அரங்கேற்றம்: ஸ்ரீதேவி ஜெயராமன்
அக்டோபர் 23, 2016 அன்று மைத்ரி நாட்யாலயா மாணவி ஸ்ரீதேவி ஜெயராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம், லாஸ் ஆல்டோஸ் ஃபுட்ஹில்ஸ் கல்லூரியின் ஸ்மித்விக் கலையரங்கில் குரு திருமதி. ஷிர்ணிகாந்த் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஸ்ரீதேவியின் மகன் அமிதேஷ்குமார் (குரு கீதா ஐயர், கீதா வித்யாலயா, ஃப்ரீமான்ட்) தியாகராஜரின் 'ஸ்ரீ கணபதினி' பாட்டுடன் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியை கம்பீரநாட்டை ராக புஷ்பாஞ்சலியில் ஸ்ரீதேவி ஆரம்பித்தார். இதையடுத்து ஊத்துக்காடு வேங்கடகவியின் 'ஸ்ரீவிக்னராஜம் பஜே' என்னும் பாட்டிற்கு ஆடினார். 'கபாலி நீ தயாநிதி' என்ற பாட்டிற்குப் பிறகு, திரு.மதுரை முரளிதரன் இயற்றிய "மாயே" வர்ணத்தில், பார்வையாளர்களுக்கு மதுரை மீனாட்சியையே கண்முன்னே கொண்டு வந்து காட்டினார். இடைவேளைக்குப் பிறகு ஸ்வாதித் திருநாளின் "பாவயாமி ரகுராமம்" மற்றும் புரந்தரதாஸரின் "ஜெகதோதாரணா" பாட்டிற்கும் ஸ்ரீதேவியின் கதை சொல்லும் திறமையும் தாயின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்தன. நிகழ்ச்சி பூர்வி தில்லானா மற்றும் மங்களத்துடன் நிறைவுற்றது.

ராஜேஷ்குமார்,
மில்பிடாஸ் கலிஃபோர்னியா

© TamilOnline.com