ATMA: 12வது தேசிய மாநாடு
அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் (American Tamil Medical Association ATMA) பன்னிரெண்டாவது தேசிய மாநாடு 2016 செப்டம்பர் 2 - 4 ஆகிய நாட்களில் அட்லாண்டாவின் (ஜார்ஜியா) ஸ்டோன் மவுண்டன் அடிவாரத்திலிருக்கும் 'எவர்கிரீன் மாரியாட்' உல்லாசத் தலத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் மருத்துவர். திருமதி. கலை செல்லம் பார்த்திபன் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார். அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், கனடா மற்றும் தமிழ் நாட்டிலிருந்தும் மருத்துவர்கள் பங்கேற்றனர். அமெரிக்கத் தென்கிழக்கு மாகாணங்களுக்கான இந்தியத் தூதுவர் மாண்புமிகு நாகேஷ் சிங் அவர்கள் தலைவர் மரு. கலை அவர்களின் பொதுத்தொண்டையும், மாநாட்டின் வெற்றியையும் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.

செப்டம்பர் 2, வெள்ளிக்கிழமை மாலை, மாநாடு தொடங்கியது. தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பரதநாட்டியம், கர்நாடக இசை, தமிழ்த் திரையிசை, பாலிவுட் நடனம், கட்டபொம்மன், பாரதி, கபாலி, மு. கருணாநிதி உரையாடல் என்று கலகலப்பாக இருந்தது.

அடுத்த இருநாட்களிலும், காலைமுதல் நண்பகல்வரை அண்மைக்கால மருத்துவ வளர்ச்சி குறித்த தொடர்-மருத்துவக் கல்விப் பாடங்கள் தலைவர் கலை செல்லம் தலைமையில் நடந்தன. சனிக்கிழமையன்று, 'தூக்கக்குறைபாடுகள்' பற்றி மரு. சுஜந்தி ராஜாராம், 'கட்டுக்குமீறிய உடல்பருமன்' பற்றி மரு. வெங்கட காந்திமதிநாதன், 'மருத்துவத்தில் தனிச்சிறப்புப் பட்டங்கள்' பற்றி மரு. சரவணன் குப்புசுவாமி, 'செயற்கைக் கல்லீரலில் முன்னேற்றங்கள்' பற்றி மரு. ராம் சுப்ரமணியன், 'பெருமூளை ரத்தக்கட்டி' பற்றி மரு. கிருஷ்ணமூர்த்தி தம்புராஜ், ஆகியோர் பாடங்கள் நடத்தினர். சித்தமருத்துவக் கருத்தரங்கு ஒன்றை மரு. செல்வ ஷண்முகம் வழங்கினார்.

ஞாயிறன்று காலை 'இரண்டாம் வகை நீரிழிவுநோய்' பற்றி மரு. வெங்கட்நாராயண், 'இதய MRI' பற்றி மரு. செந்தில் குமார், 'மாரடைப்புக்குப் பின்' புதிய சிகிச்சைகள் பற்றி மரு. சுஜந்தி ராஜாராம், 'புதிய பணமாற்று முறைகள்' பற்றி மரு. ராமநாதன் ராஜு, 'HIV நோய்' பற்றி மரு. தீப்தா நெடுஞ்செழியன் ஆகியோர் பாடங்கள் நடத்தினர். மதியம், ஆத்மாவின் பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்த வருடத்துக்கான நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மாலையில், அட்லாண்டா இந்தியத் தூதரக அதிகாரி திரு. ஸ்ரீநிவாசன் தலைமையில் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பரிசளித்தல், மரு. ராமநாதன் ராஜு அவர்களின் சிறப்புரை, ஆண்டுமலர் வெளியீடு, குறிப்பிடத்தக்க பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதளித்தல் மற்றும் பலரின் உரைகளைத் தொடர்ந்து பின்னணிப் பாடகர்கள் சதிஷ் மேனன், கீது வேணுகோபால் மெல்லிசை நடந்தது.

ATMA 2005ல் அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்களால் தொடங்கப்பட்ட சேவை நிறுவனம். கடந்த 12 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மருத்துவ மற்றும் நலத்திட்டப்பணிகளைச் செய்துவருகிறது.

மங்களா ஐயர்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com