அரங்கேற்றம்: அஞ்சனா ராஜாமணி
ஆகஸ்ட் 28, 2016 அன்று கலிஃபோர்னியா, சாரடோகாவில் உள்ள மக்காஃபீ தியேட்டர் அரங்கில் செல்வி. அஞ்சனா ராஜாமணி பரசுராமின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அஞ்சனா, குரு ஸ்ரீமதி லதா சுரேஷின் விஸ்வசாந்தி டான்ஸ் அகாதமி மாணவி. அஞ்சனாவின் தங்கை செல்வி. அதிதி பாடிய கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. முதலில் கணபதியைத் துதித்துப் புஷ்பாஞ்சலி செய்து பின் சக்ரவாஹ ராகத்தில் ஜதீஸ்வரம் வழங்கப்பட்டது. அடுத்து வந்த வர்ணத்தின் மணிமுடி போல் அமைந்தது நவரசங்களையும் நவராகங்களில் குழைத்து அளித்த 'நவரச நாயகியே'. இதற்கு அஞ்சனாவின் ஆட்டமும் அபிநயமும் சிறப்பு. தொடர்ந்து ஆடிய அன்னமாச்சார்யாவின் "தேவதேவம் பஜே", கோபாலகிருஷ்ண பாரதியின் "நடனம் ஆடினார்", ஊத்துக்காடு வேங்கடகவியின் "மரகதமணிமய சேவா" ஆகியவை வெகு அழகு. பாபநாசம் சிவனின் "மயில்வாஹனா" மோகன ராகத்தில் முருகனை அழைத்தது. இறுதியாக பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவனி தில்லானா நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

அரங்க அமைப்புச் செய்த அஞ்சனாவின் தாயார் திருமதி. ரம்யா பரசுராமின் கைவண்ணம் பாராட்டப்பட்டது. குரு ஸ்ரீமதி லதா சுரேஷ் (நட்டுவாங்கம்), திரு. டெல்லி கிருஷ்ணமூர்த்தி (பாட்டு), திரு. நாராயணன் (மிருதங்கம்), திருமதி. சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோரின் பக்கம் வாசிப்பு நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. அஞ்சனாவின் பாட்டி திருமதி. சகுந்தலா யக்ஞசங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

விஜயா ராஜாமணி,
கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com