அருட்செல்வப்பேரரசன்
அந்தச் சிறுவனுக்கு தினந்தோறும் அம்மாவிடம் ராமாயணம், மஹாபாரதம் கதைகளைக் கேட்கப் பிடிக்கும். தமிழாசிரியரான தந்தை, பகுத்தறிவுவாதி. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. "இந்தப் பிற்போக்குச் சமாசாரங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லாதே!" என்று கண்டிப்பார். அதைக் கேட்டுத் தாயார் கதை சொல்வதை நிறுத்தவும் இல்லை. தந்தை தன் கண்டிப்பைத் தொடரத் தவறவுமில்லை. இப்படிச் சிறுவயது முதலே இராமயண, மஹாபாரதக் கதைகளைக் கேட்டு, தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து, பகுத்தறிவுச் சூழலில் வளர்ந்த சிறுவன்தான், வளர்ந்து இளைஞனாகி, இன்றைக்கு மஹாபாரதத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தினந்தோறும் மொழிபெயர்த்து வெளியிட்டு வரும் செ. அருட்செல்வப்பேரரசன். பல்கலைக்கழகங்களும், மாபெரும் வல்லுநர் குழுக்களும் இணைந்து செய்யவேண்டிய ஒன்றைத் தனியொருவராகச் செய்துவருகிறார் இவர்.

இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டுந்தான் இம்முயற்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைக்கு மஹாபாரதத்தின் மீது பத்திரிகைகள் மற்றும் இணையத்தின் கவனம் திரும்பியிருப்பதற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம். ஆதிபர்வம் 236 பகுதி, சபாபர்வம் 80 பகுதி, வனபர்வம் 313 பகுதி, விராடபர்வம் 72 பகுதி, உத்யோகபர்வம் 199 பகுதி, பீஷ்மபர்வம் 124 பகுதி, துரோண பர்வம் 204 பகுதி ஆக மொத்தம் 1128 பகுதிகளை இதுவரை மொழிபெயர்த்து 'முழு மஹாபாரதம்' என்ற இணையதளத்தில் வலையேற்றியிருக்கிறார் அருட்செல்வப்பேரரசன். நல்லாப் பிள்ளை பாரதம், வில்லிபுத்தூரார் பாரதம் இவற்றைத் தொடர்ந்து ம.வீ. இராமானுஜாச்சாரியார், திருக்கள்ளம் நரசிம்ஹ ராகவாச்சாரியார்-புரிசை கிருஷ்ணமாச்சாரியார் மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் வெளிவரும் முழுமையான மொழிபெயர்ப்பு இவருடையதுதான்.

தனக்கு ஏன் மஹாபாரதத்தின் மீது ஆர்வம் வந்தது, மொழிபெயர்ப்பு ஆர்வம் வந்தது எப்படி என்றெல்லாம் பல விஷயங்களைத் நம்மோடு இங்கே பகிர்ந்து கொள்கிறார் அருட்செல்வப்பேரரசன்.

எல்லா இளைஞர்களது வாழ்க்கையைப் போலத்தான் அருட்செல்வனின் வாழ்வும் அமைந்தது. தந்தை பகுத்தறிவுவாதி என்பதால் வீட்டில் பகுத்தறிவுச்சூழல். நண்பர்களும் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள். இதிகாச, புராணங்களைக் கேலியாகவும், பிற்போக்காகவும் பார்க்கக் கூடியவர்கள். ஆனால் இதெல்லாம் அருட்செல்வனை மாற்றி விடவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வி பகுத்தறிவிற்கு மட்டுமல்ல; ஆன்மீகத்திற்கும் முக்கியமானதுதான் இல்லையா?

தூர்தர்ஷனில் பி.ஆர். சோப்ராவின் இயக்கத்தில் வெளியான மஹாபாரதம் தொடர், அருட்செல்வனுக்கு ஆர்வம் ஏற்பட அடிப்படைக் காரணமானது. மொழிபுரியாவிட்டாலும், கதையை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. தொடர்ந்து ராஜாஜியின் 'வியாசர் விருந்து', துக்ளக் இதழில் 'சோ' எழுதி வெளியான 'மஹாபாரதம் பேசுகிறது' தொடர் ஆகியவை முதல் வாசலைத் திறந்துவிட்டன. மஹாபாரதத்தை முழுமையாகப் படிக்கும் ஆவலை அவை தூண்ட, கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் எழுதிய முழுமையான மஹாபாரதம் படிக்கக் கிடைத்தது. "அதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம்" என்கிறார் அருட்செல்வன்.



