சந்திப்பு: பா.சு. ரமணன் தொகுப்பு: மதுரபாரதி
கழுத்துக்குக் கீழே நரம்பு மண்டலம் செயலிழந்து விட்ட நிலை. நம்முடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே உடல் மெல்ல மெல்லத் தொய்கிறது. நண்பர் அவரை நிமிர்த்தி உட்கார வைக்கிறார். செல்பேசியில் அழைப்பு வைந்தால் அதையும் நண்பரே அவரது செவிக்கு அருகில் வைத்துக் கொள்ள இவர் பேசுகிறார். இந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான பேரை நிமிர்ந்து நிற்கவும், சுயச்சார்பு கொள்ளவும், தன்னம்பிக்கையோடு வாழவும் வைக்கிறார் இந்த மனிதர். அவர்தான் ஆயிக்குடி ராமகிருஷ்ணன். அவரது உழைப்புக்குச் சாட்சியாக 'அமர்சேவா சங்கம்' ஆலமரமாகக் கிளைபரப்பி நிழல்தந்து நிற்கிறது. ஊனமுற்ற சகோதரர்களின் நலன் பேணும் அவரது அமைப்புக்கு, 1994-ல் பாட்டியா விருது, 2002-ல் தேசிய விருது, 2004-ல் தமிழக அரசின் விருது, 2005-ல் ஹெலன் கெல்லர் விருது எனப் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 54 வயதாகும் ஆயிக்குடி ராமகிருஷ்ணன் சென்னைக்கு வந்திருந்தபோது சந்தித்தோம். அவருடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்...
கே: இந்த விபத்து எப்படி ஏற்பட்டது?
ப: கோவையில் பட்டப் படிப்புக்காகக் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் நான்காமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். கப்பற் படை அதிகாரிகள் தேர்வுக் கான நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மூன்று நாள் அனைத்தும் நல்ல முறையிலேயே நடந்து வந்தது. நான்காம் நாள் நேர்காணல். அதில் ஒரு பயிற்சி, Individual Task. மூன்று நிமிடத்துக்குள் மரத்தின் மீது இருந்து மேடையில் குதித்து, பின்னர் கீழே தரையில் குதிக்க வேண்டும். அவ்வாறு நான் குதிக்கும் போது தவறி விட்டது. மேடையில் விழுந்து, கீழே விழுந்து விட்டேன். முதுகுத் தண்டில் பலத்த அடி. உடனே அனைவரும் தூக்கி என்னை ஆசுவாசப்படுத்தினர். எனக்கு நினைவு தப்பி விட்டால் டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றேன். நினைவு தப்பவில்லை. ஆனால் வேறு மாதிரியான உணர்ச்சி ஏற்பட்டது. என் உடலில் கைகளே இல்லாதது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் விழுந்த இடத்தில் கை எங்கேயாவது கீழே கிடக்கிறதா பாருங்கள் என்று நண்பர்களிடம் அரற்றிக் கொண்டிருந்தேன். பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர் தான் தெரியவந்தது, முதுகுத் தண்டுப் பகுதி முற்றிலுமாகச் செயலிழந்து விட்டது என்பது. சோர்ந்து போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பூனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். நியூரோ சர்ஜன் வந்து சிகிச்சை அளித்தார். பின்னர் டாக்டர் அமர்சிங் எனக்கான சிறப்பு சிகிச்சைகளைத் தொடங்கினார். டிராக்ஷன், pully முறையில் சில சிகிச்சைகளைச் செய்தனர். சக நோயாளிகளும் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். மருத்துவர்களும் என்னைச் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள். அடிக்கடி தைரியம் கூறி வந்தார்கள். இவ்வாறு சில மாதச் சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
கே: விபத்துக்குப் பிறகு எப்படி உணர்ந்தீர்கள்?
