அத்தியாயம் – 1 அது ஒரு காலைப்பொழுது. வாரதினம் ஆதலால் காலை வேளையில் அருணின் அம்மா பம்பரம்போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். தந்தை ரமேஷ் கீதாவுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தார். "என்னங்க, அருண் எழுந்துட்டானா? ஸ்கூலுக்கு நேரமாச்சே."
"அவன் குளிக்கிற சத்தம் கேட்டதே. வந்திருவான். ஸ்கூலுக்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கு." ரமேஷ் சொன்னதைச் சட்டை செய்யாமல், "அருண்! நேரமாச்சு வா" என்று கீதா கத்தினார்.
ரமேஷ் காதைப் பொத்திக்கொண்டு, "இப்படிக் கத்தணுமா? கொஞ்சம் மெதுவா பக்கத்துல போய்ப் பேசேன்," என்றார்.
"கத்தினாதான் நீங்கல்லாம் கவனிக்கறீங்க. என்ன பண்றது! அருண், அருண்!"
"அம்மாவும் பையனும் என்ன வேணும்னா பண்ணிக்கங்க. என்னை விட்றுங்க" என்று சொல்லிவிட்டு, செய்தித்தாளை எடுத்துப் படிக்க உட்கார்ந்தார். அவருக்கு காலையில் குறுக்கெழுத்து போடுவது ரொம்பவும் பிடிக்கும். அவர் டைனிங் டேபிள் அருகில் அமர்ந்ததும் அவர் காலடியில் பக்கரூ வந்து படுத்துக்கொண்டான்.
"அப்பா, குட் மார்னிங்" என்ற குரல் கேட்டுத் திரும்பினார். அருண், குளித்துவிட்டு பள்ளிக்குப் போகத் தயாராக வந்துநின்றான்.
"குட் மார்னிங், கண்ணா. போய் டிஃபன் சாப்பிடு."
"க்ராஸ்வேர்டு போடறீங்களா, அப்பா?"
"ஆமாம், கண்ணா. வா, நாம சேர்ந்து போடலாம்."
அருண் சமையலறைக்குள் சென்று படபடவென்று சீரீயலை ஒரு வட்டிலில் போட்டுக்கொண்டு வந்து, அப்பாவின் அருகே உட்கார்ந்தான்.
"உட்கார்ந்துட்டீங்களா ரெண்டு பேரும்!" என்று சொல்லிக்கொண்டே கீதா வந்தார். "இன்னிக்கும் அதே சீரீயலா? பிரெட் சாப்பிடு அருண். எப்போதும் அதையே சாப்பிடாதே."
"நாளைக்கு அம்மா, ப்ளீஸ்" என்றான். கீதா சற்றே எரிச்சலுடன் ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றார்.
அம்மா உள்ளே போனபின், "என்ன குறிப்பு அப்பா?" என்று, சீரீயலை மென்றுகொண்டே கேட்டான்.
"English Word. 11 Letters. Accidental Find" என்று சொன்னார்.
"ம்ம்ம்… Accidental Find? அப்படின்னா?"
"அப்படினா, எதையோ தேடப்போய், வேறேதோ ஒன்றைக் கண்டுபிடிப்பது."
"ம்ம்ம்…11 எழுத்துக்கள். உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"இன்னும் ரெண்டு க்ளூ சொல்லுங்க?"
"S-ல ஆரம்பிச்சு Y-ல முடியுது."
"Sanctity?"
"அதுல 11 எழுத்து இருக்கா?"
"அம்மாக்குத் தெரியுமா?" என்று கேட்டான் அருண்.
"தெரியாதுன்னு நினைக்கிறேன்" என்று உரக்க கீதாவின் காதில் விழும்படி கிண்டலுக்குச் சொன்னார். ரமேஷ் எதிர்பார்த்துபோல் கீதா வந்து, "என்னது? எனக்குத் தெரியாதா? எங்கே கேளுங்க பார்ப்போம்?" என்று பதில் கொடுத்தார்.
"அம்மாவுக்கு எல்லாம் தெரியும்."
"அம்மா, உங்களுக்கு இதுக்கு விடை தெரியலேன்னா?" என்று அருண் கேட்டான்.
"தெரியலேன்னா அப்பாவும் பையனும் லன்ச்சும் டின்னரும் நீங்களே பார்த்துக்க வேண்டியதுதான்," என்று சிரித்துக்கொண்டே கீதா சொன்னார். அருண் க்ளூவை மீண்டும் சொன்னான்.
"11 letters. Accidental Find…" என்று பலமுறை தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். முணுமுணுத்துக்கொண்டே விரல்விட்டு எண்ணிப் பார்த்தார். அப்பாவைப் பார்த்து அருண் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
"Serendipity" சடாரென்று சொன்னார் கீதா.
"அம்மா சொன்னது சரியா?"
"அதென்ன, ‘சரியா?’ அம்மா என்றைக்கும் கரெக்ட்தான்," என்று புன்சிரிப்போடு கீதா சொன்னார்.
ரமேஷும், "அருண், அம்மா சொன்னது கரெக்ட்" என்றார்.
"சூப்பர் அம்மா!"
"ஆமாம் கண்ணா, என்னைக்குமே நான் சூப்பர்தான். இன்னும் அஞ்சு நிமிஷத்துல பள்ளிக்கூடம் கிளம்பணும். டைம் ஆச்சு."
"அம்மா, Serendipityக்கு உதாரணம் ஒண்ணு கொடுங்களேன்."
கீதா சற்று யோசித்துவிட்டு, "நான் அருணின் சாக்ஸைத் தேடும்போது அவன் ஒளிச்சுவச்சிருந்த ஹலோவீன் மிட்டாய்களைப் பார்த்தேன்" என்று சொல்லிச் சிரித்தார். அருண் அசட்டு முழிமுழித்தான். அப்பாவும் அம்மாவோடு சேர்ந்து சிரித்தார். அருண் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடினான்.
அருணுக்கு அன்று அம்மா சொன்ன அர்த்தம் புரிந்ததோ என்னவோ தெரியவில்லை, ஆனால், அவனது வாழ்க்கையிலும் Serendipitious சம்பவம் ஒன்று நடக்கவுள்ளது அவனுக்கோ, அவனது பெற்றோர்களுக்கோ அப்பொழுது தெரியாது.
(தொடரும்)
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |