யாருக்கு எப்போது பரிசோதனை?
சமீபத்தில் இந்திய மருத்துவர்களுக்கான மாநாட்டு விரிவுரையில் ஒரு சின்னப் பகுதியை தயார்செய்து கொடுக்கும்படி எனது முன்னோடியான ஆசிரியர் ஒருவர் கேட்டார். அது பிற்காலத்தில் வரும் நோய்களை எப்படி முன்னமே அறிந்துகொண்டு தவிர்ப்பது என்பதைப் பற்றியது. இதில், யாருக்கு, எப்போது எந்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்ற பகுதியைப்பற்றி என்னை எழுதச் சொன்னார். அதற்காகப் படித்தபோது ஒரு சில நோய்கள் எப்படி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சற்று மாறுபட்டு இருக்கின்றன என்பதை அறியமுடிந்தது. இவை கலாசார வேறுபாடுகளா, நோயறியும் முறைகளின் வேறுபாடுகளா என்பது வேறு கேள்வி. ஆனால் இந்த வேறுபாடுகளை அறிந்துகொள்ளும்போது இங்கு வாழும் அமெரிக்க இந்தியர்கள் எந்தப் பக்கம் சேர்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. குடும்ப வரலாறு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முதலியவற்றைப் பொறுத்து இது வேறுபடும். ஆனால் வேறுபாடுகளை அறிந்துகொண்டு நாம் செய்யவேண்டிய தடுப்பு முறைகளைக் கையாண்டால் நோய் வராமல் தவிர்க்கலாம்.

நீரிழிவு
இப்போது உலகெங்கும் அதிகமாகி வரும் நோய் இது. அமெரிக்காவில் குறிப்பாக உடல் எடை அதிகமானவரிடத்தில் காணப்படுகிறது. வயதானோருக்கு, அதாவது 65 வயதுக்குப் பின்னர், வருகிறது. ஆனால் இந்தியாவில் 40-65 வயதுக்குள்ளேயே அதிகம் காணப்படுகிறது. எடை அதிகமிருந்தாலும், அமெரிக்கர்கள்போல் மிகப்பருத்த உடல் இல்லாது போனாலும் இந்தியர்களிடையே வயிறுபெருத்த குறைந்த எடையினரிடமும் காணப்படுகிறது. அதனால் சமீபகாலத்தில் இந்தியர்களுக்கும் மற்ற ஆசியர்களுக்கும் BMI 23க்கு குறைவாக இருப்பது நல்லது என்று புதிய அறிக்கை கூறுகிறது.

இந்தியர்களுக்குக் குறைந்த வயதில் இந்த நோய் வருவதால் உடலில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதும், பின்விளைவுகளைத் தவிர்ப்பதும் மிகமுக்கியம். இந்தியராக இருந்தால், உங்கள் BMI 23க்கு மேல், இருந்தால் வருடாவருடம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும் - குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோர். இளவயதினர் எடையைக் குறைக்கவேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்ற 24 வாரத்தில் இந்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதற்கு நம் உணவுப் பொருட்களில் மாவுச்சத்து அதிகம் இருப்பதும், உடற்பயிற்சி குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள்.

உயர் ரத்த அழுத்தம்.
இந்தியரில் 30% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேலானோருக்கு ஏற்பட்ட இந்த நோய் இப்போது இளைய தலைமுறையிடமும் அதிகம் காணப்படுகிறது. உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வதும், உடல் எடை அதிகம் இருப்பதும், உடற்பயிற்சி இல்லாமையும் இதற்குக் காரணங்கள். இவற்றுடன், இந்த அவசர உலகில் மனதை ஒருமுகப்படுத்த, மன அழுத்தம் குறைய, தியானம் முதலியவை செய்யாமல் இருப்பதும் காரணம். 18 வயதுக்குமேல் ஆன எல்லோரும் மருத்துவரைப் பார்க்கும் போதெல்லாம் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் வருடத்தில் ஒருமுறையாவது பரிசோதனை அவசியம்.

கொழுப்பு மற்றும் இதயநோய்
உடலில் இருவகைக் கொழுப்புகள் உண்டு. அவை HDL, LDL என்பவை. HDL நல்ல கொழுப்பு, LDL கெட்ட கொழுப்பு. இதைத் தவிர Triglycerides என்பது மாவுச்சத்தில் இருந்து வரும் கொழுப்பு. இந்தியரிடம் ட்ரைகிளிசரைடுகள் அதிகமாகவும் HDL குறைவாகவும் உள்ளது. ஒரு சிலருக்கு LDL அதிகமாக இருக்கலாம். இதை Dyslipidemia என்று சொல்வர். சராசரி அமெரிக்கர்களுக்கு LDL மட்டும் அதிகமாக இருக்கும். அது Lipitor மருந்தில் குறைந்துவிடும். ஆனால் இந்தியரிடம் காணப்படும் ட்ரைகிளிசரைடுகள், லிபிடாருக்குக் கேட்காது. மாவுச்சத்தைக் குறைத்தால்தான் குறையும். HDL அளவை அதிகமாக்க உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.

உலகின் எல்லா நாடுகளிலும் இதயநோயும் மாரடைப்பும் குறைந்து வருகிறது. மாறாக, இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. இது கவலைதரும் தகவல். அமெரிக்காவில் வாழும் இந்தியரிடம் மாரடைப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளவயதினருக்கே வருகிறது. உடல் எடை அதிகம் உள்ளவரும், குடும்ப வரலாறு உள்ளவரும், நீரிழிவு, அல்லது உயர் ரத்த அழுத்தம் இருப்பவரும் அவசியம் உடல்கொழுப்பு அளவை வருடாவருடம் சோதனை செய்துகொள்ள வேண்டும். புகைபிடிப்பவர்களுக்கு அதிக எச்சரிக்கை தேவை.

Metabolic syndrome எனப்படும் நோய் இந்தியரிடம் அதிகம் உள்ளது. இதில் எல்லாமே சராசரி அளவுக்குச் சற்று அதிகமாக இருக்கும். அதாவது borderline அளவு அதிகம். இதனால் பெரிய பாதிப்பில்லை என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். இதுவே இந்தியரிடம் அதிக இதயநோய் காணப்படக் காரணம். அதனால் உடல் எடையையும், குறிப்பாகத் தொப்பை அளவையும் குறைக்க வேண்டும்.

சிறுநீரக நோய்
இந்தியரிடம் 15-17% காணப்படுகிறது. நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களிடம் இது காணப்படுகிறது. அதனால் அவ்வப்போது மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும். மருந்து சாப்பிட்டால் போதும், 3-4 மாதங்களுக்கு ஒருமுறை எதற்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது தவறான எண்ணம். அவ்வப்போது பரிசோதித்து, தேவையானால் மருந்துகளை மாற்றி, ரத்தப் பரிசோதனையும் செய்துகொள்வது மிகவும் அவசியம்.

தைராய்டு நோய்
இதுவும் இந்தியர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அமெரிக்கர்களைவிடவும் இந்தியர்களிடம் தைராய்டுக்குறைவு நோய் அதிகம். Lancet என்ற மருத்துவப் பத்திரிக்கை அறிக்கையின்படி, இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு தைராய்டு குறைவாக இருக்கலாம். இதனால் இதைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டியது அவசியம். தைராய்டுக்குறைவினால் சோர்வு, களைப்பு, உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், தலைமயிர் கொட்டுதல், மாதவிடாய்த் தொந்தரவு போன்றவை இருக்கலாம். அதனால் இவர்கள் இந்த பரிசோதனை கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும்.

ஆஸ்டியோபொரோசிஸ்
எலும்புப்புரை எனப்படும் இது இந்தியப் பெண்களுக்கு அதிகம் வரக்கூடியது. எலும்புகள் நலிந்துவிடுவதால் எலும்புமுறிவு ஏற்படும் அபாயம் உண்டு. இது உடற்பயிற்சி இன்மையாலும், கால்சியம் குறைவாகச் சாப்பிடுவதாலும், உயரம் குறைவாக இருப்பதாலும் இந்தியப் பெண்களுக்கு அதிகம் வரக்கூடியது. 50 வயதுக்குமேல் ஆன எல்லாப் பெண்டிரும் DXA SCAN பரிசோதனையை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக 65 வயதுக்குமேல் ஆனவர்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

மன அழுத்தம்
PHQ என்று சொல்லப்படும் ஒரு கேள்விமுறையில் மன அழுத்தம் இருக்கிறதா என்று கண்டறியலாம். இந்தக் கேள்வித்தாளை வைத்துச் செய்த ஆராய்ச்சியில் தமிழ் நாட்டில் 15% பெண்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம் என்று அறியப்பட்டது. மனநோய்களை இந்தியர்கள் அவ்வளவாக வெளியில் கூறாமல் மறைப்பது வழக்கம். பெண்கள், கர்ப்பிணிகள், புதிதாகத் தாய்மை எய்தியவர்கள் ஆகியோரிடம் இந்தப் பரிசோதனையைச் செய்யவேண்டும்.

மேற்கூறிய நோய்கள் தவிரப் புற்றுநோய் தவிர்ப்பு முறைகள் பற்றியும் அறிந்துகொண்டு அவரவர் வயதுக்கேற்பப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.

இந்தியரை இந்தியாவில் இருந்து எடுக்கலாம், ஆனால் இந்தியாவை இந்தியரிடம் இருந்து எடுக்கமுடியாது என்பார்கள். அதுபோல் மரபணுக்கள், பழக்க வழக்கங்கள் மூலம் நம்மைத் தாக்கிவரும் நோய்களைப்பற்றி அறிந்துகொண்டு அவை நம்மிடம் உள்ளதா எனப் பரிசோதனை செய்துகொள்வோம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com