ப: ஆரம்பத்தில் எனக்கு நிறையக் கோபம் வந்தது. வீட்டில் பெற்றோரிடமும், சகோதர சகோதரிகளிடமும் அடிக்கடி கோபித்துக் கொண்டேன். காபி கொடுக்கத் தாமதமானால் கோபித்துக் கொண்டு அதைக் குடிக்காமலே இருப்பேன். அந்தக் கோபம் இன்று எனக்கு மிகுந்த நன்மையைச் செய்திருக்கிறது. அடிக்கடி சாப்பிடாமல் இருப்பேன். மிகவும் பிடிவாத குணம் கொண்டவனாக இருந்தேன். ஆனாலும் தனிமை என்னைச் சிந்திக்க வைத்தது. எனது தவறுகளை எனக்குச் சுட்டிக் காட்டியது. பின்னர் என்னை படிப்படியாக மாற்றிக் கொண்டேன். இதே விபத்து வேறு சூழ்நிலையில், வேறு விதத்தில் ஏற்பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். எனக்கான மருத்துவச் செலவுகள் அனைத்தையுமே அரசாங்கம் தான் பார்த்துக் கொண்டது. ஆகவே இதுவும் நல்லதாகவே அமைந்தது.
கே: 'அமர் சேவா சங்கம்' ஆரம்பிக்கத் தூண்டுகோலாய் இருந்தது என்ன?
ப: எனது தந்தையார் மிகுந்த பரோபகாரி. அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். நான் இளைஞனாக இருந்த போது அவருடன் இணைந்து பணியாற்றச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, அவரது கருணை, பழகும் விதம், எளியவர்களிடம் காட்டும் அன்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை என அனைத்தும் என்னைக் கவரும். இந்த நிகழ்வுகள் பிற்காலத்தில் நாங்கள் சங்கம் ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தது.
எனக்கு விபத்து நடந்து, சிகிச்சைக்குப்பின் 1976ம் வருடம், செப்டம்பர் மாதம் சொந்த ஊரான ஆயிக்குடிக்கு வந்த சேர்ந்தேன். அப்போது தான் கிராமத்தில் பலரும் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்ததை கவனித்தேன். சில குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்கக் கூட முடியாமல் இருந்தனர். அவர்கள் படும் துயரம் வேறு என் மனதிற்கு மிகவும் கவலையளித்தது.
2, 3 மாதங்கள் இப்படியே கழிந்தன. ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். வேண்டாத சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டும், இதற்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை தோன்றிற்று. இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து ஒரு பெரியவர் வந்தார். பத்து ரூபாய் கொடுத்து, பேஸ்ட், பிரஷ் வாங்கிக் கொள் என்று கூறிக் கொடுத்தார். சிறுவயதிலிருந்தே எனக்கு யார், எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளும் பழக்கம் கிடையாது. ஆனாலும் அவர் கொடுத்ததை மறுக்க முடியாமல் வாங்கிக் கொள்ள நேரிட்டது. நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த சமயத்தில், எனக்கு சக்கர நாற்காலி, படுக்கை போன்றவை வழங்குவதற்காக அங்குள்ள மருத்துவர் ஒரு சான்றிதழ் கேட்டார். அதை எனக்காக நண்பர் ஒருவர் அளித்தார். இருந்தாலும் எனக்கு அதில் ஒரு மன வேதனை ஏற்பட்டது. பிறரிடம் யாசகம் வாங்கும் நிலை ஆகி விட்டதே என்று மன வேதனைப்பட்டேன்.
அப்போது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் பிரபாகர் இதில் வருத்தப்பட ஏதும் இல்லை என்றும், அரசாங்கத்தின் நடைமுறைகளில் இதுவும் ஒன்று என்றும் கூறி என்னைத் தேற்றினார். இதற்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந் தால் கடைசியில் எந்த வேலையுமே செய்ய முடியாமல் போய் விடும் என்று அறிவுரை கூறினார்.
பல பேரிடம் நிதி திரட்டி, அதைப் பிறரது உதவிக்காகப் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. இப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் 'அமர் சேவா சங்கம்'.
கே: அமர்சேவா சங்கம் என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டா?
ப: நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, நான் நலம் பெற உதவியவர்களுள் முக்கியமானவர் அமர்ஜித் சிங் ஷகால் என்ற மருத்துவர். இவர் ஏர் மார்ஷலாகப் பணியாற்றியவர். அவரது நினைவாக அவரது பெயரை வைத்தே 'அமர் சேவா சங்கம்' தொடங்கப் பட்டது.
கே: சங்கத்தின் ஆரம்ப காலத்தை நினைவு கூருங்களேன்...
