Inclusive World என்னும் லாபநோக்கற்ற அமைப்பு கலிஃபோர்னியா மில்பிடாஸ், கூபர்டினோ இடங்களில் நான்கு ஆண்டுகளாக இலவசத் தொண்டாற்றி வருகிறது. இது சமுதாயத்தில் வாய்ப்புக் கிடைக்காத 13 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் திறமையைக் கண்டறிந்து, பயிற்சியளிக்கிறது. பின்னர் அவர்கள் அலுவலகங்கள்/விற்பனை நிலையங்களில் வேலை செய்யலாம்; கலை/கைவேலைகளில் திறன்பெற்றுச் சுயதொழில் நடத்தலாம்; தன்னார்வத் தொண்டர்களாகப் பணிசெய்யலாம். இவற்றின் மூலம் அவர்கள் சமுதாயம் மதிக்கும் குடிமக்களாக வாழ வழி ஏற்படுத்துவது இவ்வமைப்பின் நோக்கம்.
இன்க்ளூசிவ் வேர்ல்ட் மறுவாழ்வு மையத்தை மூன்று பெண்மணிகள் சேர்ந்து தொடங்கினர். திருமதி. மது கிருஷ்ணன்: சிலிகான் வேலியில் IT மென்பொறியாளர் வேலையை உதறிவிட்டு, சமுதாயத் தொண்டாற்ற விரும்பிவந்து
இந்த அமைப்பைத் தோற்றுவித்தார்; திருமதி. தீபா லக்ஷ்மிநாராயணன்: சிலிகான் வேலியில் IT தகவல்தொடர்புத் துறையில் ப்ராஜெக்ட் மேனேஜர்; திருமதி. ஸ்வப்னா ஐயர்: சிலிகான் வேலியில் IT நிறுவனத்தில் மென்பொறியாளர்.
இவர்களோடு கைகோத்து கணினிப் பொறியாளர்கள், கலை ஆர்வலர்கள், கைவினைப் பொருள் தயாரிப்பில் தேர்ந்தவர்கள், ‘ஆட்டிசம்' துறை அனுபவசாலிகள், உயர்நிலைப்பள்ளி சீனியர் மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இப்பணியில் தன்னார்வலராக உதவுகின்றனர்.
ஷீரடி சாய் பரிவார் கோவில் (1221, கலிஃபோர்னியா சர்க்கிள், மில்பிடாஸ்) மற்றும் 1510 சென்டர் பாயின்ட் டிரைவ், மில்பிடாஸ் ஆகிய இடங்களில் சனி, ஞாயிறுகளில் மதியம் 1 மணிமுதல் 6 மணிவரையில் 2 அல்லது 2.30 மணிநேரம் வகுப்புகள் நடக்கின்றன. இதுவரை பைதான் கணினிமொழியை 7 பேரும், ஸ்கிராட்ச் புரொகிராமை 10 பேரும் கற்றுள்ளனர்.
கலை/கைவேலை வகுப்புகள்: * அச்சுக்களால் பூக்கள்/படங்கள் பதித்த அன்பளிப்புத் துணி/டோட்பைகள் * கேன்வாஸ் பெயிண்டிங் * களிமண் விளக்குகளுக்கு வண்ணம் பூசுதல் * டெரகோட்டா/களிமண் நகைகளுக்குப் பல டிசைன்களில் வண்ணம் பூசுதல் * வாழ்த்து மடல்கள் தயாரித்தல் * 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அலுவலக வேலைகளில் நேரடிப் பயிற்சி பெற்று பிறகு ஊதியம் பெறும் வேலைகளில் அமர்ந்துள்ளனர்; பெண்கள் ஸ்கௌட் ஆஃப் சான் ஹோஸே, வாழ்வுக்கலை, கணக்கியல்துறை, அக்செஸ் பிரெய்லி ஆகிய இடங்களில் அலுவலகப் பணிகள், மெய்ப்புப் பார்த்தல், டேடா என்ட்ரி துறைகளில் உதவுகின்றனர்.
இங்கே பயில்பவர்களுக்குத் தேவையான திரைச்சீலை, வண்ணங்கள், தூரிகைகள் மற்றும் உபகரணங்களை ‘இன்க்ளூசிவ் வேர்ல்ட்' விலையின்றிக் கொடுக்கிறது. மாற்றுத்திறனாளிகள் முடித்துக் கொடுத்த படைப்புகளை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தில் மீண்டும் பயிற்சிக்கான பொருள்களை வாங்கச் செலவிடுகிறது.
இலையுதிர் கால வகுப்புகள் செப்டம்பர் 10, 2016 அன்று துவங்கின. இந்த வகுப்புகளில் சேரவும், தன்னார்வத் தொண்டர்களாக உதவவும் விரும்பும் உயர்நிலைப்பள்ளி சீனியர் மாணாக்கர்கள் info@inclusiveworld.org என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்துகொள்ளவும். தொண்டுசெய்யும் மாணவர்களுக்கு “வாலண்டியர் மணித்துளிகள்” கிரெடிட் கிடைக்கும்.
அதிக விவரங்களுக்கு வலைமனை: www.inclusiveworld.org முகநூல்: fb/InclusiveWorld
ஆர். கிருஷ்ணன், சான் ஹோஸே |