத்துவரானார். 19ம் வயதிலேயே, 1977ல் 'தாழம்பூ' என்ற கையெழுத்து இதழைத் துவங்கினார். சிலகாலம் தடைப்பட்ட போதும் மீண்டும் நடத்தினார். பள்ளியில் படித்த காலத்தில் 'அணில்' போன்ற இதழ்களைப் பார்த்து அப்போதே குழந்தைகளுக்காக 'இதயக்கனி', 'கலை உலகம்' என்ற கையெழுத்து இதழ்களை நடத்திய அனுபவம் இருந்ததால் 'தாழம்பூ'வை நடத்துவதில் சிக்கல் ஏதும் வரவில்லை. ஜெராக்ஸ் இல்லாத அந்தக் காலத்தில் கார்பனை வைத்து எழுதிப் பிரதிகளைத் தயாரித்தார். ஜெராக்ஸ் வந்தபின்பே நகலெடுத்து அனுப்ப ஆரம்பித்தார். "இதில் வருமானமெல்லாம் பெரிதாகக் கிடைக்காது. கடைகளிலும் இதழ் கிடைக்காது. விற்பனையாளர்கள் விற்றாலும் பணம் கிடைக்கும் உத்தரவாதம் இல்லை. சந்தாதாரர்களின் ஆதரவுடன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இலக்கிய ஆர்வம்தான் முழுமுதற் காரணம். எனது ஓவியத் திறமையும் இதில் பயன்படுகிறது" என்கிறார்.

ஒரு ஆர்வத்தில் நூறாவது இதழை மட்டும் அச்சிதழாகக் கொண்டு வந்தார். ஆனால், அதில் விளம்பரம் செய்தவர்கள் பணம் தராததால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. வாசகர்கள் தொடர்ந்து கையெழுத்து இதழாகவே வேண்டும் என்று தெரிவிக்கவே அப்படியே தொடரந்தார். பல ஆண்டுகாலம் மாத இதழாகவே வெளியிட்டு வந்தார். "2010ல் எனக்கு உடல்நலம் மிகவும் சீர்கெட்டது. கை, கால்கள் செயலிழந்த நிலை. சரியாவது கடினம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். ஆனால், நான் விடாப்படியாக மெள்ள மெள்ள எழுதப் பழகினேன். கிட்டத்தட்ட ஒருவருடத்தில் முன்போல் எழுத முடிந்தது. டாக்டர்களுக்கே அதில் ஆச்சரியம்தான். தாழம்பூவின் மீது நான் கொண்டிருந்த ஆர்வம்தான் என்னை மீட்டது. கால்கள் முன்போல் சரியாகவில்லை. நகல் எடுப்பது, அஞ்சல், கூரியர் தபாலில் சேர்ப்பது, பிரதி எடுப்பது போன்ற வேலைகளில் எனது காதல் மனைவி மாதவி உதவுகிறார். அவரது உதவியில்லாமல் இந்த இதழ் சாத்தியமில்லை" என்கிறார். இப்போது தாழம்பூ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவருகிறது.

Click Here Enlargeமு. மேத்தா, வல்லிக்கண்ணன், மணிமேகலை குப்புசாமி, ஆலந்தூர் மோகனரங்கன், கவிமாமணி இளையவன், மதுரை சேகர், எனப் பலரை தாழம்பூவுக்காக இவர் நேர்காணல் செய்திருக்கிறார். இதுவரை 350க்கும் மேற்பட்ட இதழ்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கியச் சிறப்பிதழ், சிற்றிதழ் சிறப்பிதழ், சத்யஜித்ரே சிறப்பிதழ், மருத்துவச் சிறப்பிதழ், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல் சிறப்பிதழ்கள் எனச் சிறப்பிதழ்களையும் வெளியிட்டு வருகிறார். சிற்றிதழ்ச் செல்வர், சிற்றிதழ்ச் செம்மல், சிற்றிதழ் மாமணி, இதழியல் செம்மல், சிற்றிதழ் நற்பணியாளர், இதழியல் இனியர், எழுத்துச் சிற்பி, கவிமாமணி எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். "சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு" என்ற நூலை எழுதியிருக்கிறார். மேலும் பல நூல்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். இவரைப்பற்றிய நூல் ஒன்றை 'செங்காத்து' என்ற இதழின் ஆசிரியரான கோ.மு. சீனிவாசன் எழுதி வருகிறார். கோவிந்தராசனுக்கு இரு மகன்கள், ஒரு மகள். ஒரு மகன், மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன்கள் சென்னையில் வசிக்கின்றனர்.

தாழம்பூ என்ற வலைப்பூவில் இவரது இதழின் பகுதிகள்
வலையேற்றம் காண்கின்றன. எழுத்தாளர் கிரிஜா மணாளன் அதற்குத் துணைநிற்கிறார். இதழைத் தவம்போல் உழைத்து வெளியிட்டு வரும் எம்.எஸ். கோவிந்தராசன் பாராட்டப்பட வேண்டியவர். மனைவி மாதவியுடன் அறந்தாங்கியில் வசித்து வருகிறார். 24 பக்கமுள்ள இவ்விதழின் ஆண்டுச் சந்தா ரூ.100 மட்டும்.

தொடர்புக்கு: எம்.எஸ். கோவிந்தராசன், செல்பேசி: 9688013182 (இந்தியா).

அரவிந்த்

© TamilOnline.com