இராக்கில் நடக்கும் போர் இங்கே எதிரொலிக்கிறது. அதிபர் புஷ் அங்கே இருக்கும் படையை வலுப்படுத்தவும் நீட்டிக்கவுமாக அவசர நிதியாக 124 பில்லியன் டாலர் ஒதுக்கீடு கேட்டார். செனட் 51க்கு 46 என்ற ஓட்டுக் கணக்கில் இதை அங்கீகரித்தது. ஆனால், ஒரு நிபந்தனையுடன். அக்டோபர் 1ஆம் தேதி இராக்கிலிருந்து படைகள் திரும்பி வரத் தொடங்கவேண்டும் என்று எதிர்த்து வாக்களித்த டெமாக்ரட்டுகள் கூறினர். இந்த நிபந்தனையை எதிர்த்து என் வீட்டோவைப் பிரயோகிப்பேன் என்று மிரட்டினார் புஷ்.
'அதிபர் புஷ் மசோதாவைச் சமர்ப்பித்த 80 நாட்களுக்குப் பின் சரணாகதிக்கு நாள் குறித்திருக்கிறது செனட்டுடன் சேர்ந்து காங்கிரஸ். இது தோல்விக்கான சட்டம். 6000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் கமாண்டர்களையும் ஜெனரல்களையும் இங்கிருந்தபடியே வழிநடத்த இவர்கள் பார்க்கிறார்கள். போரோடு தொடர்பில்லாத செலவை இவர்கள் அதிகரிக்கிறார்கள்' என்று கடுமையாக விமர்சித்தார் வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ.
மிரட்டியவாறே புஷ் வீட்டோ செய்துவிட்டால் என்ன செய்வது என்று செனட் கவலைப்படும் அதே நேரத்தில், இராக் அதிபர் நூரி கமால் அல்-மாலிக்கி எதையுமே சொன்னபடி நிறைவேற்றவில்லையே என்ற கவலையில் இருக்கிறார் புஷ். கச்சா எண்ணெய் வருமானத்தை அங்குள்ள சுன்னிகள், ஷியாக்கள், குர்துகள் ஆகியோரிடையே நியாயமாகப் பங்கிட வேண்டும், சதாம் ஹ¤ஸைனின் பாத் கட்சிக் கொள்கைகளை நீக்கி, புதிய அரசில் சுன்னிகளுக்குப் போதிய இடம் தரம் வேண்டும் என்பவை அமெரிக்க அதிபரின் எதிர்பார்ப்புகளாகும். ஆனால் மாலிக்கியால் இவற்றுக்கான சட்டங்களைக் கொண்டுவர முடியவில்லை. இராக்கில் வன்செயல்களுக்கு பலியாகும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாததும் புஷ்ஷின் கவலைக்கு மற்றொரு காரணம்.
அமெரிக்க அதிபரின் வீட்டோவைக் குறைவான டெமாக்ரட்டுகளையே கொண்ட காங்கிரஸால் எதுவும் செய்யமுடியாது. அதே நேரத்தில் இந்த நிதி வேண்டுகோள் அதிபர் புஷ்ஷின் பிம்பத்துக்கு மக்களிடையே நன்மை செய்துவிடவில்லை. எனவே, இழுபறியில் இருக்கிறது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
***** பெரும்பாலான ஆசிய நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்புத் தேய்ந்துள்ளது. தற்போது ஒரு டாலருக்கு 40 ரூபாய் சில்லறை கிடைக்கும். 46 ரூபாய்களுக்கு மேல் இருந்த காலம் உண்டு. இதனால் வெளிநாட்டு இந்தியரின் டாலர் சேமிப்பு மதிப்பும் குறைந்து போய்விட்டது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பலசரக்கின் விலை ஏறிவிடும். அதே நேரத்தில் இந்தியாவில் செய்யப்படும் அதே வேலைக்கு அதிக டாலர் பணம் தரவேண்டும் என்பதால், வேலை 'பங்களூரு மயமாவது' குறையும். அதாவது, அமெரிக்காவில் இருக்கும் வேலை பறிபோவது குறையும்.
யூரோவுக்கு எதிராகவும் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதால், இது மொத்தத்தில் டாலரின் பலவீனத்தைக் குறிக்கிறது. டாலர் மட்டுமே மிக அதிகம் புழங்கும் பன்னாட்டுக் கரன்ஸியாக இருக்கும் நிலைக்குச் சவாலாகவே யூரோவைத் தோற்றுவித்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்தில் யூரோப்பிய ஐக்கியம் ஓரளவு வெற்றியடைந்துள்ளது. இதன் நீண்டகால விளைவுகள் என்ன என்று யோசிக்க அச்சமாகத்தான் இருக்கிறது.
*****
தென்றல் ஆசிரியர் மதுரபாரதியைத் துணைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ஆனந்த விகடன் வெளியிட்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் தகவல் களஞ்சியம் 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளது. இதை வெளியிட்டுப் பேசிய தமிழக முதல்வர் 'இது தகவல் களஞ்சியமல்ல, தமிழ்க் களஞ்சியம்' என்று கூறியுள்ளார். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை தனியார் வெளியீட்டகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழுக்கு இது ஒரு கொடை என்பதில் ஐயமில்லை.
***** உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராது, ஊனமுற்றோருக்கும் ஆதரவற்றோருக்கும் பணி செய்வதில் சாதனை புரிந்துவரும் 'அமர்சேவா சங்கம்' ஆயிக்குடி ராமகிருஷ்ணனின் நேர்காணல் நிச்சயம் மனதைத் தொடும். தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் தமிழ் அறிஞர், சொற்பொழிவாளர் உமையாள் முத்து அவர்களது நேர்காணலில் பல சுவையான தகவல்கள் உள்ளன.
***** வர்ஜீனியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பேராசிரியர் லோகநாதன் (53) ஒருவர். அவருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்குத் தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறது.
***** தென்றல் வாசகர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்!
மே 2007 |