தேர்தல் முடிந்துவிட்டது. மக்கள் தம் தீர்ப்பைச் சொல்லிவிட்டனர். ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரிகிறது: மாற்றம் என்பது தவிர்க்கமுடியாதது. அதை மரியாதையோடு ஏற்போம். அந்த மாற்றம் நல்லதற்கான மாற்றமாக இருக்கட்டும்; மிக அதிக மக்களுக்கு மிக அதிக நன்மை தருவதாக, உலகில் அமைதியைக் கொண்டுவருவதாக இருக்கட்டும். அரசுக்கட்டிலின் வெகு அருகே வந்துவிட்ட ஒரு பெண்மணி அதில் அமராமல் போய்விட்டாரே என்கிற வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கண்ணாடிக் கூரையைத் தகர்க்க வேறொரு பெண்மணி வரவேண்டும் போல; வரட்டும், விரைவிலேயே அது நடக்கட்டும். ஆவலோடு காத்திருக்கிறோம்.
இதில் நமக்கேற்படும் பெரிய மகிழ்ச்சி ஒன்றுண்டு. ஏமி பெரா, துளசி கபர்டு ஆகியோர் மட்டுமே இருந்த சட்டமியற்றுனர் அணிக்கு, இப்போது கமலா ஹாரிஸ், பிரமீளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா என்று பல இந்திய அமெரிக்கர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவொரு நல்ல தொடக்கம். இவர்களில் சிலரும், நிக்கி ஹேலி, பாபி ஜிண்டால் ஆகியோரும் புதிய அரசின் முக்கியப் பதவிகளில் அமரலாம் என்பதும் மற்றொரு மகிழ்ச்சிதரும் நம்பிக்கை.
*****
இன்னொருவரையும் நாம் கவனிக்காமல் விடமுடியாது. அவர் 34 வயதான, மூன்று குழந்தைகளுக்குத் தாயான, சோமாலிய அமெரிக்கர், இல்ஹன் ஓமர். டெமாக்ரடிக் கட்சி வேட்பாளராக 80 சதவிகிதம் வோட்டுக்களுடன் மின்னசோட்டா மாநில சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர் 1995ல் அமெரிக்காவுக்கு அகதியாக வந்தபோது இவருக்குச் சிறிதும் ஆங்கிலம் தெரியாது. இந்த நாட்டின் இன, மத, மொழி வேறுபாடு கடந்த நல்லிணக்கத்தின் மீதான நமது நம்பிக்கையை இவரது தேர்வு மீண்டும் உறுதிசெய்கிறது. இல்ஹன் ஓமருக்கு நமது வாழ்த்துக்கள்!
*****
"நவீன விவசாய முறையால் விவசாயி தன்னை அழித்துக்கொள்வதோடு சுற்றுச்சூழலையும் அழிக்கிறான்" என்கிற அதிரவைக்கும் கருத்தைக் கூறுகிறார் பசுமைப்போராளி ரேவதி. புகார் செய்வதோடு நிற்காமல், உலகெங்கிலும் சுற்றியலைந்து, மண்ணுக்குப் புத்துயிர் கொடுக்கவும், விளைபொருளை விஷமற்றதாக்கவும் பயிற்சிகள் கொடுக்கிறார். இந்தியாவில் மட்டும் இவரால் 11 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளனர். இவரது நேர்காணல் ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டிய முக்கியமான தகவல்களைக் கொண்டது. தமிழ் இலக்கியத்தில் அழகியசிங்கரின் பெயர் அதிகம் அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க பெயர். 'விருட்சம்' என்பதாகத் தொடங்கிய 'நவீன விருட்சம்' என்னும் சிற்றிதழை விடாமுயற்சியோடு தனியொரு நபராக 28 ஆண்டுகள் நடத்தி வந்திருக்கிறார். அதன் நூறாவது இதழை வெளியிட்டுள்ள இந்தத் தருணத்தில் அவரோடு உரையாடினோம். அந்த நேர்காணல் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய உலகைப் பற்றிய சுவையான தகவல்களை நமக்குத் தருகிறது. இளம் சாதனையாளர் பற்றிய குறிப்புகள், சுவையான கதை, கவிதை, கட்டுரைகளோடு குளிர்நடை போட்டு வருகிறது இன்னொமொரு தென்றல்.
17வது ஆண்டில் முதல் இதழான இந்தத் தென்றல் வாசகர்கள், விளம்பரதாரர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்தினரின் அன்பையும் ஆதரவையும் கோரி உங்கள் கரத்தைத் தொடுகிறது.
வாசகர்களுக்குக் கிறிஸ்துமஸ் மற்றும் மிலாடி நபி வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
டிசம்பர் 2016 |