அரசனான பிரஹலாதன் ஸ்ரீமன் நாராயணரின் பக்தன் மட்டுமல்ல, அறவழியில் நிற்பவன், கொடை வள்ளல். எவரேனும் உதவி கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லவே மாட்டான்.
பிரஹலாதனைச் சோதிக்க எண்ணிய இந்திரன் ஒருமுறை ஓர் ஏழை பிராமணர் வடிவம் எடுத்து வந்தான். அவரை நமஸ்கரித்த பிரஹலாதன், "நான் என்ன செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்?" என்று கேட்டான். "ஓ ராஜா! உங்கள் நற்குணங்களை எனக்குத் தானமாகத் தரவேண்டும்" என்றார் பிராமணர். "அப்படியே ஆகட்டும். எனது நற்குணங்களை உமக்கு தானமாகத் தந்தேன்" என்றான் பிரஹலாதன்.
பிராமணர் வெளியே செல்லுகையில் கூடவே ஓர் அழகிய வாலிபனும் அரசவையிலிருந்து வெளியே போவதைப் பிரஹலாதன் பார்த்தான். "ஐயா, நீங்கள் யார்?" என்று அவனிடம் கேட்டான். "நான்தான் புகழ். உங்கள் நற்குணம் போனபின் உங்களிடம் கீர்த்தி இருக்க முடியாது" என்றான் இளைஞன். அவனைப் போக அனுமதித்தான் பிரஹலாதன்.
சில நொடிகளில் மற்றோர் அழகிய நபரும் அரசவையை விட்டு வெளியேறப் போனார். "தாங்கள் யாரென்று நான் அறியலாமா?" என்று கேட்டான் பிரஹலாதன். "நான்தான் வீரம். நற்குணமும் புகழும் இல்லாத இடத்தில் நானெப்படி இருப்பது! நான் போகிறேன்" என்றான் அவன். அவனையும் போக அனுமதித்தான் பிரஹலாதன்.
அடுத்து அழகிய பெண்ணொருத்தி விரைந்து வெளியேறத் தொடங்கினாள். "அம்மா, நீங்கள் யார்?" என்று பிரஹலாதன் கேட்டான். "என் பெயர் ராஜ்யலட்சுமி. இந்த அரசின் தேவதை. நற்குணம், புகழ், வீரம் அனைத்தும் போனபின் என்னால் இங்கு இருக்கமுடியாது" என்றார் அந்தப் பெண்மணி.
பின்னோடு மற்றொரு பெண்மணி கண்களில் கண்ணீரோடு போவதைப் பிரஹலாதன் பார்த்தான். "அன்னையே! தாங்கள் யார்?" என்றான். "மகனே நான் தர்மதேவதை. எங்கே நற்குணம், புகழ், ராஜ்யலட்சுமி ஆகியோர் இல்லையோ அங்கே நான் இருக்கமாட்டேன்" என்றார் அவர்.
அவரது பாதங்களில் பிரஹலாதன் விழுந்தான். "அம்மா, என்னால் நற்குணம், புகழ், வீரம், ராஜ்யலட்சுமி இவர்களில் யாரும் இல்லாமல் இருக்கமுடியும், ஆனால், நீங்கள் இல்லாமல் இருக்கமுடியாது. உங்களை நான் எப்படிப் போக அனுமதிப்பேன்? தர்மத்தைப் பாதுகாப்பது அரசனின் கடமையல்லவா? இவ்வுலகுக்கு ஆதாரம் தர்மம்தான். அன்புகூர்ந்து போகாதீர்கள் அம்மா" என்று பிரஹலாதன் மன்றாடினான்.
அங்கேயே இருக்கத் தர்மதேவதை ஒப்புக்கொண்டார். உடனே, முன்னர் வெளியே சென்ற நால்வரும் அரசவைக்குள் திரும்பிவந்தனர். "தர்மதேவதை இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது. எங்களை உன்னோடு இருக்க அனுமதிக்கவேண்டும்" என்று பிரஹலாதனிடம் வேண்டினர்.
பிரஹலாதனின் பெருமையை உலகுக்கு உணர்த்தவே இந்திரன் இவ்வாறு சோதித்தான். பிரஹலாதன் தர்மத்தை எப்போதும் கடைப்பிடித்து வாழ்ந்தான்.
நன்றி: சனாதன சாரதி, டிசம்பர் 2015
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |