நாயும் நானும்
நாயுடனான என் பரிச்சயம் என் தாயின் இடுப்பில் நான் அமர்ந்திருந்த போதே தொடங்கியிருக்கும். நாயையும், பசுவையும், காக்கையையும் வேடிக்கை காட்டியே என் தாய் சோறூட்டி இருப்பார். ஆனால் என் ஞாபகத்தில் இருப்பவை, திருவல்லிக்கேணியின் இருண்ட சந்துகளில், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, எச்சில் வழிய, கோரைப்பல்லைக் காட்டி, நம்மை வெறித்துப்பார்க்கும் அல்லது குரைக்கும் நாய்கள்தாம். பல சமயம், அவற்றைக் கடக்க வேண்டியிருந்தால், மனத்தில் எல்லாக் கடவுளர் பெயர்களையும் சொல்லிக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க நடந்தது ஞாபகம் வருகிறது. ஓரிரு சமயம் நாய் துரத்துகிறதோ என்ற பயத்தில், குளத்து ஆஞ்சனேயருக்குத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு, அம்மாவிடம் சொல்ல, "தேங்கா விக்கற விலைக்கு இப்படியா வேண்டிப்பா? ஒரு கற்பூரம் கொளுத்தறேன்னு வேண்டிக்கக் கூடாதோ" என்று வசவு வாங்கியிருக்கிறேன். ஆனால் அம்மாவிடம் கெஞ்சி தேங்காய் உடைத்துவிடுவேன். இல்லைன்னா அனுமார் கோபித்துக்கொண்டு திரும்ப நாயை அனுப்பிவிட்டால்!

அமெரிக்காவுக்கு வந்ததில் முதல் சந்தோஷம் இங்கே தெருநாய் இல்லை என்பதே. பார்க்கும் நாய்களும் என்னை பயமுறுத்தாமல் அழகாகவே இருந்தன. சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' நாவலின் உபயமாக அமெரிக்க நாய்கள் குரைக்காது என்ற அசையாத நம்பிக்கை. ஆகா, நாம் சுவர்க்கபுரிக்கு வந்துவிட்டோம் என்று ஒரே ஆச்சரியம். நாயாய்ப் பிறந்தாலும் அமெரிக்காவில் பிறக்கவேண்டும் என்று சொல்லுவது உண்மைதான்.

என் மகிழ்ச்சி வெகுநாள் நீடிக்கவில்லை. ஆரம்பப் பள்ளியில் அப்போது படித்துக்கொண்டிருந்த என் மகளின் வகுப்புத்தோழி (அமெரிக்கர்) பிறந்தநாள் விழாவுக்காக வீட்டுக்கு அழைத்தாள். என் மகளை அவர்கள் வீட்டில் விடப்போன நான், அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவைத் திறக்கும் சப்தம் கேட்டு நிமிர்ந்தால், என்னைவிட உயரமான நாய் ஒன்று என்னை வரவேற்கும் பாவனையில் என்மேல் பாய, எனக்கு சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது. அவர்கள் நாய் ஒன்றும் செய்யாது என்று எவ்வளவு உத்தரவாதம் கொடுத்தாலும், அந்த விஷயம் நாய்க்குத் தெரியுமா என்ற சந்தேகத்தில், "இருக்கட்டும், இருக்கட்டும், எனக்கு உள்ளே வர நேரமில்லை. விழா முடிந்ததும் என் மகளை நீங்களே வீட்டில் கொண்டு விட்டுவிடுங்கள்" என்று சொல்லிவிட்டு பிடித்தேன் ஓட்டம்!

ஒருமுறை என் கணவரின் நெருங்கிய நண்பர் டெக்சஸிலிருந்து குடும்பத்துடன் வந்தார். வருவதற்குமுன் அவர்கள் என்னிடம் "நாங்கள் ஒரு சின்ன நாய் வைத்திருக்கிறோம். ரொம்ப சமர்த்து. கூட்டி வரலாமா" என்று கேட்க, நானும் சின்ன நாய்தானே, நம் பெரிய வீட்டில் எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்து, சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் வந்தது சின்ன வயசு "பெரிய நாய்", கோல்டன் ரெட்ரீவர் வகை. உடல் முழுவதும் பொன்னிற முடிகளுடன், எம்.ஜி.எம். சிங்கம்போலவே என் கண்களுக்குத் தெரிந்தது. நடுக்கத்தைக் காட்டாமல், 'மோக்ளி ரொம்ப க்யூட்' என்று சொல்லுமளவு எனக்குத் தைரியம் வளர்ந்துவிட்டது. நான் பெற்ற செல்வங்களுக்கோ ஒரே ஆனந்தம். எல்லோரும் வீட்டிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பக்கத்து வீட்டில் இருந்த கால் ஆழாக்கு நாய்க்கு மட்டும், எங்களையோ, எங்கள் விருந்தாளி நாயாரையோ பிடிக்கவில்லை. குரைத்துத் தள்ளிவிட்டது. (அமெரிக்க நாய் குரைக்காது என்ற என் தியரி அம்பேல்).

