மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கழுத்தில் விழுந்த பொன்முடிச்சு
துரியோதனன் பாண்டவர்களுக்குச் செய்த தீங்குகளில் மிகப்பெரியதான சூதாட்ட நிகழ்வைப் பார்ப்போம். தருமன் சூதாடுவதற்கு ஏன் ஒப்புக்கொண்டான் என்பது குறித்துச் சொல்லும்போது, 'ஒரு சபையில் ஒரு மன்னனைச் சூதாட அழைத்தால் அதை அவன் மறுப்பது வழக்கமன்று’ என்ற கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறது. தருமபுத்திரனை, அவனுக்கே சம்மதமில்லாத சூதாட்டத்தில் சிக்கவைத்தது இந்தச் சம்பிரதாயம் மட்டுமேயன்று. இதைவிடவும் வலுவான காரணம் ஒன்றிருந்தது. அந்தக் காரணத்திலிருந்து இதைத் தொடங்குவோம்.

தருமர் மன்னனாக பட்டத்துக்கு வந்தபோது அவனுடைய வயது 46 என்று டாக்டர் K.N.S. பட்நாயக் கணக்கிடுகிறார். காண்டவ வனத்தை எரித்தபோது 58-59 வயது என்றும்; மயன் நிர்மாணித்த மயஸபையில் புகுந்தபோது 60 வயது என்றும்; ராஜசூய யாகத்தை நடத்தும்போது 76 வயது என்றும் கணக்கிட்டுள்ளார். எனவே, இந்திரப்பிரஸ்தத்தைப் பதினாறு ஆண்டுகாலம் ஆண்டபிறகு ராஜசூய யாகம் நடைபெற்றிருக்கிறது. ராஜசூய யாகத்தின்போதுதான் சிசுபால வதமும் நடைபெறுகிறது. யாகத்தின் முடிவில் அங்கே எழுந்தருளிய வியாசரைப் பூஜித்து அவரிடம், "பிதாமகரே! திவ்யம், ஆந்தரிக்ஷம், பார்த்திவம்* என்று மூன்றுவகை உத்பாதங்களைப் பற்றி பகவானான நாரத முனிவர் சொல்லியிருக்கிறார். அவற்றிற்கு மிகப்பெரிய பயன் வருவது திண்ணம். சிசுபாலன் இறந்ததனால் அந்தப் பெரிய உத்பாத பயமானது அடங்கிற்றோ" என்று தர்மபுத்திரன் கேட்கிறான். (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 74, பக்: 227). (* திவ்யம் ஆந்தரிஷம், பார்த்திவம் என்பதை கிஸாரி மோகன் கங்கூலி, "celestial, atmospherical and terrestrial" என்று மொழிபெயர்க்கிறார்.) இதற்கு விடையளிக்கும் வியாசர், "இன்னும் பதின்மூன்று வருட காலத்துக்கு இந்தத் துர்நிமித்தங்களின் பலன் பெரிதாக இருக்கும். இவை எல்லா க்ஷத்திரியர்களும் அழிவதற்கான குறிப்பு" என்று சொல்லிவிட்டு, "நாளடைவில் உன்னையே காரணமாகக் கொண்டு பூமியிலுள்ள க்ஷத்திரியர்கள் சேர்ந்து துரியோதனன் செய்த குற்றத்திற்காக பீம அர்ஜுனர்களுடைய பலத்தினால் நாசமடைவர்" என்று சொல்கிறார் (மேற்படி, பக்: 228).

வியாசர் 'அரசர்கள் அழியப் போகிறார்கள்; குலம் நாசமடையப் போகிறது; அதற்கு நீ காரணமாக இருக்கப் போகிறாய்' என்று சொன்னது தருமனைக் கலக்கமடையச் செய்கிறது.) குலம் நாசமடையும் என்றால், போர் விளையப் போகிறது. அந்தப் போரை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட்டால் போரே ஏற்படப் போவதில்லை. ஏனெனில், "உலகத்தில் கலகம் வேறுபாட்டினால்தான் உண்டாகிறது" (மேற்படி, பக். 229) என்று சொல்லி அப்போதே ஒரு சபதத்தைச் செய்கிறான். "இன்றுமுதல் நான் செய்த பிரதிக்ஞையைக் கேளுங்கள். நண்பர்காள்! நான் ஜீவித்திருப்பதன் பயன் யாது? இன்றுமுதல் பதின்மூன்று வருஷகாலம் என் சகோதரர்களையும் மற்ற அரசர்களையும் கடிந்து பேசமாட்டேன். என் குலத்தோரின் கட்டளையில் இருந்துகொண்டு அவர்களுக்குத் தக்கபடி பேசிக்கொண்டு கூடியிருப்பேன். இவ்வாறு நடக்கின்ற எனக்கு என் பிள்ளைகளிடத்தும் மற்றவர்களிடத்தும் வேறுபாடிராது. உலகத்தில் கலகம் வேறுபாட்டினால்தான் உண்டாகிறது" (மேற்படி, பக்: 229) என்று சொல்லி, 'குலத்தோருடைய சொற்படி நடந்துவிட்டால் கலகங்களும் பூசல்களும் ஏற்படப் போவதில்லை; எனவே போர் நிகழாமல் தடுத்துவிடலாம்; குலமும் அழியாது' என்று நினைக்கிறான். இங்கே 'குலத்தோர்' எனப்படுவது துரியோதனனும் குலத்தவன்தான் என்பதால், 'குலமுதல்வர்களை'க் குறிப்பது.

