இந்தியத் தாயும் அமெரிக்க மகனும்
காலையில் எழுந்ததுமே கரண்ட் இல்லை. இப்போ வரும் அப்போ வரும் எனக் காத்திருந்ததில் மணி 9 ஆகிவிட்டது. நிஷா, "மாமி இன்னிக்கு கரண்ட் கிடையாது. ஏதோ பெரிய ப்ராப்ளமாம். ரிப்பேர் செய்ய நிறைய நேரம் ஆகும் போலிருக்கு. வந்தால் சாயங்காலம் நாலு மணிக்கு மேலதான் வரும் போலிருக்கு" என அபாய அறிவிப்பைப்போல் ஃபோனில் பேசி வைத்துவிட்டாள்.

நிஜமாகவே இது எனக்கு அபாய அறிவிப்புதான். நேற்றிரவே இட்லி, அடை பெசரட்டு எல்லாம் அரைக்க ஊறப்போட்டிருந்தேன், காலையிலேயே அரைக்க எண்ணி. இப்போ என்ன செய்வது? நாளைக் காலை என் மகன் அமெரிக்காவிலிருந்து வருகிறான். 15 நாட்களுக்கு முன் திடீரென ஃபோன் செய்து "அம்மா, இன்னும் பதினஞ்சு நாளில் நான் அங்கு வருவேன். ஆஃபீஸ் விஷயமா. அங்கிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா போகணும். இந்தியாவிலிருப்பதே 10 நாள்தான். டிக்கெட் வந்தப்புறம் ஃபோன் செய்கிறேன்" என்றான்.

போனவாரம் ஃபோனில் இரண்டு நாட்கள் என்னுடன் இருப்பதாகவும் மீதி நாட்கள் அவன் செல்லவேண்டிய ஊர்களுக்குச் சென்றுவிட்டு, நேராக அமெரிக்கா திரும்பத்தான் நேரம் இருக்கும் என்றும் சொன்னான். பத்துலட்சம் எதிர்பார்த்த லாட்டரியில் பத்தாயிரம் ரூபாய் விழுந்ததுபோல்! ஆனாலும், எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நாளைக்காலை அவன் வந்தால் அவனுக்குப் பிடித்த இட்லி, சட்னி செய்யவேண்டும். அவனுக்கு பெசரட்டு மிகவும் பிடிக்கும். அவன் சிறுவனாக இருந்தபோது திருப்பதி செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் பெசரட்டுக்கு மத்தியில் உப்புமா வைத்துக் கொடுத்தார்கள். அதிலிருந்து என் மகனுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை டிஃபன், சாப்பாடு எல்லாம் இந்த உப்புமா பெசரட்டுதான். அடையும் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

எல்லாத்துக்கும் அரைக்கணுமே என்ன செய்வது என யோசித்ததில், வெகுநாளுக்கு முன், தவறு தவறு, வெகு வருடங்களுக்கு முன் உபயோகித்த ஆட்டுக்கல், குழவி இருந்தது. அதை எடுத்து பால்கனியில் போட்டேன். ஒரே அழுக்காக இருந்தது. தண்ணீர் ஊற்றித் தேய் தேய் எனத் தேய்த்ததில் நன்றாகச் சுத்தமாயிற்று. இதைச் செய்துமுடிக்கவே மதியம் 1 மணி ஆகிவிட்டது.

உச்சிவெயிலில் உட்கார்ந்து எல்லாவற்றையும் அரைத்து எடுத்ததில் மாலை ஆகிவிட்டது. அரைத்து முடித்த கையோடு அவனுடைய அறையையும் சுத்தம் செய்து கர்ட்டன் எல்லாம் புதிதாகப்போட்டு, படுக்கை சுத்தம் செய்ததும் அறையே புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது.

அவன் அமெரிக்கா போய் நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. திடீரென என் கணவர் இறந்துவிட, இருந்த ஒரே மகளும் அமெரிக்கா போய்விட நான் தனிமைப்பட்டுப் போனேன். ஆனால் நான் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியை வேலை என் கவலைகளை மறக்கச் செய்தது. மகன் ஒவ்வொரு தடவை ஃபோன் செய்யும்போதும் அங்கு வந்துவிடுமாறு கூறுகிறான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் அன்பும் பரிவும், ஓய்வு பெற்றபின் டியூஷன் எடுக்கும் குழந்தைகளும் என்னை இங்கேயே கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

அதிகாலையில் நான் வைத்திருக்கும் தொட்டிகளில் பூக்கும் பூவே ஒரு பரவசம் தான். மல்லி, சாமந்தி, அரளி, செம்பருத்தி எல்லாம் எழுந்தவுடன் எனக்கு 'குட்மார்னிங்' சொல்லும். பிறகு புறாக்கூட்டம் வந்துவிடும். அதற்கு தானியம் போடுவேன். சமையல் ஆனவுடன் காகத்துக்குச் சாதம் வைக்கும்போது, அணில்கள் குடும்பத்துடன் வந்து பழம், கொட்டைகள் எல்லாம் வேண்டும் என்பதுபோல் கீச்சிடும். இந்த ரம்யமான சூழ்நிலையை விட்டுவிட்டு நான் எப்படி அவன் இருக்குமிடத்திற்குச் செல்லமுடியும்!

ஏதோ இரண்டுநாளாவது என்னுடன் இருக்கப் போகிறானே என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். அவனுடன் இந்த நான்கு வருட விஷயங்களைப் பேச வேண்டும். என்னென்ன விஷயங்களைச் சொல்லவேண்டும் என்று மனதிலேயே பட்டியலிட்டேன். எல்லாம் முடித்து, இரவு உணவு உட்கொண்டு படுக்கும்போது மணி 11 ஆகிவிட்டது. வெயிலில் உட்கார்ந்து கொண்டு அரைத்ததில் தலைவலியும் கை எரிச்சலும் சேர்ந்துகொண்டது. தலைவலிக்கு மாத்திரை போட்டுக்கொண்டு, எரியும் கைக்குச் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு படுத்தேன். தூக்கமே வரவில்லை. எப்பொழுது பொழுது விடியும், எப்போது மகன் 'அம்மா' என்று கூப்பிட்டுக்கொண்டு வரப்போகிறான் எனப் பொழுதுவிடியக் காத்திருந்தேன்.

எப்போதும்போல் பொழுது விடிந்து பால், பேப்பர் எல்லாம் வந்துவிட்டன. இட்லி, சட்னி, பில்டர் காஃபியும் எல்லாம் ரெடி. உள்ளும் வெளியுமாக நடந்து கொண்டிருந்தேன். எங்கேயாவது கார் சப்தம் கேட்டாலே என் மகன்தான் வருகிறான் என்று நினைத்து ஓடிப்போய்ப் பார்த்தேன்.

விடிந்து இவ்வளவு நேரமாகியும் இன்னும் வரவில்லையே என யோசித்துக் கொண்டிருக்கும் போது ஃபோன் அடித்தது. மகன்தான் பேசினான். "அம்மா, கார்த்தால 9 மணிக்குத்தான் வந்தேன். என் ஆஃபீஸில் ரூம் போட்டிருக்கிறார்கள். நான் மீட்டிங்கில் இருக்கிறேன். இன்னிக்கே டெல்லி போகணும். அதனாலே நான் ரெண்டு மணிக்கு வந்துவிட்டு ரெண்டரைக்கு கிளம்பிடுவேன்."

"சாப்பிட..." என்று நான் இழுத்தபோது, "அம்மா.. அதெல்லாம் எதுவும் வேண்டாம். டீ போதும். அதுவும் பிளாக் டீதான். அது மாத்திரம் போதும்" என்றான்.

15 நாட்களாக அவனுக்கு என்னென்ன பிடிக்கும் எனப் பார்த்துப் பார்த்து சாமான் வாங்கியது, அவன் அறையைச் சுத்தப்படுத்தி உறை புதிதாகப் போட்டது, உச்சிவெயில் தலையில் பட அரைத்தது, இரவு எரிச்சலூட்டிய கைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு தலைவலிக்கு மாத்திரை போட்டுக்கொண்டது என எல்லாம் நினைவுக்கு வந்தன. கையில் இன்னும் தேங்காய் எண்ணெயின் வாசனை இருக்கிறது. சிவந்துபோன கைகளைவிட மனம் அதிகமாக வலித்தது.

சுதா ஹரன்,
பெங்களூரு

© TamilOnline.com