தென்றல் பேசுகிறது....
டிரம்ப் இந்த மாதம் அதிபர் பதவி ஏற்கிறார். தேசத்தை ஒரு வணிகநிறுவனம் போல நடத்த அவர் திட்டமிடுவது, அவர் யார் யாரைத் தனது அமைச்சரவையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கிறார் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. முன்பில்லாதபடி, பிரச்சனைகளையும் கருத்துக்களையும் அவர் பொதுவில் ட்வீட் செய்து, அதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களைத் தன்னோடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதையும் பார்க்கமுடிகிறது. தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவும், மக்களைச் சேமிக்கக் கூறவும், பணியிடங்களை வரிச்சலுகை மூலம் பாதுகாக்கும் அரசின் எண்ணத்தைக் கூறவும் இந்த வழியை அவர் கையாள்வதைப் பார்க்கமுடிகிறது. டிரம்ப்பின் செயல்பாடுகள் நன்மை தருவனவாக அமையட்டும் என்று நாம் வாழ்த்துகிறோம். அதில்தான் நாட்டின் முன்னேற்றம் இருக்கிறது.

*****


சீன யுவானின் மதிப்பு 2008ம் ஆண்டிலிருந்த நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடும் டிரம்ப்பின் முனைப்புக்கு அணை கட்டுவதற்காகச் செய்யப்படுவதாக இது இருக்கலாம். மலிவான பொருட்களைக் கொட்டிச் சந்தையை நிரப்புவது சீனாவின் வழக்கமாகிவிட்டது. இதே சமயத்தில் கச்சா எண்ணெயின் விலை மளமளவென்று ஏறுகிறது. சற்றே பின்னோக்கிப் பார்த்தால் 2007-08 ஆண்டுகளில் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதாரச் சரிவிலும் இதே இரண்டு காரணிகள் முக்கியப் பங்கு வகித்தது தெரியவரும். இப்போதே பொதுமக்கள் செலவைச் சுருக்கிக்கொண்டு, மிகக் கவனமாக இருப்பதை நோக்கமுடிகிறது. யுவான் மதிப்புக்குறைப்பு சீனாவின் ஒரு மிரட்டல் என்ற அளவோடு நிற்கட்டும், டாலர் பொருளாதாரம் தனது முன்னோடி நிலையைத் தக்க வைத்துக்கொள்ளட்டும் என்பதே நம் அவா.

*****


டிசம்பர் 2016 தமிழகத்துக்கு ஓர் அதிர்ச்சி மாதம். முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவு, அடுத்து வந்த 'சோ' உட்பட்ட மரணங்கள், 140 கி.மீ வேகத்தில் சென்னையில் சுழன்றடித்து "திமுதிமெனக் காடெல்லாம் விறகு" ஆக்கிவிட்ட வார்தா புயல் என்று மக்கள் ஏதோவொரு இனம்புரியாத அழுத்தத்தில் தொடர்ந்து இருந்தனர். புதிய முதலமைச்சர், அ.இ.அ.தி.மு.க.வுக்குப் புதிய பொதுச்செயலாளர் என்று தமிழகம் மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்துகொண்டிருக்கிறது. புத்தாண்டில் நல்ல செய்திகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறது.

*****


மகாபாரதம் உலகின் இணையற்ற பரப்புடைய காவியம். அதைத் தனியொரு நபராக தமிழில் கொடுத்துவரும் அருட்செல்வப்பேரரசனின் முயற்சி மலைக்கவைப்பது. அதேபோல, கூப்பர்ட்டினோ மேயராகப் பதவியேற்றிருக்கிறார் முதல் அமெரிக்க-இந்தியப் பெண்ணான சவிதா வைத்யநாதன். தமிழ்ப்புலத்தின் முக்கியச் செய்திகளைத் தாங்கி உங்களைப் புத்தாண்டில் மகிழ்ச்சியோடு வந்தடைகிறது தென்றல்.

வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, பொங்கல் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜனவரி 2017

© TamilOnline.com