ப: நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர், ஊர்மக்கள் அனைவரது ஆலோசனை யுடனும், பெரியோர்களின் ஆசியுடனும் 1981 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் அமர் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு சிறு பள்ளியாக, ஓர் ஓலைக் கொட்டகை யில் சுமார் ஐந்து மாணவர்களைக் கொண்டு செயல்பட்டது. பின்னர் அன்பர்களின் வள்ளன்மையால் வளர்ச்சியடைந்து இந்த அளவிற்கு வந்திருக்கிறது.
கே: சங்கத்தின் ஆரம்ப காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவும் ஆலோசனையும் முழுமையாகக் கிடைத்ததா?
ப: இந்த விபத்தைப் பொறுத்தவரை எனது பெற்றோருக்கு என்னால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. தம்பி தங்கைகள் எல்லாம் சிறுவர்கள். பள்ளியில் படித்துக் கொண்டிருந் தனர். அவர்கள் அனைவரும் எனக்கு மிக உதவிகரமாக இருந்தனர். தங்களது பள்ளிப் படிப்பையும் பார்த்துக் கொண்டு, என்னையும் கவனித்துக் கொண்டனர். என்னைக் குளிப் பாட்டுவதிலிருந்து, உணவு தருவது வரை அனைத்துச் செயல்களுக்கும் அனைவருமே மிக்க உதவிகரமாக இருந்தார்கள்.
நான் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தலாம் என என்னை ஊக்கப்படுத்தி, உறுதுணையாக இருந்ததே என் குடும்பத் தினர் தான். பின் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட பிறகும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அதில் முடிந்த அளவு பங்கெடுத்துக் கொண்டனர். அதிலும் வயதான என் தாயார் கூடச் சமையல் செய்வது, பரிமாறுவது உட்பட பல பணிகளைச் செய்து வந்தார்.
கே: உங்களது சமூகப் பணியின் ஆரம்ப கால கட்டத்தில் சக மனிதர்கள் உங்களை எப்படிப் பார்த்தார்கள், அவர்களது அணுகுமுறை அல்லது உங்களுக்கான ஆதரவு என்பது எப்படி இருந்தது? தற்போது எப்படி இருக்கிறது?
ப: ஆரம்பகாலத்தில் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள சமூக சேவை அமைப்புகள், ரோட்டரி சங்ககங்ள், லயன்ஸ் கிளப் போன்ற அமைப்புகள் உறுதுணையாக இருந்தன. பல பத்திரிக்கை அன்பர்களின் கட்டுரையினாலும் அமர்சேவா சங்கத்தைப் பற்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
எழுத்தாளர் சிவசங்கரி 1985 ஆம் ஆண்டு, ஜனவரி 25ம் தேதியிட்ட ஆனந்த விகடனில் அட்டைப்படக் கட்டுரையாக 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற தலைப்பில் ஐந்து பக்கக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அது வெளியான சில நாட்களிலேயே பலரும் என்னுடன் தொடர்பு கொண்டனர். பிரபல இயக்குநர் ஏ. ஜெகந் நாதனின் உதவியாளரான ஜீவபாலன் என்பவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், 'இந்த விபத்து நடக்கும் பொழுது இறைவன் இளைப்பாறச் சென்றிருந்தானா?' என்று மிகவும் மனம் உருகி எழுதியிருந்தார். இது போன்று பலரும் கடிதம் எழுதியிருந்தனர். பின்னர் பாம்பே பத்திரிக்கை ஒன்றில் ராம்குமார் என்பவர் எங்கள் சங்கத்தைப் பற்றிக் கட்டுரை எழுதியிருந்தார்.
படிப்படியாக அமர் சேவா சங்கம் பற்றியும், அதன் பணிகள் பற்றியும் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.
நிதி உதவி வரத் தொடங்கியது. பழைய வீடு ஒன்று விலைக்கு வாங்கப்பட்டது. பின் சுலோசனா சீனிவாசன் என்பவர் சங்கத்தின் உறுப்பினரானார். 1988-ல் 80,000 ரூபாய் நிதி அளித்தார். பல கருணை உள்ளம் படைத் தோரின் உதவியுடனும் 1989-ல் சங்கத்துக் கென 30 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதுதான் சுலோசனா கார்டன்ஸ் என்ற பெயரில் இன்று அமர் சேவா சங்கத்தின் இருப்பிடமாக விளங்குகிறது.