மஹாபாரதத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் வந்ததைப் பற்றிச் சொல்லும்போது, "மஹாபாரதம் பற்றி என் நண்பர்கள் சொல்லும் சில கிண்டலான செய்திகளுக்கும், மஹாபாரதத்தில் உள்ளதற்கும் முரண்பாடு இருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் என்னால் உணர முடிந்தது. அவர்களோடு வாதிட ஆரம்பித்தேன், காலம் ஆக ஆக வாதம் முற்றி, இறுதியாக கங்குலி எழுதிய மஹாபாரதத்தின் குறிப்பிட்ட பக்கங்களை அச்செடுத்து என் நண்பர்களுக்குக் கொடுத்து விவாதித்தேன். அவர்களில் பெரும்பாலானோர் 'இந்த ஆங்கிலம் எங்களுக்குப் புரியவில்லை' என்றனர். அவர்களுக்காக ஒருசில பக்கங்களை மொழிபெயர்த்து, அச்செடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். சிலர் ஏற்றுக்கொண்டனர், பலர் சந்தேகம் எழுப்பினர். ஆதிபர்வத்தின் முதல் மூன்று பகுதிகளில் முழு மஹாபாரதத்தின் சுருக்கம் முழுமையாக இருப்பதால், நண்பர்களுடன் விவாதிக்க வசதியாக இருக்குமென்று நினைத்து அந்தப் பகுதிகளை மட்டும் மொழிபெயர்த்து, வலையேற்றினேன்.

"இணையத்தில் சிலர் அதை வாசிப்பதை அறிந்து, வாரத்திற்கு ஒரு பகுதியாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அப்படி ஆரம்பித்ததுதான் இப்போது தினம் ஒரு பகுதி என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது" என்கிறார்.

மொழிபெயர்க்கும்போது எதிர்கொண்ட சிக்கல்களைப் பற்றிக் கூறும்போது, "ஒரு சில கடினமான ஆங்கில வார்த்தைகளுக்கும், சில சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கும் பொருள் கொள்வதில் சற்றுச் சிரமம் ஏற்பட்டதுண்டு. அரைப்பக்க நீளங்கொண்ட ஒரே வாக்கியம் என்று கங்குலியின் பதிப்பில் பல வாக்கியங்கள் அடிக்கடி வருகின்றன. அவற்றை மொழிபெயர்க்கையில் அதிகநேரம் பிடிக்கும். கங்குலியை நான் என்றே உணரும் அளவுக்கு, அவரது மொழிநடையோடு நான் ஒன்றிப் போய்விட்டேன். மொழிபெயர்க்கும்போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தமிழில் கும்பகோணம் பதிப்பு, ஆங்கிலத்தில் மன்மதநாததத்தரின் பதிப்பு ஆகியவற்றை வரிக்கு வரி ஒப்புநோக்கியே மொழிபெயர்த்து வருகிறேன். தேவையேற்பட்டால் மட்டும் வில்லிபாரதத்தையும் ஒப்புநோக்குவேன்.

நான் பாமரன்தான். என்னைவிடவும் பாமரர்கள் இலவசமாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மொழிபெயர்ப்பு" என்கிறார்.

மஹாபாரதத்தில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பீஷ்மர்தான் என்று கூறும் அருட்செல்வன், மஹாபாரதத்தின் மைய இழை என்கிறார். விதுரர், அர்ஜுனன், கிருஷ்ணன், துச்சாசதனன் போன்றோரும் தன்னைக் கவர்ந்ததாகக் கூறுகிறார்.