சூதாட்டத்துக்கு அழைப்பு விடும்போது இதைத்தான் குறிவைத்தான் துரியோதனன். தருமபுத்திரன், தான் அழைத்தால் சூதாட வரமாட்டான் என்பது அவனுக்குத் தெரியும். பாரதி இந்த இடத்தை வெகு அருமையாகத் தன் பாஞ்சாலி சபதத்தில் சொல்கிறான். நாம் பலசமயங்களில் சொல்லியிருப்பது போல, பாஞ்சாலி சபதம் மிகப்பெரும் பகுதியும் வியாச மூலத்தின் மொழிபெயர்ப்புதான். இதை பாரதியும் தன் முன்னுரையில் சொல்லியிருக்கிறான். மயனுடைய மண்டபத்தைப் போலவே ஒரு சபையை நிர்மாணித்து, அதைக் காணுமாறு பாண்டவர்களை வரவழைத்து, அவர்கள் அங்கே வந்ததும் சூதாடத் தொடங்கினால் சகுனியுடைய கைத்தேர்ச்சியின் காரணமாக அவர்களை வென்றுவிடலாம் என்னும் தன் திட்டத்தைச் செயல்படுத்த, பாண்டவர்களைத் தானே சூதாட அழைக்காமல், திருதிராஷ்டிரனைக் கொண்டு அவர்களை வரச்சொல்கிறான். எனவே, சூதாடுவோம் என்ற முடிவும் அழைப்பும் திருதிராஷ்டிரனிடத்திலிருந்து தொடங்குகின்றன. போதாக்குறைக்கு, ஆணி மாண்டவ்யருடைய சாபத்தின் காரணமாக பூமியில் பிறந்துள்ள தர்மதேவதையான விதுரன் இதற்குத் தூது செல்கிறான்.

ஜயந்தம் என்ற இடத்தில் கட்டப்பட்ட மண்டபத்தைப் பார்க்க வரவேண்டும் என்று திருதிராஷ்டிரன் அழைத்ததாக வந்து சொல்கின்ற விதுரன், "அங்கே சூதாட்டத்தை நடத்தும் திட்டம் ஒன்றும் இருக்கிறது" என்பதையும் தெளிவாகவே எடுத்துச் சொல்கிறான். பாண்டவர் நால்வரும் 'போகவேண்டாம்' என்று சொல்கிறார்கள். தருமபுத்திரன் மிகத் தெளிவாகச் சொல்கிறான்:

தந்தையும் வரப்பணித்தான் - சிறு
தந்தையும் தூதுவந் ததையுரைத்தான்
சிந்தையொன் றினியில்லை - எது
சேரினு நலமெனத் தெளிந்து விட்டேன்.


சூதாட்டமாகவே இருந்தாலும் அதற்கு என்னால் போகாமல் இருக்க முடியாது. ஏனெனில் அழைத்திருப்பவர் அப்பா (பெரியப்பா); அதற்காகத் தூது வந்திருப்பவர் சித்தப்பா. ஆகவே போகவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. முடிவு என்னவாக இருந்தாலும் சரி.

இது வியாச மூலத்தில் இப்படி இருக்கிறது: "எல்லாந் தெரிந்தவரே! திருதிராஷ்டிர மஹராஜா கட்டளையிட்டபிறகு நான் சூதாட்டத்திற்குப் போகாமல் இருக்க விரும்பவில்லை. புத்திரனுக்குப் பிதாவின்மேல் பற்றும் எப்போதும் உள்ளதுதானே. விதுரரே! நீர் எனக்கு என்ன சொல்கிறீரோ அதைச் செய்பவனாக இருக்கிறேன்." (ஸபா பர்வம், த்யூத பர்வம் தொடர்ச்சி, அத்: 83).

எந்தக் குலமுதல்வர்களுடைய பேச்சை மீறினால் போர் மூளும் என்று கருதி தருமன் அவர்களுடைய சொல்லைத் தட்டமாட்டேன் என்று சபதம் செய்தானோ, அதே குலமுதல்வர்களைக் கொண்டே பாண்டவர்களைச் சூதாட்டத்துக்கு அழைக்கச் செய்ததுதான் துரியோதனனுடைய சாமர்த்தியம். இந்த யோசனையில் சகுனியின் பங்கும் இருக்கிறது. இருந்தாலும் சபையில் சூதாட வரச்சொல்லி துரியோதனனும் சகுனியும் அழைக்கையில் பலவகையான தர்மங்களை எடுத்துச்சொல்லி தருமன் அதை மறுக்கவே செய்தான். அவற்றையெல்லாம் உரிய இடங்களில் பார்ப்போம்.

ஆக, 'சபையில் சூதாட அழைத்தால் மறுப்பது சம்பிரதாயமன்று' என்பதற்கும் மேலான காரணமாக ஒன்று இருந்திருக்கிறது. கதையின் பொன்முடிச்சு (Golden knot) என்றாலும், தருமபுத்திரன் மட்டுமேயல்லாமல், துரியோதனாதியர் உள்ளிட்ட மொத்த குலத்தின் கழுத்திலும் விழுந்து இறுக்கும் மரணமுடிச்சாக இது விழுகிறது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com