ராமச்சந்திரன் என்ற பொறியாளர் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆயிக்குடியிலேயே தங்கி அழகான கட்டிடத்தை எழுப்பிக் கொடுத்தார். ஆக, 'அமர் சேவா சங்கம்' என்பது ஏதோ ஆயிக்குடி ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட முயற்சி அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி.
கே: உங்களைப் போன்றே சமூகப் பணி ஆற்றிவரும் பிறரும் உங்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள்?
ப: அருகில் இருக்கும் சமூக சேவை அமைப்புகளும் சரி, சென்னை போன்ற இடங்களில் இருக்கும் அமைப்புகளும் சரி, எங்களோடு நல்ல தொடர்பில் தான் உள்ளன. நாங்களும் அவர்களோடு பலவிதங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
மதுரையில் கிருஷ்ணன் என்பவர் 'அக்ஷயா' என்ற அமைப்பைத் தொடங்கி, அதன்மூலம் ஆதரவற்றோர், தெருவோரங்களில் வசிப்பவர் கள் எனப் பலருக்கும் சிறப்பான சேவை புரிந்து வருகிறார். மிகவும் மன நிலை பாதிக்கப்பட்டு, தங்கள் உடல் நினைவே அற்றுப் போய் பைத்தியம் போல் தெருக்களில் சுற்றித் திரிபவர்களைக் கண்டறிந்து, அவர்களை சுத்தப்படுத்தி, உணவு உடை அளித்துப் பராமரிக்கிறார். தினம் தோறும் சுமார் 135 பேர் வரைக்கும் உணவு, தண்ணீர் கொடுத்துப் பராமரிக்கிறார். உணவு உண்ணக் கூட தெரியாதவர்களுக்குத் தன் கையால் உணவை ஊட்டிவிடுகிறார்.
இப்படிப் பல பகுதிகளிலும் பலரும் சேவையாற்றிக் கொண்டு தான் வருகின்றனர். அவர்களின் மீது மீடியாவின் வெளிச்சம் விழாததால் அவர்கள் செய்யும் சமூகப் பணி கள் வெளியே தெரிவதில்லை என்பது தான் உண்மை. எங்களைப் போன்றே பணி செய்யும் மற்ற நண்பர்களின் பற்றியும் தெரிய வந்தால் அவர்களது பணிக்கும் அங்கீகாரமும், நிதியும் கிடைக்கும் என்பது என் கருத்து.
கே: சங்கத்தின் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்..
ப: ஒரு கூரைக் கொட்டகையில் 5 குழந்தை களுடன் ஆரம்பிக்கப்பட்டது அமர் சேவா சங்கம். இப்போது 60 குழந்தைகள் இருக் கின்றனர். செல்லம்மாள் என்பவள் தான் முதல் குழந்தை. அவள் இப்போது M.C.A. படிக்கிறாள். சென்னையில் சங்கர்ராமன் அறிமுகமானார். அவர் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சார்ட்டர்டு அக்கவுண்டண்டாகப் பணி புரிந்தவர். 'MuscularDystrophy' நோயினால் பாதிக்கப் பட்டவர். அவரும் ஆர்வத்துடன் எங்களோடு தன்னை இணைத்துக் கொண்டார். பின் அனைவரும் ஒன்று சேர்ந்து, திட்டங்கள் தீட்டி, அவற்றை முறையாகச் செயல்படுத்த சங்கம் வளர்ந்தது. சங்கரராமனின் வருகைக்குப் பின் எங்கள் தொடர்புகள் விரிவடைந்தன.
கே: தற்போது என்னென்ன பணிகளை அமர் சேவா சங்கத்தின் மூலம் செய்து வருகிறீர்கள்? அது பற்றிக் கூறுங்களேன்.
ப: இங்கு காலிப்பர் உற்பத்தி செய்கிறோம். அதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பிசியோதெரபி மையம் உள்ளது. பிசியோ தெரபி கருவிகளும் உள்ளன. உடல் குறை பாடு உள்ளவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வொகேஷனல் டிரெயினிங் சென்டரில் கணினி, தட்டெழுத்து, நோட்டுப் புத்தகம் தைத்தல், தையல், பூத்தையல் போன்ற பல பயிற்சிகள் தரப்படுகின்றன. 18 வயதிற்கு மேற்பட்டோர் சேரலாம். கிட்டத்தட்ட சுமார் 100 பேர் வரை இந்தப் பயிற்சியில் உள்ளனர்.
