சாயி லீலை
1984 அக்டோபர் மாதம் என் தந்தையாரின் பெருங்குடலும் ஈரலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது. என் பெற்றோரின் திருமணப் பொன்விழாவுக்குச் சில வாரங்களே இருந்த அந்தச் சமயத்தில் இந்தச் செய்தி பேரிடியாக வந்தது. தேவாலயத்தில் தொழுகை, நண்பர் உறவினர்களுடன் ஒரு சிறிய விருந்து என்று பொன்விழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தோம். என் பெற்றோர் மிகுந்த மனோபலத்துடன் பொன்விழாவைக் கொண்டாடினர். கடவுளிடம் இருந்த ஆழ்ந்த நம்பிக்கை அவர்களுக்கு அந்த பலத்தைக் கொடுத்தது.

சில நாட்களுக்குப் பின் பெருங்குடலில் அடைப்பு ஏற்படவே அவசரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சிறுகுடல், வயிறு, பெருங்குடல் மற்றும் ஈரலில் பாதியைப் புற்றுநோய் பாதித்திருந்தது. பெருங்குடலின் ஒரு பகுதியை வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று. மரணம் அதிகத் தொலைவில் இல்லை. அப்பாவின் உடல்நலம் மோசமாகிக்கொண்டே போனது. 21 கிலோ எடையை இழந்தார். அதே கவலையில் அம்மா 16 கிலோ இழந்தார். என் பெற்றோருக்கு உதவும்படி நான் விடாமல் ஸ்ரீ சத்திய சாயிபாபாவைப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன்.

நவம்பர் மாதத்தில் என் பெற்றோரின் திருமணப் பொன்விழாவுக்குப் பின்னர் என் மகன் கிரெய்க், முதன்முதலாக சாயிபாபாவைப் பார்க்க இந்தியாவுக்குக் கிளம்பினான். கிறிஸ்துமஸுக்கு முந்தையநாள் மாலை அவனுக்கு நாங்கள் எழுதிய கடிதமும், எங்களுக்கு அவன் எழுதிய கடிதமும் கிடைத்தன. தாத்தாவின் புற்றுநோய், அறுவைசிகிச்சை ஆகியவை குறித்து அவனுக்கு எழுதியிருந்தோம். வருத்தத்தோடு அவன் சுவாமியின் உதவியைக் கோரி ஒரு சிறிய கடிதத்தை எழுதினான்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று கிரெய்க் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தான். பகவான் அவனிடம் வந்ததும் கடிதத்தைக் கொடுத்தான். அதை சுவாமி வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் விபூதி சிருஷ்டித்துக் கொடுத்ததுடன், பாதநமஸ்காரமும் கொடுத்தார். கிரெய்க் சிறிது விபூதியை எங்களுக்கு அனுப்பினான். விபூதி ஜனவரிமாத நடுவில் எங்களிடம் வந்துசேர்ந்தது. அதை உட்கொண்டபின் அப்பாவின் எடை குறைவது நின்றது. விபூதியின் நோய்தீர்க்கும் அற்புத ஆற்றல்களை நான் விளக்கியதால் அவர் அதை உட்கொண்டார்.

ஜனவரியில் ஒருநாள் மதியம். நான் தியானத்தில் இருந்தேன். 'இந்த ஆண்டு (1985) ராபர்ட்டும் நீயும் புட்டபர்த்திக்கு வரவேண்டும்' என்று அவர் கூறுவதுபோல இருந்தது. "சுவாமி, என் தந்தையார் புற்றுநோயில் இறந்துகொண்டிருக்கிறார். நான் மார்ச்சில் எப்படி வருவேன்?" என்று கேட்டேன். "கவலைப்படாதே, உன் தந்தையை நான் கவனித்துக்கொள்கிறேன்" என்று பதில் கூறியது அந்தக் குரல். மார்ச் ஒன்றாம் தேதி புறப்படும்படி விமான டிக்கட்டுகளை வாங்கினோம். ஃபிப்ரவரி மாதம் சற்றும் எதிர்பாராமல் டாக்டரிடமிருந்து ஃபோன். பெருங்குடலை மீண்டும் இணைக்க இன்னொரு அறுவைசிகிச்சை செய்யலாம் என்று ஆலோசனை கூறினார். என் பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் டாக்டரின் முகத்தில் பெரிய புன்னகை! பெருங்குடல் மிகவும் தேறிவிட்டதாகச் சொன்னார். பெருங்குடலில் இருந்த புற்றுக்கட்டி அகற்றப்பட்டு, மலக்குடலுடன் இணைக்கப்பட்டது. ஈரல், சிறுகுடல், வயிற்றுப் பகுதிகளில் இருந்த புற்றுநோய் தீங்கற்றதாகத் தோன்றியது! இது உண்மைதான் என்று சோதனைகள் கூறின. டாக்டர்கள் ஆச்சரியப்பட்டுப் போயினர். ஒரு பெரிய அறுவைசிகிச்சை முடிந்து நான்கே மணிநேரத்தில் என் தந்தையார் நன்கு தேறிவிட்டதும் அவர்களுக்கு ஆச்சரியம்தான்.

பிரசாந்தி நிலையத்தில் சுவாமி எங்களுடன் பேசினார். என் பெற்றோரின் புகைப்படத்தை அவரிடம் காட்டி, "சுவாமி, நீங்கள் என் தந்தையின் புற்றுநோயைக் குணப்படுத்தினீர்களா?" என்று கேட்டேன். என்னுடைய தோளில் மெல்லத் தட்டியபடி, "ஆமாம், குணப்படுத்தினேன்!" என்றார் சுவாமி. எனது "தந்தை" என் அப்பாவைக் குணப்படுத்தியாகக் கூறிய அந்தக் கணத்தின் ஆனந்தத்தை என்னால் மறக்கவே முடியாது.

நன்றி: திருமதி. ரீடா புரூஸ், ஆங்கில சனாதன சாரதி, ஃபிப்ரவரி 1986

© TamilOnline.com