செப்டம்பர் 24, 2016 அன்று, கார்லண்டு டெக்சஸின் கிரான்வில் கலைமையத்தில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 6வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக 'ஐந்திணை' என்னும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரட்டப்பட்ட 75,000 டாலர் நிதி சென்னை 'உதவும் கரங்கள்' அமைப்பு நடத்தும் மருத்துவமனையின் ICU கட்டமைப்புக்கென வழங்கப்பட்டது. தவிர, பத்தாம் ஆண்டு திருக்குறள் போட்டிக்காக 7,500 டாலர் தரப்பட்டது.
ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களுடைய அகத்திணை உணர்வை நினைவுகூறும் வகையில் நடனங்கள் இடம்பெற்றன. காதல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், விரக்தி என்ற உணர்வுகளை நடனங்கள் சித்திரித்தன.
திணைக்கேற்ப காளி கோவில், கடற்கரை, மலையடிவாரம் எனக் காட்சியமைப்பை மாற்றினர். திறம்பட்ட லைட்டிங் எஃபெக்ட்ஸ் கூடுதல் அம்சமாக இருந்தது. 4D என்ற புதிய கருத்தாக்கம் நிஜ உணர்வை கொண்டுவருவதாக அமைந்தது. சங்க இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு டாக்டர். ரகுராமன் எழுதிய பாடல்களுக்கு வானதி ரகுராமன் இசையமைத்திருந்தார்.
முதலில் வில்லுப்பாட்டு மூலம் ஐந்திணைகளையும் விவரித்தார்கள். பெரியவர்களுடன், அமெரிக்காவில் பிறந்த 12ம் வகுப்புப் படிக்கும் மாணவரும் மாணவியும் வில்லுப்பாட்டில் பங்கேற்றனர்.
பெரும்பான்மையாகப் பெண்களும் சிறுமிகளும் பங்கேற்ற பல்வேறு நடனக் குழுக்களில் 80க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். ஒவ்வொரு நிலத்திற்கும் மூன்றுவிதமான நடனங்கள் இடம்பெற்றன. சிலம்பாட்டம், மீனவர் நடனம், கும்மி ஆகியவை இடையிடையே வந்து கலகலப்பூட்டின.
ஹூஸ்டனைச் சார்ந்த பொதுப்பணி ஆர்வலரும், உதவும் கரங்கள் அமைப்பின் அமெரிக்கப் பிரிவுத் தலைவருமான டாக்டர். பத்மினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ராஜன் ராதாகிருஷ்ணன் இவரை அறிமுகப்படுத்தினார். அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட நிதியுதவியை வேலு ராமன், விசாலாட்சி வழங்க பத்மினி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சி வடிவமைப்பு, பாடல்கள் தேர்வு, நடன அமைப்பு , பயிற்சி என அனைத்துப் பணிகளையும் ஈஸ்வர் நாட்யாலயாவின் கல்பனா ரவிசங்கர் ஏற்றிருந்தார். இவர் பரதநாட்டியத்தில் முதுகலை பயின்றிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக ஹேமா ஞானவேல் பணியாற்றினார். வினோத், அருண் குமார், அருண் பொன்னுசாமி, ராதிகா, ஸ்ரீராம், வெங்கடேசன், முத்தையா, அண்ணாமலை, உமா, ரம்யா, ராஜி பிரபாகர், கிருஷ்ணராஜ் உள்ளிட்டவர்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். கவிதை நடையில் மோனி வரவேற்புரை ஆற்றினார். ரம்யா வேலு தொகுத்து வழங்கினார். வேலு ராமன், விசாலாட்சி நன்றியுரை ஆற்றினர்.
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |