1. கீழ்க்கண்ட வரிசையில் விடுபட்ட எண் எது?
4, 3, 8, 7, 16, 15, 32, -, -
2. A, B, C என்ற மூவரின் சராசரி எடை 45 பவுண்டு. A, B இருவரின் சராசரி 40 பவுண்டு. B, C இருவரின் சராசரி எடை 43 பவுண்டு. A, B, Cயின் தனித்தனி எடை எவ்வளவு?
3. ஒரு ரயில்வண்டி 181 பயணிகளுடன் புறப்பட்டது. முதல் நிறுத்தத்தில் 37 பேர் இறங்கினர். இரண்டாவது நிறுத்தத்தில் 12ல் ஒரு பங்கினர் இறங்கினர். மூன்றாவதில் ஆறில் ஒரு பங்கினர் இறங்கினர். நான்காவது நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினர். கடைசி நிலையத்தை வண்டி அடைந்தபோது அதில் 53 பேர் மட்டுமே இருந்தனர் என்றால் நான்காவது நிறுத்தத்தில் இறங்கிய பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
4. ஒரு பெட்டியில் மொத்தம் 2601 டாலர் பரிசுப்பணம் இருந்தது. அது அங்கிருந்த மாணவர்கள் அத்தனை பேருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் கிடைத்த தொகையும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமம். அப்படியென்றால் மாணவர்கள் எத்தனை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?
5. மூன்று எண்களின் சராசரி 100. முதல் எண்ணைப்போல் மூன்று மடங்கு இரண்டாவது எண். இரண்டாவது எண்ணிலிருந்து இரு மடங்கு மூன்றாவது எண் என்றால் அந்த எண்கள் எவை?
அரவிந்த்
விடைகள்1. வரிசை 4, 8(4*2), 16(8*2), 32(16*2) என ஓர் வரிசையிலும், 3, 7 (3+4), 15 (7+8) என மற்றோர் வரிசையிலும் அமைந்துள்ளது. அதன்படி அடுத்து வர வேண்டிய எண்கள் 15 + 16 = 31; 32*2 = 64.
ஆக, அடுத்து வர வேண்டிய எண்கள் = 31, 64
2. A, B, C என்ற மூவரின் சராசரி எடை = 45 கிலோ; மொத்த எடை = 45 * 3 = 135
A,Bயின் சராசரி எடை = 40; மொத்த எடை = 40 * 2 = 80
B,Cயின் சராசரி எடை = 43; மொத்த எடை = 43 * 2 = 86
Bயின் எடை = AB + BC - ABC = 80 + 86 - 135 = 31
A + B = 80; A = 80-31 = 49
B + C = 86; C = 86-31 = 55
A, B, Cயின் தனித்தனி எடை அளவு = 49,31,55
3. மொத்தப் பயணிகள் = 181
முதல் நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = 37; மீதம் பயணம் செய்தவர்கள் = 181 - 37 = 144
இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = 12ல் ஒரு பங்கினர் = 144ல் 12ல் ஒரு பங்கினர் = 12. மீதம் இருந்த பயணிகள் = 144 - 12 = 132
மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = ஆறில் ஒரு பங்கினர் = 132ல் 6ல் ஒரு பங்கினர் = 22. மீதம் இருந்த பயணிகள் = 132 - 22 = 110
நான்காவது நிறுத்தத்தில் இறங்கியவர்கள் = x
இறுதிவரை பயணம் செய்தவர்கள் = 53
x = 110 - 53 = 57
ஆக, நான்காவது நிறுத்தத்தில் இறங்கிய பயணிகளின் எண்ணிக்கை = 57.
4. மாணவர்கள் = x; பணம் = y
x * y = 2601
மாணவர்களின் எண்ணிக்கை = பணத்தின் எண்ணிக்கை = சமம் = y = x
x * x = 2601
x2 = 2601; x = 51
ஆக, 51 மாணவர்கள் ஆளுக்கு 51 டாலர் பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
5. மூன்று எண்களின் சராசரி = 100. மொத்தம் = 100 * 3 = 300
முதல் எண் x; இரண்டாவது எண் = y = 3x; மூன்றாவது எண் = Z = 2y = 2 (3x) = 6x
x + 3x + 6x = 300
10x = 300
x = 300/10 = 30
ஆகவே அந்த எண்கள் = 30, 90 (மும்மடங்கு), 180 (இரண்டாவது எண்ணின் இருமடங்கு)