ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு அரை மில்லியன் டாலர்
டிசம்பர் 17, 2016 அன்று, டாலஸ் மார்த்தோமா தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிதியளிப்பு நிகழ்ச்சியில் 500 ஆயிரம் டாலர் நிதி, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. டாலஸின் அனைத்துத் தமிழ் அமைப்புகளும் திரண்டு செயல்பட்டு 400 ஆயிரம் டாலர் திரட்டினார்கள், அத்துடன் சேலம் திரிவேணி குழுமத்தின் சார்பில் அதன் செயல் இயக்குனர் கார்த்திகேயன் அளித்த 100 ஆயிரம் டாலர் நிதியைச் சேர்த்து, இந்தத் தொகை வழங்கப்பட்டது.

புரவலர் பால்பாண்டியனின் வழிகாட்டுதலில் பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு, தன்னார்வலர்கள் அணிகளாக இதற்கெனப் பணியாற்றினர். வார இறுதியில் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து நண்பர்களிடம் எடுத்துக் கூறி நன்கொடை வசூலித்தார்கள். ஒவ்வோர் அமைப்பும் தம்மோடு தொடர்புடையோரிடம் எடுத்துக் கூறினர். தமிழ் உணவகங்களில் விருந்து கொடுத்து நிதி திரட்டினார்கள். உள்ளூர் கூடைப்பந்துப் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பரிசாகக் கொண்ட குலுக்கல் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. நன்கொடையாக வந்த ஓவியங்கள், பழம்பொருட்கள் உள்ளிட்டவை அமைதிமுறை ஏலத்தில் விடப்பட்ட தொகையும் உடன் சேர்ந்தது. நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அரங்கத்தில் தமிழ் உணவகங்கள் வழங்கிய உணவு விற்பனை மூலம் கிடைத்த பணமும் சேர்ந்தது.

முன்னதாக டிசம்பர் 16ம் தேதி அதே அரங்கத்தில் நடைபெற்ற நன்கொடையாளர் விருந்து நிகழ்ச்சியில், திரிவேணி குழுமத்தின் செயல் இயக்குனர் கார்த்திகேயன், நிறுவனத்தின் சார்பாக 1 லட்சம் டாலரை டெக்சஸ் மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கிப் பேசினார். இந்தோனேஷியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன்னைத் தமிழர் என்று அடையாளம் கண்டு அழைத்துப் பேசியதை பெருமையுடன் கார்த்திகேயன் நினைவு கூர்ந்தார். தமிழுக்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் திரிவேணி குழுமம் ஆற்றிவரும் அறப்பணிகளை விவரித்தார். கிம்பெர்லி & க்ளார்க் நிறுவனத்தில் சி.ஐ.ஓ.வாக பணிபுரியும் சுஜா சந்திரசேகரன், பேராசிரியர் பேச்சுமுத்து, 'பசுமைப்போராளி' ரேவதி, டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். புரவலர் பால்பாண்டியன் வரவேற்றுப் பேசினார்.

டிசம்பர் 17, சனிக்கிழமை மதியம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பல்திறன் போட்டிகள் நடைபெற்றன. நன்றியுரையில் ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் பெரியவர்களானதும், தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன செய்யப்போகிறோம் என்று விவரித்தது, நெகிழ்ச்சியாக இருந்தது. இரவில் பிரபுசங்கரின் ஹை ஆக்டேவ்ஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சூப்பர் சிங்கர் ஜெஸ்ஸிகா பங்கேற்றுப் பாடினார்.

அமெரிக்காவின் ஏனைய ஊர்களில் நிதியளிப்பு நிகழ்ச்சிகளை நடத்த அங்குள்ள தமிழ் அமைப்புகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். டாலஸ் நிதியளிப்பு மூலம் கூடுதல் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நன்கொடைகள் 2 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இன்னும் 4 மில்லியன் தேவைப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு: www.harvardtamilchair.com

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com