சரஸ்வதி ராம்நாத்
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முனைச் செயல்பாடு கொண்டவர் சரஸ்வதி ராம்நாத். இவர் கோயம்புத்தூர் அருகிலுள்ள தாராபுரத்தில் செப்டம்பர் 07,1925 அன்று இலக்கிய ஆர்வமிக்க குடும்பத்தில் பிறந்தார். தந்தை தேசபக்தர். காந்திமீது மிகுந்த அபிமானம் கொண்டவர். ஆனால், இளவயதிலேயே சரஸ்வதி தந்தையை இழக்கநேர்ந்தது. தனிமையில் தவித்த இவருக்கு தந்தையின் சேகரத்திலிருந்த நூல்கள் துணையாகின. அவை பல புதிய வாசல்களைத் திறந்துவிட்டன. பாரதியார், வ.வே.சு. ஐயர் நூல்கள் தொடங்கி மாதவையா, வை.மு. கோதைநாயகி, புதுமைப்பித்தன், கல்கி எனப் பலரது நூல்களை வாசித்தார். அப்போது, எதை, எப்படி எழுதுவது என்ற நுணுக்கங்கள் புரிந்தன. சிறு, சிறு கதைகளை எழுத ஆரம்பித்தார். வசந்தம், பாரதமணி, தேனீ, சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.

தமிழ், ஆங்கிலத்துடன் முயன்று பயின்று ஹிந்தியிலும் வித்வான் பட்டம் பெற்றார். அக்காலகட்டத்தில் கலைமகள், விகடன் போன்ற இதழ்களில் பிரேம்சந்த், பங்கிம் சந்திரர், சரத்சந்திரர் எனப் பலரது தொடர்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகி வந்தன. அவற்றைத் தொடர்ந்து வாசித்ததில் மொழிபெயர்ப்பின்மீது சரஸ்வதிக்கு ஆர்வம் உண்டானது. ஹிந்தியை நன்கு கற்றிருந்ததால் தான் ரசித்ததைப் பிறரும் ரசிக்கட்டுமே என்ற எண்ணத்தில் அவற்றை மொழிபெயர்த்தார். தினமணிகதிரில் ஆசிரியராக இருந்த 'துமிலன்' இவரது மொழிபெயர்ப்புப் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார். 'ராஜநர்த்தகி' என்ற நாவலை (ராமச்சந்திர தாகூர் குஜராத்தியில் எழுதியது) கதிரில் தொடராக வெளியிட்டார். அதுதான் அவர் எழுதிய முதல் மொழிபெயர்ப்புத் தொடர். அதற்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் கவனம் செலுத்தினார்.

காவேரி, சுதேசமித்திரன், தீபம், தாமரை, கலைமகள் எனப் பல இதழ்களிலும் பன்மொழி சிறுகதை, நாவல்களை பெயர்க்கத் துவங்கினார். சிறந்த கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். கவிஞர் ராம்சிங் சாகலின் கவிதைகளை தமிழுக்குக் கொண்டுவந்தவர் சரஸ்வதி ராம்நாத் தான். குழந்தை இலக்கியத்திற்கும் இவர் சிறந்த பங்களிப்புத் தந்துள்ளார். 'இளைஞர் மகாபாரதம்', 'மலைநாட்டு நாடோடிக் கதைகள்' போன்றவை குறிப்பிடத்தகுந்தன. புரட்சிவீரர் என்ற வரிசையில் 'பகத்சிங்' பற்றி இவரது வரலாற்று நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்தியா முழுவதும் சுற்றி கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி போன்ற நதிகளைப்பற்றி இவர் எழுதியுள்ள சிறார் நூல்களும் முக்கியமானவையே. நாடங்களையும் தமிழில் தந்துள்ளார். 'மகாபாரத்தில் பெண்ணியம்: இரு நாடகங்கள்', 'கடற்பறவைகள்: ஏழு இந்திய நாடகங்கள்' ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. 1993ல், இவர் தொகுத்த 'இந்தியமொழி நாடகங்கள்' என்னும் பல்வேறு மொழிகளிலிருந்து பெயர்த்த நூலுக்கு சாகித்ய அகாதமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது கிடைத்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, எனப் பல மாநிலங்களின் வரலாறுகளையும் எழுதியிருக்கிறார்.

சாகித்ய அகாதமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் பிரேம்சந்த் பற்றி பிரகாஷ் சந்திர குப்தா எழுதியிருக்கும் நூலை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். பஞ்சாபியில் அம்ரிதா ப்ரீதம் எழுதிய 'ராதையுமில்லை ருக்மிணியுமில்லை'; ஸ்ரீலால் சுக்ல ஹிந்தியில் எழுதிய 'தர்பாரி ராகம்'; ஜய்வந்த் தல்வி மராத்தியில் எழுதிய 'மகாநந்தி'; கிருஷ்ண கட்வாணி சிந்தி மொழியில் எழுதிய 'நந்தினி'; வங்க மொழியில் தாராசங்கர் பானர்ஜி எழுதிய 'சப்தபதி' என பன்மொழிப்படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவந்த ஒரே எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்தான். உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான 'டோபா டேக் சிங்'கைத் தமிழில் தந்தவரும் இவரே! இவரது 'இனி வீடு திரும்ப வேண்டும்' என்ற சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானது. காஷ்மீர் முதல் கொங்கணி, பஞ்சாபி, ஒரியா, நேபாளி, மராத்தி, டோக்ரி எனப் பல மொழிச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பே இந்நூல்.

