ஆக்கபூர்வமான ஆறுதல்
அன்புள்ள சிநேகிதியே

நான் திருமணமாகி அமெரிக்காவில் ஒரு வருடமாக செட்டில் ஆகியிருக்கிறேன். என் கணவருக்கு இங்கே மூன்று வருட கான்ட்ராக்ட். வாழ்க்கை இந்த அளவுக்கு என்னைக் கொண்டுவந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். காரணம் பணம், பாசம், படிப்பு என்று எதிலுமே அதிருஷ்டம் இல்லாதவளாக இருந்தேன். வெறும் பி.எஸ்ஸி.தான். எஞ்சினியரிங் படிக்க ஆசை. ஆனால், வாய்ப்பில்லை. என் மூன்று வயதில் அம்மா இறந்துபோனாள். என்னுடைய தங்கை பிறந்து ஒருமாதம் கூட ஆகவில்லை. என் அப்பாவுடையது காதல் திருமணம். இரண்டு பக்க உறவினர்களும் உதறித் தள்ளிவிட்டிருந்தார்கள். அம்மாவின் மரணம் அப்பாவை ரொம்பவும் பாதித்துவிட்டது. எங்களை வளர்க்க உறவினர்களைக் கெஞ்சப் பிடிக்கவில்லை. அவசர அவசரமாகக் கிடைத்த பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். நல்ல வசதியுள்ளவர் என்று நினைத்து என் சித்தி திருமணத்துக்கு இசைந்தார். என் அப்பா, மனைவியை இழந்த சோகத்தில் குடியில் மூழ்கி, வேலையை இழந்து - ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்த நிலைமையில், என் சித்திக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண், ஒரு பையன். என் அப்பாவிடமிருந்து அன்பும் கிடைக்கவில்லை; பணமும் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் அவர் ஏமாற்றங்களை ஆத்திரமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரையும் குறை சொல்லமுடியாது.

ஆனால், ஒவ்வொரு குடும்பச் சண்டையின்போதும் நானும், என் தங்கையும் கோழிக்குஞ்சுகள் மாதிரி பயந்து ஒளிந்துகொண்டு வேடிக்கை பார்ப்போம். ஒவ்வொரு சண்டையின்போதும் எங்களை எங்கேயாவது ஹாஸ்டலில் சேர்த்து விடுவார்களோ என்று திகில் கிளம்பும். இப்படித்தான் போனது எங்கள் வாழ்க்கை. எஞ்சினியரிங் படிக்க ஆசைப்பட்டாலும் முடியாமல் உள்ளூர் காலேஜில் பி.எஸ்ஸி. முடித்தேன். கம்ப்யூட்டர் கோர்ஸ் தனியாகக் கற்றுக்கொள்ளும்போது, என் கணவர் என்மீது ஆசைப்பட்டுப் பெண் கேட்டார். ஒரே ஜாதி என்பதால் பிரச்சனை இல்லாமல், அவரே செலவுசெய்து எளிய முறையில் திருமணம் நடந்தது. அந்த வகையில் ஒருசுமை குறைந்தது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். நான் கணவருடன் வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கும்போது, என் தங்கை மிகவும் கலவரப்பட்டுப் போனாள். என்னைவிட பயந்த சுபாவம் அவளுக்கு. என்னால் முடிந்தவரை அவளுடன் தொடர்புகொண்டு காலேஜுக்கு ட்யூஷன் ஃபீஸ் கட்டிப் பார்த்துக்கொண்டேன். அப்புறம் இங்கே வந்துவிட்டதால் அவளுடைய திருமண ஏற்பாடுகளை என்னால் செய்யமுடியவில்லை. அப்போதுதான் படிப்பு முடிந்திருந்தாலும், திருமணம் இவ்வளவு சீக்கிரம் வேண்டுமா என்று நீங்கள் நினைக்கலாம். எங்களைப் போன்றவர்களுக்கு, திருமணம் என்பது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கவில்லை. ஒரு விடுதலையை எதிர்பார்த்து எடுக்கும் முடிவு.

அப்பாவுக்கும், சித்திக்கும் எப்போதும் போராட்டம்தான். அவர்களுக்குள் எந்தப் பிணைப்பும் கிடையாது. தன் சொந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அப்பா சுயநலமாக எடுத்த முடிவு இரண்டாவது திருமணம். பாவம், சித்தியும் சிறியவர்தானே! காதலுக்கும், அன்புக்கும் ஏங்கி, ஏமாந்து வெறுப்பிலேயே வாழ்ந்திருக்கிறார். அதனால், தன் உடைமை, தன் குழந்தைகள் என்று தன் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள ஆரம்பித்தார். நல்லகாலம், நான் வெளியே வந்துவிட்டேன் என்று நினைக்க முடியவில்லை. என் தங்கைக்கும் ஒரு வழி செய்யாமல் வந்துவிட்டேன் என்ற ஒரு குற்ற உணர்ச்சி. கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தேன். என் கணவரின் நண்பர்மூலமாக ஒரு நல்ல வரன் கிடைத்தது. எல்லாம் கூடிவரும் சமயத்தில் என் சித்தி தடை போட்டுவிட்டார். அவர் பெண்ணுக்கும் சேர்த்துத் திருமணம் செய்யவேண்டும் என்று நிபந்தனை போட்டார். எங்கே நாங்கள் இருவரும் வெளியில் வந்துவிட்டால், அப்பா தன் குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுவாரோ என்ற பாதுகாப்பின்மையா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஆறுமாத காலத்துக்குப் பின் திருமணம் நிச்சயம் ஆனது. இரண்டு திருமணங்களும் வரும் ஜனவரியில் நடக்க ஏற்பாடு.

