தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய இன்னிசை மாலைகள்
தமிழர் மறுவாழ்வு நிறுவனம் (Tamils Rehabilitation Organization) ஆழிப் பேரலை(சுனாமி)யால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மக்களுக்கு நீண்ட காலப் புனர்வாழ்வு அளிக்கும் முன்னணி அமைப்பு தமிழர் புனர் வாழ்வுக் கழகமாகும். UNICEF, UNHCR போன்ற சர்வதேச அமைப்புகள் கழகத்தின் சேவையைப் பெரிதும் பாராட்டியுள்ளன.

இந்த நிவாரணப் பணிக்கு நிதி திரட்டும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடத்திய டென்னஸி வாழ் A.S. ஐங்கரனும் குழுவினரும் அளித்த இன்னிசை மாலைப் பொழுதுகள் ஆகஸ்ட் 13-ம் திகதி சான்டா கிளாராவிலும், 14-ம் திகதி லாஸ் ஏஞ்சலஸிலும் நடைபெற்றன.

ஈழத்தமிழர்களின் மண்ணுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கும் சுனாமியால் மறைந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தி சான்டா கிளாரா நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.

ஐங்கரன் 'அச்சம் என்பது மடைமையடா' பாடலுடன் இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

சுனாமி தாக்கிய அடுத்த மணிப்பொழுதிலேயே, தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், கடல் திரும்பவும் தாக்குமோ என்றும் பயப்படாமல், கடலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உதவிக்குச் சென்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தொண்டர் களுக்கேற்ற பாடல் அல்லவா அது!

அதைத் தொடர்ந்து 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலை அளித்து மயக்கினார் நியூ ஜெர்சியிலிருந்து வந்த அனிதா கிருஷ்ணா. அடுத்த 3 மணி நேரத்துக்கு பழமையும் புதுமையுமாகப் பாடல்களை அளித்து வந்திருந்தோரைக் களிப்பில் ஆழ்த்தினர் ஐங்கரன் குழுவினர். இவர்களோடு இசை விருந்து அளித்தவர் கள் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வாழும் ஆனந்தனும், பிரபுவும், இசையோடு வளர்ந்து வரும் பிரபுவின் 9 வயது மகள் ஸ்ருதியும் ஆவர். ஐங்கரன், ஆனந்தன், பிரபு ஆகியோரோடு இணைந்து பல பாடல்கள் பாடினார் அனிதா கிருஷ்ணா. பாடல்களுக்குத் தகுந்த துணையாக, டெக்ஸாஸிலிருந்து வின்சென்ட் (கீ போர்டு), சிகாகோவிலிருந்து ஹரினிகேஷ் (தாள வாத்தியங்கள்), சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிலிருந்து விஜயகுமார் (கீபோர்டு) இணைந்து வாசித்தனர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய முரளி (TRO தொண்டர், சியாட்டில்) மற்றும் சங்கரன் 'ஷங்கி' சுந்தரம் நிகழ்ச்சிக்கு மெருகேற்றினர்.

ஷங்கி பலகுரல் பேச்சு மன்னன். ஐங்கரன் பல்வேறு குரல்களில் பாடக்கூடியவர். இருவரும் சேர்ந்தால் சுவைக்குக் கேட்கவா வேண்டும்? MGR, பாலையா, நம்பியார், ரஜனிகாந்த், பாக்யராஜ் போன்ற நட்சந்திரங் களைக் கண்முன் நிறுத்தினார் ஷங்கி. அவர்கள் C.S. ஜெயராமன், P.B ஸ்ரீனிவாஸ், A.M ராஜா, T.M செளந்தரராஜன், கண்டசாலா, S.P பாலசுப்ரமணியம் ஆகியோரின் குரல்களில் பாடி மகிழ்வித்தார் ஐங்கரன். அது மட்டுமில்லாமல் 'சபாஷ் மீனா' படத்திலிருந்து 'காணா இன்பம் கனிந்ததேனோ' பாடலை T.A. மோதி (ஆண்) குரலிலும் P.சுசீலா (பெண்) குரலிலும் இனிதாகப் பாடி கரகோஷம் வாங்கினார் ஐங்கரன்.

மறுநாள் (ஞாயிறு) மாலை லாஸ் ஏஞ்சலஸ் ரசிகர்களை மகிழ வைத்தனர் இதே இசைக் குழுவினர் அந் நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்தவர் கணேஷ்வரா. எல்.ஏ. வாழ் பாலாஜி திருமலையும் குமாரநாயகமும் ஐங்கரனோடும் அனிதாவோடும் சேர்ந்து பாடல்களை வழங்கினர்.

ஐங்கரன் பாடிய பல பாடல்கள் பழைய இனிய நினைவுகளை ஞாபகமூட்டின. 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?' மலை நாட்டுப் பாட்டி வீட்டருகேயுள்ள சினிமாவில், பனிக்குளிரில் சித்தப்பாவுடன் 'நிச்சய தாம்பூலம்' பார்த்த ஞாபகம். 'காலங்களில் அவள் வசந்தம்' கல்யாணத் துக்கு வந்திருந்த சிறுவர் சிறுமியரை சித்தப்பா 'பாவமன்னிப்பு'க்கு அழைத்துச் சென்ற நாளைக் கண்முன் நிறுத்தியது. சித்தப்பா இவ்வுலகை விட்டுப்போய் சில வருடங்கள். நாங்களோ நம் நாட்டைப் பிரிந்து எத்தனையோ வருடங்கள். நாட்டைப் பிரிந்தோம், ஆனால் மறக்கமுடியுமா?

ஈழத்தின் வடகிழக்குப் பகுதிகளில் வாழும் நம்மவர்களை முதலில் யுத்தம், இப்போது இயற்கை சோதனைக்குள்ளாகியது. அவர் களுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அமைந்த இந்த விழாவுக்கு வந்திருந்த புனர் வாழ்வுக் கழக அமைப்பின் அமெரிக்கத் தலைவர்/தொண்டர் Dr. அருள் ரஞ்சிதன் ஈழத்தில் தாம் சந்தித்த தொண்டர்களைப் பற்றியும் அங்கு நடக்கும் பல்வேறு நிவாரணப் பணிகளைப் பற்றியும் மனமுருகப் பேசினார்.

அவரது இலட்சியம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற ஒன்று இல்லாமல் போவதேயாம். இதென்ன அப்படிப்பட்ட இலட்சியம் என்று கேட்கிறீர்களா? பல சோதனைகளுக்குள்ளாகியிருக்கும் நம் மக்களுக்கு நாம் அளிக்கும் உதவியினால் அவர்கள் வருங்காலத்தில், ஒருவரிடமும் கையேந்தாத நிலை உருவாக வேண்டும்; தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு வேலையில்லாத நிலை வரவேண்டும்; இந்த இலட்சியம் நிறைவேற ஒவ்வொருவரும் தம்மாலான உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த இலட்சியத்தை முழுமையாக்குவதே நம் கடமை.

மேலும் விவரம் அறிய: www.troonline.org

நளாயினி குணநாயகம்

© TamilOnline.com