டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ்: தீபாவளிக் கொண்டாட்டம்
அக்டோபர் 23, 2016 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் ஃப்ளவர்மவுண்ட் நகரிலுள்ள சர்க்கிள் ராஞ்ச் வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடியது. இதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குழந்தைகள் குதித்து விளையாட பவுன்சிங் ஹவுஸ், மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், முகப்பூச்சு அலங்காரம் என மதியம்முதல் விழா களைகட்ட ஆரம்பித்தது. சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளுடன் மாலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்குச் சாக்கு ஓட்டம், எலுமிச்சைக் கரண்டி, டயர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பெரியவர்கள் பம்பரம் விட்டார்கள். கயிறிழுத்தல் போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்கள் கூட்டங்கூட்டமாக மத்தாப்பு புஸ்வாணம் கொளுத்தினார்கள். இறுதியாக சூப்பர் சிங்கர் அர்ஜுன் அடப்பள்ளி பங்கேற்பில் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. உடன் உள்ளூர்ப் பாடகர்கள் கலந்துகொண்டனர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக்கான அவசியம் குறித்து தமிழ்ச்சங்கத் தலைவர் கால்டுவெல் விவரித்து, அதற்குத் தாராளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com