ஒருநாள் நான் அலுவலகம் போய்விட்டேன். என் குடும்பத்தினரும், நண்பர் குடும்பத்தினரும் மோக்ளியை தாழ்வாரத்தில் விட்டு, தண்ணீரும், உணவும் வைத்துவிட்டு, ஊர்சுற்றிப் பார்க்கச் சென்றனர். மாலை அவர்களால் வாகன நெரிசல் காரணமாக சீக்கிரம் வர முடியவில்லை. எப்பொழுதும்போல் வீடு திரும்பிய எனக்கு மோக்ளியின் குரல் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியது என்றால் பொய்யில்லை. அலைபேசி அழைக்க, எடுத்தவுடன் என் கணவர், "நாங்கள் வர இன்னும் நேரமாகும், மோக்ளி பாவம், காலையிலிருந்து ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடக்கிறான். கழுத்தில் சங்கிலி மாட்டி அவனை அழைத்துக்கொண்டு நம் புல்வெளியில் விட்டால், அவன் சங்கடம் சிறிது குறையும். அதற்குள் நாங்களும் வந்து விடுவோம்" என்றார். கேட்கச் சுலபமாக இருக்கவே, சங்கிலியை எடுத்து என் நடுங்கும் கைகளால் அதன் கழுத்தில் மாட்டி, கராஜ் கதவைத் திறக்க, அதுவரை கட்டின பசுவாக வந்த மோக்ளி, திடீரென ஜல்லிக்கட்டுக் காளையாக மாறிச் சங்கிலியை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் புரிந்தது, நான் பயத்தில் சங்கிலியை ஒழுங்காகப் பூட்டவில்லை என்று. எனக்கு உச்சிமுதல் உள்ளங்கால் வரை விஷஜுரம் வந்தது போல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

காலையிலிருந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்த மோக்ளிக்கோ, அதன் கடமைகளை முடித்தவுடன் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. புல்வெளியில் இங்கும் அங்கும் ஓடி, கீழே விழுந்து புரண்டு ஒரே அமர்க்களம். எங்கள் வீட்டுக்கு வேலி கிடையாது. எப்பொழுது பக்கத்துவீட்டுக் குட்டிநாய் வந்துவிடுமோ என்று பயம். நடுங்கும் குரலுடன் தமிழில் (ஆபத்துக்காலத்தில் துணைவருவது தாய்மொழியே) "அப்பா மோக்ளி, தயவுசெய்து உள்ளே வந்துடு, என் செல்லமில்லே, தங்கமில்லே" என்று எல்லாக் கொஞ்சல், கெஞ்சல்களோடு கூப்பிட (கூடவே ஆஞ்சனேயருக்கு தேங்காய் பிரார்த்தனையும், தேங்காய் வாங்க இனிமேல் அம்மாவிடம் அனுமதி கேட்க வேண்டாம், விலையும் பிரச்சினை இல்லை), மோக்ளிக்கு என்ன புரிந்ததோ, இல்லை ஆஞ்சனேயர் அருளோ, உடனே வீட்டிற்குள் நுழைந்துவிட்டது.

மற்றவர்கள் வரும்வரை என் காலருகிலேயே இருந்தது. ஏதோ இனந்தெரியாத பாசம் அந்த ஜீவன்மேல் எழ, அதன் உடல்முழுவதும் தடவ, அது சமர்த்தாக உட்கார்ந்திருந்தது. பிறகு அவர்கள் ஊருக்குச் செல்லும்வரையிலும் மோக்ளி என் பின்னாலேயே சுற்றிச்சுற்றி வந்தது. எங்கள் நண்பரும், "நீங்கள் இனி எவ்வளவு வருடம் கழித்து வந்தாலும் அவன் உங்களை மறக்க மாட்டான்" என்பதைக் கேட்க மிக ஆச்சரியம். அந்த நாயுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

போன வாரம் நடைப்பயிற்சி செய்யும்போது திடீரென்று ஒரு நாய்க்குரல் என்னை நிறுத்தியது. நிமிர்ந்து பார்க்க, என் தோழியின் நாய் ரோசி! "சௌக்கியமா" என்று அதன் பாஷையில் வினவியது. ஓடலாமா என்று நினைத்த எனக்கு, தோழியின் கணவர் நிற்பது தெரிய, அருகில் சென்றேன். ரோசியை ஒரு வருடம் கழித்துப் பார்க்கிறேன். ஆனால், ரோசி ஆட்டிய வாலுடன், வாயில் அன்றைய செய்தித்தாளுடன் (அதுதான் தினமும் பேப்பர் எடுக்க வேண்டுமாம்) என் அருகில் வந்து, என்னைக் கொஞ்சச்சொல்லி முதுகைக் காட்டியது. அதன் முதுகையும், கழுத்தையும் தடவினேன். சந்தோஷத்துடன் குதித்து உள்ளே ஓடியது. எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? எதற்கு என்னைக் கண்டதும் அதற்கு ஆனந்தம்? எனக்குப் புரியவில்லை. ஆனால் அதன் அன்பும் சினேகமும் எனக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அன்பு என்பது இன, மத, மொழிகளைக் கடந்து, இரண்டு மற்றும் நான்கு கால்களையும் கடந்து, மனதைத் தொடவல்லது என்பது புரிகிறது.

எழுத்து: லதா ஆழ்வார்,
சிகாகோ
படம்: அபி ஆழ்வார்

© TamilOnline.com