'பத்மவிபூஷண்' Dr. பாலமுரளிகிருஷ்ணா
எண்ணற்ற மொழிகளில் பாடி, எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி, தானே ஓர் இசைப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா (86) சென்னையில் காலமானார். ஜூலை, 06, 1930 அன்று பட்டாபிராமையா - சூர்யகாந்தாம்மா தம்பதியினருக்கு மகவாகப் பிறந்த பாலமுரளிகிருஷ்ணா, இளவயது முதலே இசையார்வம் கொண்டிருந்தார். தந்தை வயலின் மற்றும் வீணை வித்வான். எட்டு வயதில் துவங்கிய சங்கீதப்பயணம் எண்பதுகளைத் தொட்டும் இடைவிடாமல் தொடர்ந்தது. விஜயவாடாவில் எட்டு வயதில் தியாகராஜ ஆராதனையில் அரங்கேறியவர் அதன் பின் எண்ணற்ற ஆராதனை விழாக்களில் பங்கேற்றிருக்கிறார். தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்காளம் எனப் பல மொழிகளில் பாடிய பெருமை இவருக்குண்டு.

கர்நாடக இசை மட்டுமல்லாது திரைப்படங்களிலும் பின்னணி பாடியிருக்கிறார். "ஒருநாள் போதுமா", "தங்கரதம் வந்தது", "சின்னக் கண்ணன் அழைக்கிறான்", "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" போன்றவை இன்றளவும் ரசிகர்கள் மனதில் நின்றுவிட்ட பாடல்களாக இருக்கின்றன என்றால் அதற்கு பாலமுரளியின் குரலும் மிகமுக்கியக் காரணம். "பக்த பிரகலாதா" படத்தில் நாரதராக நடித்தார். அதன் பிறகு நடிப்பில் ஆர்வம் கொள்ளவில்லை. இசைக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். வாய்ப்பாட்டுக் கலஞராக மட்டுமல்லாமல் கஞ்சிரா, மிருதங்கம், வயலின், வயோலா, புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதிலும் தேர்ந்தவராக இருந்தார்.

பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளிகிருஷ்ணா, அவற்றுக்காகச் சிறந்த பாடகர், சிறந்த இசையமைப்பாளர் உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஃபிரெஞ்சு அரசின் செவாலியே விருதும் பெற்றிருக்கிறார். 'பத்மஸ்ரீ', 'பத்மபூஷண்', 'பத்மவிபூஷண்' என உயர்விருதுகள் தேடிவந்தன. இசையுலகின் உயர்ந்த விருதான 'சங்கீத கலாநிதி'யும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் இசைச்சங்கம், 'இசைப்பேரறிஞர்' விருது வழங்கியது.

அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா, கனடா, பிரிட்டன், இத்தாலி,சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என உலகின் பல நாடுகளுக்கும் சென்று கர்நாடக இசையைப் பரப்பியவர். பீம்சேன் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஸியா உள்ளிட்ட பல வட இந்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஜுகல்பந்திக் கச்சேரிகள் செய்திருக்கிறார். வாழ்நாளில் 20,000 கச்சேரிகளுக்கு மேல் நிகழ்த்திய ஒரே தென்னிந்திய இசைக்கலைஞர் இவராகத்தான் இருக்கமுடியும். அரிய ராகங்கள் பலவற்றை மேடையில் பாடியவர். இசைகுறித்த சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் கூறும் அளவிற்குச் சங்கீத ஞானியாகத் திகழ்ந்தவர்.

"ரொம்ப அன்பாகப் பழகுவார். 'தான்' என்கிற அகம்பாவம் இல்லாத கலைஞர். தனது வித்தை குறித்து அவருக்கு துளியளவும் கர்வமே கிடையாது. யாரையும் அலட்சியம் செய்யமாட்டார். 5 வயது குழந்தை முதல், 90 வயதான முதியவர்களிடத்திலும் ஒரேமாதிரிப் பழகுவார். பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு, ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு" என்று பாடகி வாணிஜெயராம் சொல்லியிருப்பது மிகையல்ல, நிஜம்.

இசை ஜாம்பவானுக்குத் தென்றலின் அஞ்சலிகள்!

© TamilOnline.com