சிகாகோ: குழந்தைகள் தினவிழா
நவம்பர் 12, 2016 அன்று சிகாகோ தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது. ஆடல், பாடல், நாடகம் என்று குதூகலமாக விழா நடந்தேறியது. கிட்டத்தட்ட 200 குழந்தைகள் பங்கேற்றனர்.

திரைப்பட நடனம், பாடல்கள், பறையாட்டம், நடன நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றன. இறுதியாக 27 குழந்தைகள் பங்கேற்ற "வந்தே மாதரம்" நடனம் அரங்கிலிருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்துல் கலாம், முத்துலட்சுமி ரெட்டி, கொங்குமொழி பேசும் தமிழ்ப்பெண் எனக் குழந்தைகளின் மாறுவேடப் போட்டி கைதட்டல் பெற்றது. 'திரைகடல் ஓடியும் தமிழ் வளர்ப்போம்', 'கலையின் விலை' என்ற இரு நாடகங்கள் சிந்திக்கவும் வைத்தன. திரு. முத்து வேலு ஒருங்கிணைத்த 'ஒரு வார்த்தை ஒரு இலட்சியம்' மற்றும் 'மொழிபெயர்த்தல்' போட்டிகள் விறுவிறுப்பாக இருந்தன.

இறுதியாக திரு ரவிசங்கர் அவர்கள் குழுவின் இசையில், தமிழ்க் குழந்தைகள் பாடிய மெல்லிசைப் பாடல்களுடன் நிகழ்ச்சி நிறைவேறியது.

குழந்தைகளே பெரும்பங்கிற்கு விழாவை ஒருங்கிணைத்து நடத்தி தந்தனர். திருமதி. அருள் பாலு, திரு. மணி குணசேகரன், திருமதி. ஜெயஸ்ரீ ரமேஷ் ஆகிய விழாக்குழுவினரின் உழைப்பு அரங்கத்தில் வெளிப்பட்டது.

ராஜேஷ் சுந்தர்ராஜன்,
சிகாகோ

© TamilOnline.com