டெக்சஸ்-ஆலன்: இளந்தளிர் விழா
அக்டோபர் 22 , 2016 அன்று டெக்சஸ் மாநிலம் ஆலன் நகரிலுள்ள Allen Civic Auditorium அரங்கில், தமிழ் மலரும் மையம் சார்பில் இரண்டாம் ஆண்டாக இளந்தளிர்களின் குதூகல விழா நடந்தேறியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. திரு. ஜெய் நடேசன் மற்றும் திருமதி. சங்கீதா கார்த்திக் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். சுமார் 90க்கும் மேற்பட்ட பிள்ளைகள் முத்தமிழ் விருந்தை அளித்தனர்.

பாரதியாரின் பாடல்களைக் குழந்தைகள் அருமையாகப் பாடினர். "மக்கள் பூலோகத்திலே எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிடுறாங்க, மேலோகத்திலே நரகமே வேண்டாம்" என்பதை எமனுக்குப் புரிய வைக்க, சென்னையில் எமனுக்கே தண்ணி காட்டும் 'எமன் படும் பாடு' என்ற நாடகம் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தது. கவிஞர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது பாடல்களுக்குப் பிள்ளைகள் நடனமாடினர். தமிழகத்தில் நலிவடைந்து வரும் தெருக்கூத்துக் கலையை டாலஸ் நகரப் பிள்ளைகள் தத்ரூபமாக வழங்கினர்.

"தமிழ்ப்பசங்க", "எங்க மக்கா" திரைப்பாடல்களுக்கு அருமையாக நடனம் ஆடினர். பிள்ளைகள் இரு அணிகளாகப் பிரிந்து, பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைச் சிறப்பாக வழங்கினார்கள். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள், நமது ஊர் அரசியல்வாதி போலத் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை 'நம்ம ஊரு எலெக்‌ஷன்' என்ற நகைச்சுவை நாடகமாக வழங்கினார்கள். விவாத மேடையில், 'இன்றைய ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு யார் காரணம்' என்ற தலைப்பில் நேர்த்தியாகப் பேசினர். முத்தாய்ப்பாக, தேசபக்தி மற்றும் ஒற்றுமையைச் சித்தரிக்கும் "இந்திய நாடு என் வீடு", "வந்தேமாதரம்" பாடல்களுக்கு தீபத்துடன் பிள்ளைகள் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.

திருமதி. கீதா மற்றும் திருமதி. ஆர்த்தி நன்றியுரையை வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்துப் பிள்ளைகளுக்கும், ஃப்ரிஸ்கோ எட் குருக்கள் மற்றும் திருமதி. சித்ரா சரவணன் குடும்பத்தினர் சார்பில் பரிசுக் கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை பாலதத்தா தமிழ்ப் பள்ளியின் கீதா சுரேஷ், ஷைலா நாராயணன், ஆர்த்தி ராமமூர்த்தி, சங்கீதா கார்த்திக், சூர்யா சுகவனம், பவானி சுப்ரமணி, பிருந்தா கார்த்திக், ப்ரியா கோபிகண்ணன், கார்த்திக் அயோத்திராமானுஜன், விஜி ஜெயராமன் மற்றும் ஜெய் நடேசன் தொகுத்து வழங்கினார்கள்.

ஜெய் நடேசன்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com