செப்டம்பர் 21, 2016 அன்று நியூ யார்க், நியூ ஜெர்ஸி, கனெக்டிகட் மும்மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர் ஐ.நா. சபையின் பன்னாட்டு அமைதி தின நிகழ்ச்சிகளில் பங்கேற்று 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்கினர். ஐ.நா. சபை தலைமையகத்தில் நடைபெற்ற 71வது அமர்வில் இந்த அமைதி தினம் அனுசரிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் மாணவர்களிடம் உரையாற்றுகையில், அமைதிக்கான 17 முக்கிய அம்சங்களை விவரித்தார். மேலும் பல தலைவர்களின் உரைகளையும் மாணவர்கள் கேட்டு ரசித்தனர்.
நோபல் பரிசுபெற்ற தவாக்கோல் கர்மன், லேமா க்போவி, ஷிரீன் எபாடி, நடிகர் லியனர்டோ டிகாப்ரியோ, டாக்டர் ஜேன் குடால், ஸ்டீவி வொண்டர், மைக்கேல் டக்ளஸ், மிடோரி கோட்டோ மற்றும் ரோம், லைபீரியா, சைப்ரஸ் நாடுகளின் ஐ.நா. பிரதிநிதிகளை மாணவர்கள் சந்தித்து உரையாடினார்கள்.
நியூ யார்க்கில் செயல்படும் வளர்தமிழ் இயக்கம் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தது அதன் தலைவர் திரு. அருள் வீரப்பன் "நம் தமிழ்க் குழந்தைகளுக்கு உலகத்தலைமை பற்றித் தெரிந்துகொள்ள இதனை ஏற்பாடு செய்தோம்" என்றார். திரு. ஞானசேகரன் (ஒருங்கிணைப்பாளர்), திரு. சிவகுமார் (செயலர்) ஆகியோர் இதில் உறுதுணையாக இருந்தனர்.
நியூ யார்க் தமிழ் அகடமி, குமாரசாமி தமிழ்ப் பள்ளி, திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி, அகரம் தமிழ்ப்பள்ளி, பாரதி தமிழ்ப் பள்ளி, கல்வி தமிழ்ப் பள்ளி மற்றும் சௌத் ப்ரன்ஸ்விக், மால்பரோ, ப்ளெய்ன்ஸ்பரோ, பிரிட்ஜ்வாட்டர், எடிசன், நூவர்க் நகரத் தமிழ்ப் பள்ளிகளின் 55 மாணவ மாணவியர் இதில்பங்கேற்றனர். ஆசிரியர்களும் உடனிருந்தனர்.
செய்திக்குறிப்பிலிருந்து |