தென்றல் பேசுகிறது...
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குச் சுமார் ஒருவாரமே இருக்கும் நிலையில் இந்த இதழ் அச்சுக்குப் போகிறது. ஓர் அரசுக் கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்படப் போகிறவர்கூடத் தனது வருமான வரி அறிக்கையைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படியிருக்க, பலவகை வணிக நிறுவனங்களுக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கிற, இன்னும் சொல்லப்போனால் பலமுறை திவாலானதாக அறிவித்திருக்கிற ஒருவர் தனது வருமான வரி அறிக்கை குறித்துத் தெளிவாகப் பொதுமக்களுக்குக் கூறாமல் இருப்பது பேராச்சரியம். டிரம்ப்பைப் பற்றித்தான் கூறுகிறோம். தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதாகவும் அவர் உறுதியளிக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை அமெரிக்காவின், ஏன் உலகின், மிக உயர்ந்த பீடத்தில் அமர்த்த நமது ஓட்டு உதவவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

*****


அமெரிக்கப் பொதுவாழ்வின் பல்வேறு துறைகளிலும் இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின், பங்களிப்பு அதிகரித்து வருகிற இந்தத் தருணத்தில் ஆங்காங்கே போட்டியிடும் இந்திய/தமிழ் வேட்பாளர்களை ஆதரிப்பது நமது தார்மீகக் கடமை. இதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

*****


தென்றலுக்கு இது ஒரு முக்கியமான கட்டம். இந்த இதழ் 16ம் ஆண்டின் நிறைவைக் குறிக்கிறது. அமெரிக்க மண்ணில் இதற்கு இணையாக இன்னோர் இந்திய மொழிப் பதிப்பு, இத்தனை மாநிலங்களில், இத்தனை ஆண்டுகளாக வந்துகொண்டு இருக்கிறதா என்று தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. இறையருளும், கடின உழைப்பும், இடர்ப்பாடுகள் வருகையில் நொடிந்துவிடாத உறுதியும், அதே நேரத்தில் 'சமுதாய நன்மை' என்கிற ஒரே விடாப்பிடியான குறிக்கோளும் சேர்ந்து தென்றலை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. வணிக உலகமும், வாசக உலகமும் அசையாத நம்பிக்கையோடு எமக்கு ஆதரவு தந்திருக்கின்றன. முன்னெப்போதும் அச்சேறியிராத படைப்பாளிகளுக்கும் சாதனையாளர்களுக்கும் அவர்களது 'கருமமே கட்டளைக்கல்' எனக் கொண்டு நாம் மேடையமைத்துக் கொடுத்திருக்கிறோம். புகழ்பெற்றோரின் வழி வகைகளையும் உலகறியத் தந்திருக்கிறோம். இவற்றை வியந்து நீங்கள் எழுதும் வாசகர் கடிதங்கள் எமது உற்சாகத்தை அதிகரிக்கத்தான் செய்கின்றன. வாருங்கள் கைசேர்த்து நடைபோடுவோம்!

*****


சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஒளிபொருந்திய பார்வையும் தெளிவான கருத்துக்களும் எவரையும் ஈர்ப்பவை. ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த நிலையிலும் அவர் தென்றலுக்கென ஒரு தனிப்பட்ட நேர்காணலை அளித்தது எம்மைப் பெருமிதம் அடையச் செய்கிறது. வளரும் கணினி ஆர்வலர் 'நீச்சல்காரன்' தனது தமிழ்க்கணினி பங்களிப்புகளுக்காக கனடா இலக்கியத் தோட்ட விருதினை இந்த ஆண்டில் பெற்றார். தணியாத ஆர்வம் ஒன்றைமட்டுமே மூலதனமாக வைத்து என்ன செய்யமுடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் இவர். சிறப்பான நேர்காணல்களோடும், இன்னும் பல அற்புதமான படைப்புகளோடும், உங்களிடம் வந்து சேர்கிறது தென்றல். தொடர்வோம் பயணத்தை!

வாசகர்களுக்கு நன்றியறிதல் நாள் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

நவம்பர் 2016

© TamilOnline.com