"இன்றுள்ள திரைக்கதை உத்திகளுக்கு இணையாகச் சம்பவங்களைச் சொல்லியிருப்பது; அன்று சொல்லப்பட்டுள்ள நீதிகள் பல இன்றும் பொருந்திவருவது; புவியியல் துல்லியம்; இடைச்செருகலாகவும், பிற்சேர்கைகளாகவும் சொல்லப்படும் சில பகுதிகளும்கூட மூலத்திற்கு சற்றும் குறையாத அழகுடன், சொல்லப்போனால் அதைவிடச் செழிப்பாக இருப்பது {உதாரணம் வனபர்வத்தின் பெரும்பகுதி, பகவத்கீதை, தர்மவியாதர் கதை, அஷ்டவக்கிரன் கதை போன்றவை); இயற்கை வர்ணனை; ஆயுத மோதல்களைக் குறித்த வர்ணனை; வியூகங்களின் வர்ணனை என மஹாபாரதத்தில் என்னை ஆச்சரியப்படுத்தியவை, இன்னும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருப்பவை ஏராளம், ஏராளம்" என்கிறார் கண்கள் விரிய.

மஹாபாரதம் தனக்குள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைப் பற்றிக் கூறும்போது, "அடிப்படை எண்ண ஓட்டத்திலும், ஒவ்வொரு பிரச்சனையை அணுகுவதிலும் இக்காப்பியம் எனக்குள் பல பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் சிறுவனாக இருந்தபோது நான் விவாதிக்கவே மாட்டேன்; விவாதத் திறனை எனக்கு அளித்தது மஹாபாரதமே. ஒரு சம்பவத்தைப் பல நோக்கில், பலரின் கண்ணோட்டத்தில் காண எனக்குச் சொல்லிக் கொடுத்ததும் மஹாபாரதமே. நான் காணும் சம்பவங்களின் நன்மை, தீமைகளை அனுமானிப்பதிலும் அது எனக்குப் பேருதவி செய்கிறது என்பது என் எண்ணம். இப்படி ஒரு தீங்கும் இல்லாமல், பலப்பல நன்மைகளை மட்டுமே மஹாபாரதத்தால் நான் அடைந்திருக்கிறேன். மஹாபாரதம் நல்ல மாற்றத்தையே ஒருவனுக்குள் நிச்சயம் ஏற்படுத்தும். எனக்குள் நடந்த மாற்றங்களைப் பட்டியலிட்டால் நான் ஒரு புத்தகமே எழுத வேண்டியிருக்கும்" என்கிறார்.

பன்னிரண்டு ஆண்டுகளாக வரைகலைத் தொழில் செய்துவரும் அருட்செல்வன், மொழிபெயர்த்து, தட்டச்சி, அதை வலைத்தளத்தில் பதிவதைத் தனியொருவராகவே செய்துவருகிறார். "காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை என்னால் மொழிபெயர்க்கவே முடியாதபடி என் வரைகலை வேலை இருக்கும். மஹாபாரதத்தை மொழிபெயர்க்கும் நேரம் இரவு 11.00 மணிமுதல் 2.30 மணிவரை! இதையே கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து செய்து வருகிறேன்" என்கிறார்.

எந்தவிதமான பெரிய பின்புலமும், ஊக்குவிப்பும் இல்லாமல் ஒரு தவம்போல் இவர் இதைச் செய்துவருவது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

"தொடக்கத்தில் குடும்பத்தினரும் சரி, தொழில் நண்பர்களும் சரி, பால்ய நண்பர்களும் சரி, அனைவருமே 'இது உனக்கு வேண்டாத வேலை. இதனால் உன் தொழிலைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாய்' என்றே கடிந்துகொண்டனர். பிறகு மெல்ல மெல்ல எனக்கு வரும் மின்னஞ்சல்களையும், தொலைபேசி அழைப்புகளையும், நேரில் வந்து வாழ்த்தும் நண்பர்களையும் கண்டு அவர்களும் உற்சாகமாகிவிட்டனர். இப்போதெல்லாம் நானே சற்று சுணங்கினாலும் கூட, மனைவி, சகோதரர்கள், நண்பர்கள் உற்சாகம் தருகின்றனர். என்னை ஊக்குவிப்பவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் நண்பர் ஜெயவேலன். மஹாபாரதத்தை முழுமையாக மொழிபெயர்க்கத் தோன்றியதே அவரால்தான். ஆதிபர்வத்தில் 100 பகுதிகளுக்கு மேல் மொழிபெயர்த்த பின்னர், கும்பகோணம் பதிப்பு என்று தமிழில் முழு மஹாபாரதம் ஏற்கனவே இருப்பதை அறிந்து, மேற்கொண்டு மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட நினைத்தேன். அப்போதும் என்னை நிறுத்தவிடாமல் தொடரச் செய்தவர் நண்பர் ஜெயவேல்தான்" என்கிறார் நெகிழ்ச்சியுடனும், நன்றியுடனும்.

