அம்லு நடேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்டு 20, 2005 அன்று நிருத்தி யோல்லாஸ டான்ஸ் அகாதமி மாணவி அம்லு நடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் கேம்ப்பெல் ஹெரிட்டேஜ் கலையரங்கில் இனிதே நடந்தேறியது.

மாலை 4:00 மணிக்குத் துவங்கி, சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்துப் பாடல்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் செல்வி அம்லு அந்தப் பாடலின் கருத்தையும், சிறப்பையும் சிறந்த அபிநயத்துடன் எடுத்துரைத்த பின்னர் நடனமாடினார். இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் முருகன், சிவன், விஷ்ணு, துர்கை முதலான தெய்வங்களைப் பற்றிய பாடல்கள். முருகனைப் பற்றிய பாடலில் முருகன் வயோதிகராக வந்து வள்ளியிடம் தண்ணீர் கேட்டு, பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கோரும் லீலையையும், பழத்திற்காக உலகையே சுற்றி வந்து தனக்குப் பழம் கிடைக்காமல் கோபம் கொள்ளும் லீலையையும் செல்வி அம்லு சிறந்த அபிநயத்துடன் ஆடி, பார்ப்போர் மனதைக் கொள்ளை கொண்டார்.

ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியிலிருந்து 'வாரணமாயிரம்' பாடலுக்கு அம்லுவின் நடனம் மேலும் அழகு சேர்த்தது. முத்துத்தாண்டவரின் தில்லை நடராஜர் பற்றிய 'ஆடிக்கொண்டார்' பாடலுக்கு அக்னி போன்ற பின்னணித் திரை ஒளி அமைப்பு பாடலுக்கும் நடனத்திற்கும் மெருகூட்டியது. துர்கையைப் பற்றிய பாடலும், இறுதிப் பாடல்களில் ஒன்றான தில்லானாவும் மிகச் சிறப்பாக இருந்தன. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துப் பாடலுடன் மங்களமாக நிகழ்ச்சி நிறைவேறியது.

இந்நிகழ்ச்சிக்கு இந்துமதி கணேஷ் (நடன இயக்கம்), ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (வயலின் இசை) ஆகியோர் திறம்படத் துணை போயினர்.

உதயா பாஸ்கர் நாச்சிமுத்து

© TamilOnline.com