புதிரான மனைவி
என் மனைவி வேதாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். 67 வயதிலும் பிள்ளைவீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கிறாள். பாவமாக இருக்கிறது. டயாபடிக் வேறு.

இந்தியாவிலிருந்து பிள்ளை நந்து வீட்டுக்கு வந்து இரண்டு மாதமாகிறது. மருமகள் ஆஃபீஸில் ஏதோ ஆறுமாத ட்ரெய்னிங் என்பதால் உதவிக்கு மகன் கூப்பிடவே வந்தோம். தன் பிள்ளையை ஸ்கூலில் விடுவது, அழைத்து வருவது போன்றவற்றைத் தானே பார்த்துக்கொள்கிறான். பேரன் கௌசிக்குப் பாட்டி சமையல் பிடித்துவிட்டது நல்லதாகப் போனது.

குடிக்கத் தண்ணீர் வேண்டும்போல் தோன்றவே, பெட்ரூமை விட்டு வெளியே வந்தேன். சமையலறையில் பிள்ளையும் வேதாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நந்துவிடம், "நான் இங்கிதம் தெரிந்து நடந்துகொள்கிறேன். இன்றுகூட பார், என்ன சமைப்பது என்று ப்ரியாவிடம் கேட்டுக்கொண்டுதான் சமைக்கிறேன்" என்றவள் என்னைப் பார்த்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டாள்.

எனக்குப் புரிந்தது. நம் வழக்கத்தை விடக்கூடாது என்று நான் வற்புறுத்துவேன். நெற்றியில் பொட்டு இட்டுக்கொள்ளச் சொல்வது, பிள்ளையை மாதம் ஒருமுறையாவது கோவிலுக்குப் போகச் சொல்வது, பேரனை சிறு சுலோகம் சொல்லிவிட்டுச் சாப்பிடச் சொல்வது போன்றவற்றால் இவள் என்னை இங்கிதம் இல்லாதவன் என்கிறாள். போகட்டும். நான் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு என் அறைக்குப் போனேன்.

அதற்குள் டிரையர் முடிந்துவிட்ட சத்தம் கேட்கவே, சென்று துணிகளை எடுத்துவந்து, என்னுடையவற்றை மடித்துக்கொண்டேன். இன்னும் வேதா சமையலறையில் வேலை செய்துகொண்டு இருக்கிறாள். அவளுடைய துணிகளைப் பார்க்கிறேன். பாவம். அவளும் இன்று நிறைய வேலை செய்துவிட்டாள். அவளுடைய துணிகளையும் மடிக்கத் தொடங்குகிறேன்.

சற்றுநேரத்தில் அங்கு வந்த வேதா "எதற்காக என்னுடைய துணிகளை மடித்தீர்கள்?" என்றாள். நிமிர்ந்து பார்த்த நான் "காலையில் இருந்து ரொம்ப வேலை செய்துகொண்டு இருக்கிறாயே, செய்தேன். அதனால் என்ன?" என்றேன்.

நந்து உள்ளே வருகிறான். மகனிடம், "பார்த்தாயா, பார்த்தாயா, இப்படித்தான் என்னுடையவற்றை எல்லாம் மடிக்கிறேன் பேர்வழி என்று தன் இஷ்டத்திற்கு அடுக்கியும் விடுகிறார். இவருக்குப் பொழுதுபோகவில்லை. அதற்காக, எனக்கென்று கொஞ்சம் சுதந்திரம் வேண்டாமா? எல்லாம் இவர் இஷ்டப்படிதான் நடக்கிறது" என்று பொரிந்து தள்ளுகிறாள்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் துணிகளை அடுக்கியதில் இவள் சுதந்திரம் என்ன பறிபோயிற்று? கொஞ்சம் மாறியிருந்தால் சரிசெய்து கொள்ளலாமே?

தன் சுதந்திரத்தை மதிப்பவளாக இருந்தால், இவள் ஏன் ப்ரியாவிடம் கேட்டுக்கொண்டு சமைக்கிறாள்? அது இங்கிதம் என்றால், இது என்ன?

காதில் போட்டுக்கொண்டு இருந்த மெஷின் பேட்டரி வீக்காகிவிட்டது. என்னால், அவள் ஏதோ சொல்வது தெரிந்தும், கேட்க முடியவில்லை.

ஐம்பது வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தும், இன்று, என் மனைவி வேதா எனக்கு ஒரு புதிராகத்தான் தெரிகிறாள்.

சுதா சந்தானம்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com