அரங்கேற்றம்: சினேகா நாராயணன்
அக்டோபர் 22, 2016 அன்று மாலை திருமதி. சுதா மற்றும் திரு. பிரேம் நாராயணன் தம்பதியரின் மகளான செல்வி சினேகா நாராயணனின் கீபோர்டில் கர்னாடக சங்கீத அரங்கேற்றம், நியூ ஜெர்சி மான்மௌத் நகரத்தின் கிராஸ்ரோடு வடக்கு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. வீணையின் சிறப்பான கமகவழியையொற்றிக் கீபோர்டு இசை நல்கும் Spring Nectar Academy தலைவர் குரு. என். முரளிகிருஷ்ணன் (என்.எம்.கே) அவர்களின் மாணவி சினேகா.

முக்கால அளவுகளிலும் பல தாளங்களிலும் மென்மையான மற்றும் கன ராகங்களிலும் பாடல்களை இசைத்து மகிழ்வித்தார் சினேகா. குறிப்பாக, சியாமா சாஸ்திரி மற்றும் கனம் கிருஷ்ணய்யர் போன்ற மகாவித்வான்களின் குருவான பச்சிமீரியம் ஆதியப்பாவின் பைரவி ராகத்திலமைந்த 'விரிபோணி' வர்ணம் கச்சேரிக்கு ஏற்றமிகு ஆரம்பத்தைக் கொடுத்தது. சிவபெருமான் மீதான கம்பீரநாட்டை ராகத்தில் அமைந்த மைசூர் மஹாராஜாவின் 'ஸ்ரீஜாலந்தரம்' ரசிகர் மனதில் இறைத்தேடலை ஏற்படுத்தியது. கனராகமான மாயாமாளவ கெளளையில் அமைந்த சுவாதித் திருநாளின் 'தேவதேவ கலயாமிதே' இறைவனை இறைஞ்சி அழைத்தது. அழகிய கரஹரப்பிரியாவில் அமைந்த தியாகப் பிரும்மத்தின் 'சக்கனி ராஜ', அங்கே இறைவன் அப்பொழுதே தோன்றியதுபோன்ற உணர்வை உண்டாக்கியது. பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் கதனகுதூகலத்தில் அமைந்த 'ரகுவம்சசுதா' இறைவனைக் கண்ட மெய்யடியார் புளகாங்கிதமடைந்த காட்சியை மனதில் கொணர்ந்தது.

திரு. விட்டல் ராமமூர்த்தி (லால்குடி ஜயராமனின் சீடர்) மற்றும் திரு. நெய்வேலி நாராயணன் (உமையாள்புரம் சிவராமனின் சீடர்) ஆகியோர் சினேகாவின் சன்னமான வாசிப்பின் நெளிவு சுளிவுகளுக்கேற்ப உடனொற்றிச் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

சினேகா தற்சமயம் நியூ ஜெர்சி சௌத் பிரன்ஸ்விக் மாநகர உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறார். இவர் வாய்ப்பாட்டு மற்றும் பரதநாட்டியத்திலும் தேர்ச்சியுடையவர்.

கார்த்திக் ராமசுவாமி,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com