எல்லாம் நல்லபடியாக நடக்க ஆரம்பித்தது. நான் போக ஆசைப்பட்டாலும் போகாமல், அந்தப் பணத்தை அவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்தேன். ஆனால், என்ன காரணமோ இரண்டாவது தங்கையின் திருமணம் நின்று போய்விட்டது. அதனால் மனம் இடிந்துபோன சித்தி, என் தங்கையைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏதோ சாவு நடந்துவிட்டதைப் போல வீடு இருக்கிறது. இந்தத் திருமணம் நடக்குமா என்று தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் எல்லாருக்கும் திருமணம் நின்றுபோன விஷயம் தெரிந்துவிட்டதால், அதையே அபசகுனமாகப் பலர் நினைக்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்த சேமிப்பையும் அனுப்பிவிட்டேன். மிகவும் கவலையாக இருக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. நேரே ஒருமுறை போய்விட்டு வரப் பணவசதியும் இப்போது இல்லை. 'தென்றலை' நான்கைந்து மாதங்களாகப் படித்துக்கொண்டு வருகிறேன். உங்களுக்கு எழுதி என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

வணக்கம்.

நன்றி

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதியே

உங்கள் கவலை, ஆதங்கம், பாசம், மனிதர்களின் செயலுக்குக் குறை சொல்லாமல் அவர்களைப் புரிந்துகொள்ளும் விதம் - எல்லாவற்றையுமே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இருந்தாலும் சில முக்கிய விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் சித்தியுடன் உங்களுக்குப் பேச்சுவார்த்தை இருக்கிறதா? பாசம், உங்கள் சொந்தச் சகோதரியிடம் அதிகம் இருந்தாலும், இரண்டாவது தங்கையுடனும் பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? உங்கள் தந்தையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது? இதையெல்லாம் சரியாக எனக்குக் கணிக்கத் தெரியவில்லை. வாழ்நாள் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்துகொண்டே இருந்ததால் ஏற்பட்ட பயத்தில், பதுங்கி, அதிகம் பேச்சுவார்த்தை கொடுக்காமல் இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும், இப்போது உங்கள் நிலை மாறிவிட்டது. கொஞ்சம் தைரியமாக இருக்கலாம். திருமணம் நின்றுபோன அந்தத் தங்கையுடன் பேசி ஆறுதல் சொல்லுங்கள். சித்தியுடன் பேசுங்கள். ஆறுதல் சொல்லுங்கள். உங்கள் தங்கையை மணம் புரிந்துகொள்ளத் தயாராக இருக்கும் அந்தக் குடும்பத்துடன் பேசுங்கள். அவர்களிடமே ஆலோசனை கேளுங்கள். சித்தியோ, அந்தப் பெண்ணோ பேசத்தயாராக இல்லை என்றால் குன்றிப் போய்விடாதீர்கள். மறுபடியும் முயற்சி செய்யுங்கள். திருமணம் நின்றுபோன தங்கைக்கு உங்கள் ஆதரவைக் காட்டுங்கள். சத்திரம், சாப்பாடு என்று கொடுத்திருக்கும் அட்வான்ஸ் தொகை இழப்பு, உங்கள் தந்தையைப் பாதிக்கும். அது அவருக்கும் புரியும். கண்டிப்பாக ஏதேனும் வழிபிறக்கும். உங்களுக்கு இப்போது பாதுகாப்பு இருக்கிறது. பயம் இருக்கவேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற சோதனைகள் வரத்தான் செய்யும். அதை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். எந்த மாதிரி அணுகுமுறை அவசியம் என்பது ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டும்போதும் நமக்குப் புரிபடும். "ஆறுதல் சொல்லுங்கள்" என்று நான் சொல்வது, நீங்கள் செய்யவேண்டிய ஆக்கபூர்வமான செயல்கள். "கவலைப்படாதே" என்று சொன்னால் போதாது, கவலைப்படாமல் இருக்க "நானே உனக்குப் பார்த்து இன்னும் 2-3 மாதத்தில் திருமணத்தை முடித்து வைக்கிறேன்", "கவலைப்படாதீர்கள் சித்தி. கொஞ்சம் பணம் சேர்த்து இன்னும் மூன்று மாதத்தில் அனுப்பி வைக்கிறேன்" என்பது போல. Action oriented comfort.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்


பின்குறிப்பு: மறுபடியும் தொடர்புகொள்ள drvcvlistens2u@gmail.com என்ற முகவரிக்கு எழுதலாம்.

© TamilOnline.com