கலிஃபோர்னியாவின் கூப்பர்டினோ மாநகரத்தின் புதிய மேயரான திருமதி. சவிதா வைத்யநாதன், இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தலைமுறை இந்திய-அமெரிக்கப் பெண்மணி என்ற பெருமையைக் கொண்டவர். "கல்விக்கும் சிறந்த நூலகங்களுக்கும் பெயர்போன கூப்பர்டினோவுக்கு மேயரானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்கிறார் இந்தியாவில் பிறந்த சவிதா. புதுடில்லியின் செயின்ட் ஸ்டீவன்ஸ் கல்லூரியில் கணிதத்தில் BA (Hons.), லக்னோ பல்கலையில் B.Ed., சான் ஹோசே பல்கலையில் MBA ஆகியவை இவரது கல்வித்தகுதிகள். சமூகசேவையில் முழுமூச்சாக ஈடுபடுவதற்கு முன்னால் உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர், வங்கி அதிகாரி, பெண் தொழில்முனைவோர் மைய அதிகாரி எனப் பொறுப்புகள் வகித்துள்ளார்.
19 ஆண்டுகளாகக் கூப்பர்டினோ வாசியான சவிதா இப்பகுதி மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர். "இந்த நகரம் எப்படி வளரவேண்டும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இந்த நகரவாசிகள் நன்கு கற்றவர்கள், சமுதாய அக்கறை கொண்டவர்கள். எனவே ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு இதை ஒரு வாய்ப்பாக நான் பார்க்கிறேன்" என்கிறார்.
ஆசிரியர், அன்னை என்கிற இவரது அனுபவங்கள், பாடத்திட்டத்தைத் தாண்டிக் கல்வியை மேம்படுத்தும் எண்ணத்தைக் கொடுத்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் தமது திறமையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவிடத் திட்டம் வைத்திருக்கிறார். அதே நேரத்தில் முதியோர் தமது வாழ்க்கையைப் பெருமிதத்தோடு நடத்தவும் சமூகத்திற்குத் தமது திறனுக்கேற்பப் பங்களிக்கவுமான வழிகளை ஏற்படுத்தக் கருதியிருக்கிறார். 'YES - Youth, Environment and Seniors' என்ற தனது தேர்தல் கோஷத்தையே, மையக்கருவாகக் கொண்டு செயல்படப் போவதைத் தெளிவாக்குகிறார்.
மேயராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், "நான் கண்ணாடிக் கூரையை உடைத்தேனா என்பது தெரியாது, ஆனால் நிச்சயமாக சிலிக்கான் கூரையில் சில விரிசல்களை ஏற்படுத்தி இருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். ஏனைய மேயர்களைப் போல் வழக்கறிஞர், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சாராமல், சமுதாய சேவகியாக நன்கறியப்பட்டவர் சவிதா. கூப்பர்டினோ ரோட்டரி சங்கத்தின் தலைவர் பதவியை இப்போதுதான் நிறைவு செய்திருக்கிறார். சென்ற ஆண்டு இதே சமயத்தில் அவர் இந்த நகரத்தின் துணைமேயராகப் பதவியேற்றார். (பார்க்க: தென்றல், ஜனவரி 2016)
"நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவள் என்பதில் பெருமைதான் என்றாலும் எல்லாப் பிரிவினரின் ஆதரவில் நான் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன்" என்பதையும் குறிப்பிட அவர் தவறவில்லை.
கூர்த்த நோக்கு, பரந்த மனம், கடின உழைப்பு இவற்றால் படிப்படியாக உயர்வுகளை அடைந்துள்ள திருமதி. சவிதா வைத்யநாதன் அவர்களின்பதவிக்காலம் கூப்பர்ட்டினோவின் பொற்காலம் ஆகட்டும் எனத் தென்றல் வாழ்த்துகிறது.
தொகுப்பு: மதுரபாரதி |