குழந்தைகளின் பெற்றோர்கள் மாதம் ஒருமுறை சங்கத்துக்கு வந்து பணிபுரிய வேண்டுமென்று வைத்திருக்கிறோம். இதன் மூலம் சங்க நடவடிக்கைகள் பற்றி முழுவதுமாக அறியப் பெற்றோர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளுக்குச் சேவை செய்த மனநிறைவும் பெற்றோர்களுக்குக் கிடைக்கும் என்பது இதில் முக்கியமான ஒன்று. மேலும், மாதத்தில் இரண்டு நாட்கள் குழந்தைகளை கண்டிப்பாக அவர்களது பெற்றோர்களுடன் சென்று தங்கியிருக்குமாறு கூறி அனுப்பி விடுகிறோம். அதனால் அந்தக் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒட்டுதல் இருக்கும்.
எங்களது வளாகத்திலேயே இந்திரா காந்தி தேசீய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் (IGNOU) விசேட பயிற்சி மையம் நடத்தப் படுகிறது. பி.ஏ., பி.காம்., எம்.சி.ஏ. போன்ற பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது. ஊனமுற்றோர் தவிர மற்றவர்களும் வந்து இங்கு படிக்க அனுமதிக்கப்படுகிறது
இது போக மருத்துவ மறுவாழ்வு மையம் ஒன்றும் செயல்படுகிறது. இதில் பல நிறுவனங்கள் இணைந்து பயிற்சிகள் தரப் படுகின்றன. மூளை பாதிப்படைந்தவர்கள், மன நோயாளிகள் போன்றோருக்கு மருத்துவ சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன.
சவால் விடப்பட்ட குழந்தைகளுக்கு என்று தனியாக பள்ளி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மான்யம் பெறுவதற்கான முயற்சியும் தற்போது உள்ளது. இது போக 'சர்வ சிக்ஷா அபியான்' மூலமும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி பணி யாளர், ஹெல்த் விசிட்டர்ஸ் போன்றோருக்கும் அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சவால் விடப்பட்ட சகோதரர் களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், பயிற்சி முகாம் களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப் படுகின்றன.
கே: உங்கள் சங்கத்தில் சேர்வதற்கான விதி முறைகள் என்ன? சங்கத்தில் சேர்ந்து பணி புரிய யாரேனும் முன் வந்தால் அவர்களுக்கான நடைமுறைகள் என்னென்ன?
ப: தற்பொழுது திருநெல்வேலி மாவட்டத்திற்குட் பட்ட குழந்தைகளை மட்டுமே எங்களது சங்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம். சேர்க்கப்படும் குழந்தைகளை நன்கு பராமரித்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, அவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து, அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்குப் பயிற்சி பெற்றதும் அவர்களைப் பெற்றோருடன் அனுப்பி வைக்கிறோம். இது தான் நாங்கள் தற்பொழுது செய்து வரும் பணி.
தன்னார்வத் தொண்டர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் சங்கத்தோடு தங்களைப் பிணைத் துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் ஒரு அறிவுரை கூறும் குழுவும் இயங்கி வருகிறது. பாரத ரத்னா சி. சுப்ரமண்யம் அவர்கள் முதல் புரவலராக இருந்தார். தற்பொழுது டாக்டர் M.S. சுவாமிநாதன் அவர்கள் Patron-in-Chief ஆக இருக்கிறார்.
கே: சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து...
ப: தற்பொழுது CEO ஆக சங்கரராமன் பணியாற்றி வருகிறார். நிர்வாகக் குழு, பொதுக் குழு, உறுப்பினர்கள் எனப் பலர் உள்ளனர். தற்பொழுது ISO அங்கீகாரம் பெறும் முயற்சி உள்ளது. நான் சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். மேலும் பல்வேறு திட்டப் பணிகளை விரிவாக்கம் செய்யும் எண்ணம் உள்ளது. 'முதியோர் இல்லம்' அமைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம். அது வெறும் ஓய்வெடுக்கும் இல்லமாக அல்லாமல், முதியவர்கள் தமது ஓய்வு நேரத்தில் அறிவை, அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அமைய வேண்டும். இது விரைவில் தொடங்கவிருக்கிறது.
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இளமைக் காலத்தில் பெற்றோர், பிற உறவினர் கவனித்துக் கொள்ளலாம். அவர் கள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால், அல்லது பெற்றோர்கள் காலத்திற்குப் பின், யார் உதவ முடியும்? தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற குழந்தைகளை வீட்டில் பராமரிப்பதும் மிகக் கடினம். ஆகவே அவர்கள் தங்கள் வேலையைத் தாங்களே பார்த்துக் கொள்ளுமளவுக்குப் பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கி அவர்களை சுயச் சார்பு உடையவர்கள் ஆக்கும் எண்ணத் துடன் 'ஸ்ரீ சுப்ரமண்யா சாரிடபிள் டிரஸ்ட்' என்பதைத் தொடங்கியுள்ளோம்.
அடுத்தபடியாக, தண்டுவடம், மூளை பாதிப்படைந்தவர்களுக்கு நிரந்தரமாக மருத்துவ வசதி, தங்கும் இட வசதி, உணவு, உடை போன்ற வசதிகள் அளிக்கத் திட்ட மிட்டிருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். அது மாதிரி அமைப்புகள் பூனாவுக்கு அருகே ராணுவ வீரர்களுக்காக உள்ளன. டெல்லி, பெங்களூரு போன்ற சில இடங்களில் சில மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன என்றாலும், நிரந்தரமாக அவர்களுக்கு ஓர் அமைவிடம் அமைத்துத் தருவது எங்கள் நோக்கம். ஆனால் அதற்கு அதிகச் செலவு பிடிக்கும். அதாவது சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவரின் அனைத்துத் தேவை களையும் நிறைவேற்றத் தனியாக ஒரு நபரை நிரந்தரமாகப் பணியில் அமர்த்த வேண்டும். உணவு, உடை, மருத்துவ வசதி என்று ஒரு நபரை முழுமையாகப் பராமரிக்க சுமார் 15000 ரூபாய் வரை ஆகலாம். மிகுந்த செலவு பிடிக்கக் கூடிய திட்டம். நம்பிக்கை உள்ளது.
கே: உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் தரப்படும் பல வசதிகள் இந்தியாவில் இல்லையே. இதுகுறித்து ஏதாவது செய்கிறீர்களா?
ப: 1981ம் ஆண்டு சர்வதேச ஊனமுற்றோர் ஆண்டாகக் கடைபிடிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் இன்றுவரை அவற்றில் பெரும் பான்மையானவை செயல்படுத்தப்படவே இல்லை என்று தான் கூற வேண்டும். பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு பாரதம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அமர்சேவா சங்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்சிக்காக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் மூன்று நாட்கள் வரை வந்திருந்து, தங்கி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். அதில் பல திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, அவை பாராளுமன்றத்திற்கும் கூட அனுப்பி வைக்கப்பட்டது. ஆலோசனைகளும் நாடாளு மன்றத்தின் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவை நிறைவேறுவதற்குத் தான் பல்வேறு நடைமுறைத் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அது குறித்து ஆராய மாநில அளவில் ஒரு கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கு போதிய அதிகாரங்கள் வழங்கப் படவில்லை என்று தான் கூற வேண்டும்.
ரயில், பேருந்து போன்றவற்றில் ஏறி இறங்கும் போது சவால் விடப்பட்ட சகோதரர்கள் பல விதங்களில் சிரமப்படுகிறார்கள் என்பது உண்மையே. ரயிலில் அவர்களுக்கு என்று தனி கோச்கள் இணைக்கப்பட்டாலும், அதில் ரிசர்வேஷன் வசதி கிடையாது. அதனால் சாதாரண பொதுமக்களும் ஏறி விடுகின்றனர், மேலும் அதில் படுக்கை வசதியும் சரியாக இல்லை. ஆகவே இது போன்ற குறைகள் களையப்பட வேண்டும். பொது மக்களும் மற்றவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.