சரஸ்வதி ராம்நாத்தின் முக்கியப் பணி, பிரேம்சந்த், சாதத் ஹசன் மண்டோ, நிர்மல் வர்மா, அஜித் கெளர், அம்ரிதா ப்ரீதம், மோகன் ராகேஷ் உள்ளிட்டோரின் படைப்புகளை தமிழில் கொண்டுவந்தது மட்டுமல்ல. தமிழின் சிறந்த சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை ஹிந்திக்குக் கொண்டு சென்றதும்தான். புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அகிலன், நீல.பத்மநாபன் தொடங்கி கி. ராஜநாராயணன், பாவண்ணன், ஜெயமோகன், ஆதவன், பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுப்ரபாரதிமணியன், எஸ். ஷங்கரநாராயணன் எனப் பலரது படைப்புகளை ஹிந்திக்குக் கொண்டு சென்றுள்ளார். கனிமொழி, ரவி.சுப்ரமணியன் போன்றோரது கவிதைகளையும் ஹிந்தியில் மொழியாக்கம் செய்துள்ளார். 'யுகபிரபாத்', 'சகானி', 'சாரிகா', 'ஆஜ்கல்', 'தர்மயுக்' போன்ற பல இதழ்களில் இவர் தமிழ் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை, கவிதைகளை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான தமிழ்ப் படைப்புகளை ஹிந்தியில் அறிமுகம் செய்திருக்கும் ஒரே எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்தான். அந்த வகையில் இந்தி இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மிகச் சிறந்ததோர் இணைப்புப் பாலமாக இவர் இருந்திருக்கிறார். சாகித்ய அகாதமி நிறுவனமும், நேஷனல் புக் டிரஸ்டும் இவரது பன்மொழித் திறமையை நன்கு பயன்படுத்திக் கொண்டு பல நூல்கள் வெளியாகக் காரணமாகின. சர்வதேசப் பெண்கள் ஆண்டையொட்டி இவர் மொழிபெயர்த்துத் தொகுத்த 'இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' நூல் இன்றளவும் முக்கியமானது. பல பல்கலைக்கழக மாணவர்கள் இவரது மொழிபெயர்ப்புப் படைப்புகளில் தங்கள் பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

சரஸ்வதி ராம்நாத், பெண்ணியச் சிந்தனை கொண்டவர். பெண்கள் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். சமூக அக்கறை உள்ள படைப்புகளையே இவர் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் குறித்து, “மொழிபெயர்ப்பு என்றாலே இங்கு ஓர் அலட்சியம் இருக்கிறது. பொழுதுபோக்கு, க்ரைம் நாவல் எழுதுபவர்கள் கூட இங்கு எழுத்தாளராகி அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஆனால் மொழிபெயர்ப்பு என்றால் ஓர் அலட்சியம். மொழிபெயர்ப்புத்தானே என்று. மொழிபெயர்ப்பாளனுக்கு இங்கு முக்கியத்துவம் இல்லை” என்று இவர் கூறுவது சிந்திக்கத்தக்கது. “மொழிபெயர்ப்பு என்ற உணர்வே ஏற்படுத்தாத ஒரு படைப்புத்தான் வெற்றிகரமான மொழிபெயர்ப்பாகும். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது தவறு. மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் படைப்பை உள்வாங்கி வெளிப்படுத்த வேண்டும். அந்த ஜீவனைக் கொண்டுவர வேண்டும். கூட்டியோ, குறைத்தோ எழுதக்கூடாது” என்கிறார். “சரஸ்வதி ராம்நாத் ஹிந்தி மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரத் தன் வாழ்நாள் முழுதும் செலவிட்டார். அவரது உழைப்பு போற்றத்தக்கது” என்று மதிப்பிடுகிறார் விமர்சனப் பிதாமகர் வெங்கட் சாமிநாதன்.

பிற்கால இலக்கிய இதழ்களான சுபமங்களா, புதிய பார்வை, காலச்சுவடு போன்றவற்றிலும் தொடர்ந்து எழுதி வந்த சரஸ்வதி ராம்நாத், தனது இலக்கியப் பங்களிப்பிற்காக கேந்திரிய இந்திய சன்ஸ்தான் விருது, பாரதீய அனுவாத பரீஷத் தன் த்வாரகீஷ் புரஸ்கார் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். சாந்தி நிகேதன் பல்கலைக்கழகம் இவரைக் கௌரவித்துள்ளது. பல மாநிலங்களின் இலக்கிய அமைப்புகளாலும் அரசுகளாலும் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். 'கோதான்' பிரேம்சந்தின் கடைசி நாவல். அதுவே சரஸ்வதி ராம்நாத்தின் மொழிபெயர்ப்பில் வெளியான இறுதி நாவலும்கூட. கிட்டத்தட்ட முப்பதாவது வயதில் எழுதத் துவங்கி 45 வருடங்களுக்கும் மேலாக படைப்புலகில் இயங்கி வந்த சரஸ்வதி ராம்நாத், ஆகஸ்ட் 02, 1999 அன்று காலமானார். கா.ஸ்ரீ.ஸ்ரீ., த.நா. குமாரசாமி, த.நா.சேநாபதி, ரா. வீழிநாதன் வரிசையில் வைத்து மதிக்கத்தகுந்த எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்.

அரவிந்த்

© TamilOnline.com