நாமக்கல் செ. முத்துசாமிக்கு அமெரிக்காவில் விருது!
அக்டோபர் 8, 2016 அன்று உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா வாஷிங்டன் பகுதியில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்கச்செம்மல் செ. முத்துசாமி, (Ex.M.L.C.) பங்கேற்று, 'தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக, ஜூலை மாதத்தில் முத்துசாமி அவர்களுக்கு அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்தது. ஃபெட்னா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுந்தரம் நியூ ஜெர்சி மாநிலம் டிரென்டன் நகரில் நடந்த விழாவில் இந்த விருதை வழங்கினார். விழாவில் விருதினைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றிய முத்துசாமி அவர்கள், தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்களின் சார்பாகத் தாம் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் சிறுவர்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட 'தளிர்' ஆண்டுமலரை முத்துசாமி வெளியிட வேலு. சரவணன் பெற்றுக்கொண்டார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com