பேருந்துகளில் வீல்சேர் போன்றவற்றை ஏற்ற நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் சவால் விடப்பட்ட சகோதரர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. ஆகவே பேருந்துகளில் வீல் சேர்களை ஏற்ற அனுமதிக்க வேண்டும், அதோடு பேருந்து, ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும் சவால் விடப்பட்ட சகோதரர்களை நடத்தும் முறை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்த காலத்தில் நாங்கள் மாவட்ட ஆட்சியர், மாநகர கமிஷனர், பொறியாளர் ஆகியோரைச் சந்தித்து, ஊன முற்றவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தருவது குறித்து கோரிக்கை விடுத்தோம். அவை அவர்களின் முயற்சியால் நிறைவேற்றப்பட்டன. இதே வசதி எல்லா இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக பல்வேறு திட்டங்களும் எங்களால் முன் வைக்கப் பட்டுள்ளது. அவை விரைந்து நிறைவேற்றப் பட வேண்டும் என்பதே எனது ஆசை. அரசு மட்டுமல்லாமல் பொதுமக்களும் இவற்றில் உதவி புரிய முன் வர வேண்டும். ஒருவருக் கொருவர், சக மனிதர்களின் தேவையைப் புரிந்து கொண்டு உதவ முன்வர வேண்டும். அரசு 3% இட ஒதுக்கீடு அளித்துள்ளது. அதே சமயம் INFOSYS போன்ற நிறுவனங் களும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது வரவேற்கத்தக்கது.
கே: உங்களின் துணைவியார் குறித்து...
ப: 1985-ல் எங்கள் பள்ளியில் பணிபுரிய வந்தார் சித்ரா என்கிற லஷ்மி. அவர் மிகவும் அழகாகப் பாடக் கூடியவர். எனது பள்ளி ஆண்டு விழாவில் உள்ளம் உருகி அவர் பாட, அதன் மூலம்தான் அவர் அறிமுகமே எங்களுக்குக் கிடைத்தது. பின்னர் எங்கள் பள்ளியிலேயே பணிபுரிந்தார். அவர் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அதே சமயம் கடின உழைப்பாளி. காலையில் டைப் அடிக்க ஆரம்பித்தால் இரவு வரை துளிக்கூட ஓய்வு எடுக்காமல் வேலை செய்து கொண்டே இருப்பார். 1994-ல் சிவானந்த ஆசிரமத்தில் எங்களது திருமணம் எளிய முறையில் நடந்தது.
கே: உங்களுடைய முன்மாதிரி, குரு அல்லது வழிகாட்டி என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?
ராமச்சந்திரன் என்ற நண்பருடன் ஊருக்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் ஒரு குழந்தை. சுமார் 2 வயது இருக்கும். பார்க்க துருதுருவென்று அழகாக இருந்தது. வாழைப்பழத்தைத் தின்று விட்டு, அதன் தோலைக் குப்பைத் தொட்டியைத் தேடிச்சென்று போட்டுவிட்டு வந்தது. எனக்கு வியப்பாக இருந்தது. எல்லாம் பெற்றோர் வளர்ப்பு தான் காரணம் என்பதை அப்போது கற்றுக் கொண்டேன்.
எங்கள் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். பெயர் அண்ணாதுரை கனபாடிகள். அவர் செயல் எல்லாமே அவ்வளவு சிறப்பாகவும், வியப்புக்குரியதாகவும் இருக்கும், அவர் குளக்கரையில் குளித்தால் கூட அதில் ஒரு நேர்த்தி இருக்கும், லாகவம் இருக்கும். வழியில் சென்று கொண்டிருப்பார். பாதையில் எங்காவது முள்ளைப் பார்த்து விட்டால் போதும், அதை எடுத்து, யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் போட்டுவிட்டு, வேறு எங்கேனும் முள் தட்டுப்படுகிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தான் பயணத்தைத் தொடர்வார். அவ்வளவு பொறுப்புணர்வோடு செயல்படுவார். கோயிலுக்குச் செல்வார். அங்கே எல்லாம் உடைந்த தேங்காய் சில்லுகளும் சிரட்டைகளுமாக இருக்கும், அதை அப்படியே பொறுக்குவார். கொண்டு போய் மடப்பள்ளியில் கொடுப்பார். அதன் பின்னர் தான் சாமி கும்பிடுவார். அவ்வளவு பொறுப்புணர்ச்சி.
நான் ஆரம்பகாலத்தில் சென்னைக்கு வந்தபோது மிகவும் உறுதுணையாக இருந்தவர் கார் ஓட்டுநர் ராமச்சந்திரன். கடின உழைப்பாளி. முகம் சுளிக்காதவர். எங்களுக்குச் சென்னையில் நல்ல அடித்தளம் அமைந்தது என்றால் அதற்கு முக்கியமான காரணம் ஓட்டுநர் ராமச்சந்திரன் தான்.
இவ்வாறு பல காலகட்டங்களில் பல மனிதர்களை, பல நேரங்களில் சந்தித்து பல்வேறு அனுபவங்களை, பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆக இவர்களை அனைவரையுமே நான் குரு அல்லது வழிகாட்டி என்று தான் சொல்ல வேண்டும்.
கே: உன்னால் முடியும் தம்பி, வானமே எல்லை போன்று சமூக சேவையை வலியுறுத்தும் திரைப்படங்கள் எடுக்க உங்ளது சமூகப் பணி தூண்டுகோலாய் அமைந்தது என்று கூறப்படுவது பற்றி...
ப: 'உன்னால் முடியும் தம்பி' என்று தன்னம்பிக்கைக் கட்டுரையை எழுதிய டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். அந்தப் படத்தில் நடித்த நடிகர் கமல் ஹாசனையும் சென்னையில் சந்தித்து இருக்கிறேன். 'ஒரு வீடு இரு வாசல்' படப் பிடிப்புக்காக இயக்குநர் கே.பாலசந்தர் குற்றாலம் வந்திருந்தார். நானும் நண்பரும் சென்று அவரை அங்கு சந்தித்தோம். எங்களது சங்க நடவடிக்கைகள் பற்றி ஆவலாக விசாரித்தார். நிதி உதவியும் செய்தார். 'ஆயிக்குடி ராமகிருஷ்ணனைச் சந்தித்தது, வானமே எல்லை படத்தின் பாத்திரப் படைப்புக்குத் தூண்டு கோலாய் அமைந்தது' என்று கே.பி. சொல்லியதாகப் பின்னர் கேள்விப்பட்டேன். எங்கள் கடமையைத் தான் செய்து வருகிறோமேயன்றி வேறொன்றும் இல்லை.
கே: இதுவரை நீங்கள் செய்துள்ள சாதனை என்று எதையாவது குறிப்பிட விரும்பினால் எதைக் கூறுவீர்கள்?
ப: ஊனமுற்ற சகோதரர்களைப் பல பெண்கள் விரும்பி மணம் செய்து கொண்டது உண்டு. ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நான் சொல்லித் தான் ஆகவேண்டும். பெண்கள் கருணையுடன் சவால் விடப்பட்ட சகோதர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதைப் போல, ஆண்கள் பலரும் சவால் விடப்பட்ட சகோதரிகளுக்கு வாழ்க்கை தர அதிகம் முன்வருவதில்லை. இந்த நிலைமை மாற வேண்டும். ஆண் களுக்கும் இத்தகைய எண்ணம் வர வேண்டும் என்பது எனது விருப்பம்.
கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: தென்றல் வாசகர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தையும், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளு கிறேன். நீங்கள் தமிழகம் வரும்போது, கண்டிப்பாக அமர்சேவா சங்கத்துக்கும் வருகை தர வேண்டும். அங்கு வந்து, தங்கியிருந்து நடக்கும் பணிகளைப் பார்வை யிட வேண்டும். உங்களது ஆலோசனைகளை, கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக ஏதேனும் ஆலோசனைகள், உதவிகள் வழங்கினாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
எங்களது இணையதள முகவரி: www.amarseva.org
எங்களது பொருட்களை வாங்குவது, நிதி உதவி செய்வது உட்பட அனைத்திற்குமான விவரங்கள் அதில் உள்ளன. எங்களை mail@amarseva.org மற்றும் amarseva@vsnl.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது எங்களது அஞ்சல் முகவரியான Amarseva Sangam, Sulochana Gardens, Post Box No. 001, Tenkasi Road, Ayikudy P.O., Tirunelveli Dt., PIN-627 852 என்ற முகவரிக்கும் எழுதலாம். தொலைபேசி: +914 633 - 267 160, 267 170, 267 317, 267 449 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது எனது +91 93610 67160 என்ற நேரடி செல்பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி, வணக்கம்.
சந்திப்பு: பா.சு. ரமணன் தொகுப்பு: மதுரபாரதி |