இவருடைய தளத்தில் இதுவரை வந்தவை ஒலிக்கோப்பாகவும் கிடைக்கின்றன. வாசிக்க முடியாதவர்கள் கேட்கலாம். "திருமதி. தேவகி ஜெயவேலன் மொழிபெயர்ப்புப் பகுதிகளை ஒலிக்கோப்பாகவும், காணொளிக் கோப்பாகவும் மாற்றி வெளியிட உதவுகிறார். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தன்னலமின்றி இதைச் செய்யும் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன்" என்கிறார் அருட்செல்வன்.



இவருடைய மொழிபெயர்ப்பு இன்னமும் புத்தகமாக வெளிவரவில்லை. "இதுவரை மஹாபாரதத்தின் ஏழு புத்தகங்களை பி.டி.எஃப். பதிப்பாக இணையத்தில் கொடுத்திருக்கிறேன். இதுவரை மொழிபெயர்த்திருப்பவை கிட்டத்தட்ட 8500 பக்கங்கள் வருகின்றன. எல்லாம் முடியும்போது கிட்டத்தட்ட 15000 பக்கங்கள் வரலாம். ஆதிபர்வம் வரையாவது அச்சடிக்க வேண்டும் என்று முனைந்தேன். பிழை திருத்தங்கள் முடிந்தபின் அச்சுக்குச் செல்ல நினைத்திருக்கிறேன்" என்கிறார் இந்த பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்.

ஓவியம், கவிதை ஆகியவற்றிலும் இவருக்கு ஆர்வமுண்டு; வரலாற்றுப் புத்தகங்கள், வரலாற்றுப் புதினங்களை, தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும் விரும்பி வாசிக்கிறார். வெண்முரசு புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் பாராட்டப்பட்டதைப் பெருமையாகக் கருதுகிறார். "நாள்தோறும் எழுதிக்கொண்டே இருப்பவர் என்றால் அனேகமாக ஜெயமோகன் ஒருவர்தான் என நினைக்கிறேன். அவரது பாராட்டினால்தான் என் மொழிபெயர்ப்பு பலரால் கவனிக்கப்பட்டது. இலக்கிய சபையில் கிடைத்த அங்கீகாரம் அது" என்கிறார் உணர்ச்சிப் பெருக்குடன்.

எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசுகையில் "முழு மஹாபாரதத்தையும் நிறைவு செய்யவேண்டும். ஏழு பர்வங்களை நிறைவு செய்ய நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எஞ்சிய 887 பகுதிகளை மொழிபெயர்க்க இன்னும் மூன்று ஆண்டுகளாவது பிடிக்கும் என்று நினைக்கிறேன். அதன்பிறகுதான் வேறு எதையும் சிந்திக்க வேண்டும்" என்கிறார்.

"இலக்கிய சபையில் கிடைத்த அங்கீகாரம், ஆன்மீக சபையிலும் கிட்டவேண்டும் என்று விரும்புகிறேன். தமிழறிந்தோர் அனைவருக்கும் முழு மஹாபாரதமும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் தொடங்கப்பட்ட இப்பணியின் நோக்கம், ஆன்மீகச் செல்வர்களின் அங்கீகாரத்தாலேயே நிறைவை எட்டமுடியும்" என்று கூறுகிறார் அருட்செல்வப்பேரரசன்.

பெயரிலேயே அருட்செல்வத்தைப் பேரரசாகக் கொண்டிருக்கும் இவரது எளிய ஆவலை நிச்சயம் ஆன்மீக ஆர்வலர்கள் இனங்கண்டு அங்கீகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொகுப்பு: அரவிந்த்

*****


அருட்செல்வப்பேரரசனின் அருஞ்செல்வங்கள்

மஹாபாரதம் முழுவதையும் தரவிறக்கிக் கொள்ள
மஹாபாரதச் சிறுகதைகள்
சினிமா/டி.வி. குறித்த கருத்துக்கள்
அரசன் பல்சுவை எண்ணங்கள்
கிராஃபிக்ஸ், தொழில்நுட்பம்
முகநூல் பக்கம்

© TamilOnline.com