ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் நாரதர் தனக்கு இணையான பக்தன் கிடையாது என்று பெருமையடித்துக் கொண்டார். அப்படிச் செய்ததில் ஒரு பக்தனின் முதல் தகுதியான 'அகங்காரம் கூடாது' என்பதையே அவர் இழந்துவிட்டார். நாரதருக்கு பகவான் ஒரு பாடம் கற்பிக்க எண்ணினார்.
ஒரு கையகல நிலத்துக்குச் சொந்தக்காரனான விவசாயி ஒருவர் மிகச்சிறந்த பக்தர் என்று விஷ்ணு கூறினார். "நீ அவரிடம் போய் எப்படி பக்தியாக இருப்பதென்பதைக் கற்றுக்கொள்ளலாம்" என்றும் கூறினார். நாரதர் இதைச் சற்றே அவமானமாகக் கருதினாலும், அப்படிப்பட்ட பக்தரைப் பார்க்க அவருக்கு ஆர்வம் மேலிட்டது.
அந்த விவசாயியின் ஊருக்குப் போனார். அவரோ நாள்முழுவதும் வயலில், மாட்டுத் தொழுவத்தில் அல்லது வீட்டில் வேலை செய்தவாறே இருந்தார். நாரதர் எவ்வளவோ கவனித்துப் பார்த்தாலும் அவர் ஒருநாளைக்கு மூன்றுதடவைக்கு மேல் இறைநாமத்தைச் சொல்லவில்லை. காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன், மதியம் உணவு உண்ணுமுன், கடைசியாக இரவில் படுக்கப் போகுமுன் மட்டுமே அவர் இறைவன் பெயரைக் கூறினார்.
இப்படிப்பட்ட 'கீழ்நிலை' பக்தனைவிடத் தான் குறைந்தவனாகக் கருதப்பட்டதில் நாரதருக்குச் சினம் வந்தது. "நான் எப்போதும் இறைவனின் நாமத்தையும் அவன் புகழையும் இனிமையாகப் பாடுவதோடு அதை எங்கும் பரப்பி வருகிறேன். வேலைசெய்து கை காய்த்துப்போன இந்த விவசாயி ஒருநாளைக்கு மூன்றுமுறைதான் இறைவனை நினைக்கிறான். மகாவிஷ்ணு இவன் என்னைவிடப் பெரிய பக்தன் என்கிறார்!" என்று அவர் நினைத்தார்.
கோபத்திலும் அவமானத்திலும் முகம்சிவக்க நாரதர் நேராக வைகுண்டத்துக்குப் போனார். அவரைப் பார்த்த விஷ்ணு சிரித்தார். நாரதரின் கையில் ஒரு பெரியகிண்ணம் நிரம்ப நீரைக் கொடுத்து, அதை எடுத்துக்கொண்டு நீரை ஒரு சொட்டுகூடச் சிந்தாமல் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை சுற்றிவரச் சொன்னார்.
நாரதரும் போய்விட்டுத் திரும்பினார். நீ இதைச் செய்த சமயத்தில் எத்தனைமுறை பகவானை நினைத்தாய் என்று கேட்டார் விஷ்ணு. தண்ணீர் தளும்பிவிடக் கூடாதெனக் கவனமாக நடந்ததால் பகவானை ஒருமுறைகூட நினைக்க இயலவில்லை என்று நாரதர் ஒப்புக்கொண்டார்.
ஒரு கிண்ணம் நீருக்கே இப்படிச் சொல்கிறாய், அந்த விவசாயி சற்றே கவனம் தப்பினாலும் பல தவறுகள் ஏற்பட்டுவிடத்தக்க பல வேலைகளைச் செய்யும் பொறுப்பைத் தலையில் சுமந்திருந்தாலும் ஒருநாளைக்கு மூன்றுமுறையாவது பகவன் நாமத்தைச் சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட வேண்டும் என்றார் விஷ்ணு.
நன்றியோடு பகவானை ஒருநாளில் மூன்றுமுறை, ஏன் இரண்டே முறை நினைத்தாலும் அது மிகுந்த மன அமைதியை உங்களுக்குத் தரும்.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |