அன்புள்ள சிநேகிதியே
குழந்தை வளர்ந்துவிட்டான்(ள்). சிறுவனாக/சிறுமியாக, யுவன்/யுவதியாக வளர்ந்தாகிவிட்டது. பெரியவர்கள் வளரவேயில்லை. குடும்பத்தில் 'Civil War' தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், எப்போதெல்லாம் அந்தக் குழந்தை கல்வியிலோ, கலையிலோ அல்லது தொழிலிலோ வெற்றிப்படியை எட்டுகிறதோ அப்போது, சண்டையை நிறுத்தி வைத்துவிட்டு ஒருமித்துச் சந்தோஷப்பட்டுக் கொள்வோம். தோல்வி கண்டுவிட்டாலோ ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி "நீ செல்லம் கொடுத்துவிட்டாய்...", "நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள்..." என்று சண்டையைப் பெரிதாக்கி நம் துக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வோம். அதேபோல நம் குழந்தை (பெரியவனாகி விட்டார்) காதலித்து கல்யாணத்தை நம்மிடம் கலந்தாலோசிக்காமல் செய்து கொண்டாலோ நாம் இருவரும் ஒற்றுமையாகி விடுவோம். இதுபோன்ற விஷயங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும். இயற்கை, இயற்கை, இயற்கை.
அப்படியென்றால் இந்தக் குழந்தை வளர்ப்புப் பிரச்சனையை ஏன் பெரிதாக எடுத்துக்கொண்டு இரண்டு இதழ்களில் எழுதுகிறேன் என்றால் மூன்று முக்கிய காரணங்கள்...
1) குழந்தை வளர்ப்பு - Diaper changeல் ஆரம்பித்து Divorceல் முடியும்போது. மிகவும் வேதனை தரக்கூடிய சமாசாரம்.
என்னுடைய தோழி மிகவும் நிலைகுலைந்து போயிருந்தாள் சிலநாள் முன்பு. என்னைவிட வயதில் மிகச்சிறியவள். 16 வயதில் பெண். திருமண வாழ்க்கை ஒத்துவரவில்லை. பல கருத்து வேறுபாடுகள். குழந்தை வளர்ப்பும் ஒரு காரணம். பெண்ணிடம் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார் கணவர். ஆனால் பொறுப்பில்லை என்று புகார். 10 வயதில் பிரிந்துவிட்டார்கள். என்னுடைய தோழி விவாகரத்து செய்யும்போது அவள் தொழில்முறையில் நன்றாக உயர்ந்திருந்தாள். கணவருக்கு ஒரு வருடமாக வேலையில்லை. குழந்தையை அழகாகத் தன்னிடம் தக்கவைத்துக் கொண்டாள். வேறு இடத்தில் வேலையை மாற்றிக்கொண்டாள். அப்பாவைப் பிரிந்த வருத்தம், பள்ளித் தோழிகள்/தோழர்களைப் பிரிந்த சோகம் என்று அந்தப் பெண்குழந்தைக்கு மனதில் இறுக்கம் இருந்திருக்கிறது. ஆனால், அந்தத் தாயோ தன் குழந்தை பழைய கசந்த (பெற்றோர்கள் சண்டை) நினைவுகளை மறந்து ஒரு நல்ல எதிர்காலத்தை அவளுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஓயாமல் பாடுபட்டாள். 16 வயதுப்பெண் ஒருநாள் நடுராத்திரியில் வீடு திரும்பியதற்குக் காரணம் கேட்டபோது, "இப்படித்தான் அப்பாவைக் கேள்வி கேட்டு அவர் வாழ்க்கையைப் பாழடித்தாய். இப்போது என் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டாய். உனக்கு சுதந்திரம் வேண்டும். ஆனால், பிறருக்குக் கொடுக்கமாட்டாய்" என்று கத்தித் தீர்த்துவிட்டுப் போய்விட்டாள்.
தன்னை அழித்துக்கொண்டு தான் செய்த தியாகத்திற்கு 'சுயநலம்' என்று பட்டம் கிடைத்து விட்டதை நினைத்து நினைத்து அந்தத் தோழி மாய்ந்து போனாள். ஆறு வருடங்களுக்கு முன்புதான் Papers file செய்துவிட்டதாகச் சொன்னாளே ஒழிய என்னிடம் முன்போ பின்போ எந்த ஆலோசனைக்கும் வரவில்லை. நான் Devil's Advocate ஆகத்தான் இருப்பேன் என்பது அவளுடைய அபிப்பிராயம். அது உண்மைதான். மற்றொருவர் கண்ணோட்டத்தையும், மனநிலையையும் எடுத்துச் சொன்னால்தான் மற்றவர்பேரில் இருக்கும் கோபம் தணியாவிட்டாலும், சிறிது குறையும்; சிறிது சிந்திக்கவும் வைக்கும்.
குழந்தைகளின்மேல் பாசம் வைக்கிறோம். பாசம், பொறுப்பு என்ற உணர்வில் சில முடிவுகளை எடுக்கிறோம். அதன் பின்விளைவுகளைச் சந்திக்க நாம் தயார்செய்து கொள்வதில்லை. நாம் நன்மைதான் செய்கிறோம் என்ற ஒரு பலமான தீர்மானம்.
2) "குழந்தைகளுக்காகப் பொறுத்துப் போகிறோம்" என்று வருத்தப்பட்டுக் கொண்டே வாழ்நாள் முழுதும் சண்டை போட்டுக்கொண்டே வாழ்க்கையை நடத்தும் பெற்றோர்கள்; ஏன் இப்படி?
* குழந்தைகளைத் தங்களுடைய உரிமையாக எந்த வயதிலும் நினைத்துக் கொள்ளும்போது... * குழந்தை தன்னுடைய அடையாளமாகத்தான் அமையவேண்டும் என்று எதிர்பார்க்கும்போது... * நம்முடைய ஆசைகளையும், நாம் சிறுவயதில் அனுபவித்த நிராசைகளையும் நம் குழந்தை வழியாகத் தீர்த்துக்கொள்ள நினைக்கும்போது... * நாம் கொடுக்கும் பாசத்தையும், பாதுகாப்பையும் அவள்/அவன் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வரும்போது... * அவர்கள் நம் சொல்படிக் கேட்காமல் ஒரு விஷயத்தில் ஈடுபட்டுத் தோல்வியைச் சந்திக்கும்போது... * நம்முடைய சமூகம்/சமுதாயத்திற்கு முரணாகச் செயல்படும்போது... * நாம் 30 வருடங்களாகக் கற்ற கலை, பார்த்த இடங்கள், உண்ட உணவு என எல்லாவற்றையும் நம் மூன்று வயதுக் குழந்தைக்குத் தீட்டும்போது... * குழந்தைக்கு எத்தனை வயதானாலும் நம் நிலையை விட்டுக் கொடுக்காதிருக்கும்போது... * குழந்தையை உரிமையாக, உடைமையாக நினைத்து, பாசம் என்ற போர்வையில் அதிகாரம் செய்யும்போது...
இப்படி எழுதிக் கொண்டே போகலாம். மேலே எழுதியுள்ள ஒன்றில் ஒரு தாயோ/தந்தையோ ஈடுபட்டால் மற்றவர் அதை எதிர்க்கும்போது பாசப்போர் தொடங்குகிறது.
பாசம் என்றாலே அன்புதானே! அங்கே போருக்கு என்ன வேலை? யோசிக்கிறேன், நான். புரிகிறது விடை. எதையுமே உடைமையாக நினைக்கும்போது அங்கே பாசம் இருக்கும். பாதுகாப்பின் பயம் சதா இருக்கும். சண்டையின் காரணமே அதுதான்.
நாம் பெற்றாலும் அவன்/அவள் நம் உடைமையில்லை. வேர்களைக் கொடுத்துவிட்டு, கிளைகளை வெட்டி எறியக்கூடாது. சிறகுகளைக் கொடுத்துவிட்டு பறக்கவிடாமல் கட்டிப் போடக்கூடாது.
நம்முடைய அன்னியோன்னிய உலகில் நமக்குக் கிடைத்த ஓர் அருமை உறவு நம் குழந்தை. அவன்(ள்) வளர, வளர விலகித்தான் போவார்கள். தவழ்வார்கள். ஓடுவார்கள். பறப்பார்கள். பிரிந்து கொண்டேதான் போவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள, புரிந்துகொள்ள மனதால் நம்மிடமே தஞ்சம் அடைந்து கொண்டிருப்பார்கள்.
வாழ்க, வளர்க!
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |