போட்டி
காயத்ரி தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்திருந்தாள். நிகழ்ச்சியின் ஆடம்பர மேடை நடுவில் ஒரு இளம்பெண் அதீத மேக்கப்பில் காதில் பெரிய குண்டலங்கள் ஆட, செயற்கையாகச் சிரித்தபடி "உங்கள் கைகளைச் சேர்த்து வையுங்கள். நமக்கு மிகப் பிடித்த பதினோரு வயது சுப்ரஜா இப்போது உங்களைப் பரவசப்படுத்தப் போகிறார். ஜட்ஜஸ்... ஆர் யூ ரெடி?" என்று உற்சாகமாகக் கூவினாள். ஆடியன்ஸ் பலமாகக் கை தட்டினார்கள். அதாவது நிகழ்ச்சியில் பங்குபெறும் இளசுகளின் பெற்றோர், உறவினர், நண்பர்கள்.

அந்தச் சிறுமி பாட ஆரம்பித்தபோது காயத்ரியின் மகள் ஷக்தி அங்கே வந்தாள். "அம்மா..." என்று இரண்டு மூன்றுமுறை கூப்பிட்டுப் பார்த்தும் அவள் திரும்பாததால் பலத்த குரலில் "அம்மா. ப்ளீஸ். டெலிவிஷனிலிருந்து கொஞ்சம் கண்ணை எடுத்து நீ பெத்த உன் பொண்ணையும்தான் கொஞ்சம் கவனியேன். எனக்கு பாரதியாரோட 'சுட்டும் விழிச்சுடர்தான்' சொல்லிக் கொடுக்கிறேன்னு சொல்லி ஒருவாரம் ஆறது. இன்னும் உனக்கு அதுக்கு நேரம் கிடைக்கலை. இந்த ரியாலிடி ஷோ மட்டும் பார்க்க உட்கார்ந்துக்கிறே!" என்று பொரிந்தாள்.

பத்துவயது மகள் ஷக்தி உரத்த குரலில் பேசியும் காயத்ரியின் கண்கள் தொலைக்காட்சியிலிருந்து அகலவில்லை. கோபமாக வாய்மட்டும் முணுமுணுத்தது.

"இந்த சுப்ரஜா துக்குனூண்டு பொண்ணு. என்ன பாட்டு பாடறா! இதை எல்லாரும் தலையிலே தூக்கிவச்சு கொண்டாடறாங்க. நானும்தான் இந்த வயசிலே எத்தனை காம்படீஷன்லே ஜெயிச்சிருக்கேன் தெரியுமா? தமிழிசை சங்கத்திலே நான் வந்தாலே மத்த போட்டியாளர்கள் எழுந்து போயிடுவாங்க. ஏன்னா எனக்குதான் எப்பவும் முதல் பரிசு. மியூசிக் அகாடமியிலே ஜூனியர், சீனியர்னு அத்தனை பல்லவி போட்டியிலும் எனக்குதான் முதல் பரிசு. ஏன், என்னைச் சொல்லுவானேன்? உனக்கும் அவள் வயசுதான். ஆனா உனக்குச் சரியா அவளாலே பாடமுடியுமோ? என்னவோ வந்துட்டா பெரிசா..."

ஷக்தியின் பார்வை ஒருமுறை சுழன்று வரவேற்பறையில் இருந்த கண்ணாடி அலமாரியை கவனித்தது. அதில் ஏகப்பட்ட பரிசுகள். ஷீல்ட்கள். சர்டிஃபிகேட்டுகள். அத்தனையும் அம்மா வாங்கியவை. பாவம். கல்யாணம் ஆனபின் மாமியார், மாமனார் , கணவன் என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளியில், வாசலில் பாடக்கூடாது என்று கட்டளை இட்டுவிட்டார்கள். அதிலும் ஒரு தள்ளுபடி. கற்றுக்கொடுக்கலாம். அதற்கு ஆட்சேபணை இல்லை. இதுதான் அம்மா காயத்ரியின் வாழ்க்கை.

ஷக்தி மறுபடி ஒருமுறை சொன்னாள். "அம்மா. நான் ஹோம் ஒர்க் முடிச்சிட்டேன். எலெக்ட்ரானிக் தம்புரா எடுத்துகிட்டு வரவா?"

"ஆமாமாம். நீ பெரிசா இந்த ரியாலிடி ஷோவுலே பாடி பணத்தை அள்ளிண்டு வரப்போறியாக்கும்? உன் அப்பாதான் உன்னை நல்லா பிரெயின் வாஷ் பண்ணியிருக்காரே. காம்படீஷன் போகக்கூடாது, அது வளருகிற குழந்தைகளுக்கு நல்லதில்லை. அவர் சொல்றதுதான் உனக்கு வேதவாக்கு." சொன்னவள் சட்டென்று வேறு தலைப்புக்கு மாறினாள்.

காயத்ரி அவளுடைய மகள் ஷக்தி படிக்கும் பள்ளியிலேயே மியூசிக் டீச்சர். அதே பள்ளியில்தான் அடுத்த தெருவில் இருக்கும் ஃப்ளாட் ஒன்றில் தொலைக்காட்சியில் பாடும் சிறுமி சிந்துஜாவும் தன் அம்மாவுடன் இருக்கிறாள். கொஞ்சநாளாக ஷக்திக்கு நெருங்கிய தோழியாகவும் மாறிவிட்டாள்.

"இன்னிக்கு என்ன நடந்ததுன்னு நீதான் பார்த்தியே! சிந்துஜா பள்ளிக்கூட மணி அடிக்கிற சமயத்திலே சினிமா ஹீரோயின் மாதிரி ஆடி அசஞ்சுகிட்டு உள்ளே வரா. மத்த பசங்க எல்லாம் காரிடார்லே நின்னுக்கிட்டு 'ஹிபிப் ஹுரே'ன்னு கோஷம் போடுறாங்க. அத்தோடு 'ஆட்டோகிராஃப் ப்ளீஸ்'னு புத்தகத்தை நீட்டறாங்க. ஏதோ ஒரு பாட்டு நல்லா பாடிட்டா... இவளைச் சொல்றதா? இல்லை, இந்தமாதிரி பசங்களைச் சின்னவயசிலேயே ஒரு மகா மேடையிலே ஏத்திவச்சு தலையிலே கிரீடம் வச்சு அளவுக்குமீறிக் கொண்டாடற டிவி சேனல்களைக் குறை சொல்றதா? எனக்கு புரியலைம்மா" காயத்ரி கோபமாகச் சொன்னாள்.

அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்? போன ஞாயிறன்று அப்பா அவளை ஐஸ்க்ரீம் பார்லருக்கு அழைத்துப் போனபோது இந்த தொலைக்காட்சி விஷயம் பற்றித்தான் அதிகமாகப் பேசினார்கள். "டாடி. நானும் வேணா போகவா? அம்மா ரொம்ப ஆசைப்படறாங்க..." என்று அப்பாவிடம் மெதுவாகக் கேட்டாள்.

"ஷக்தி! நான் சொல்றதை நல்லா மனசுலே வாங்கிக்க. எங்கப்பா ஜே. கிருஷ்ணமூர்த்திங்கறவரோட மாணவர். அவருடைய கொள்கை என்னவென்றால் போட்டி என்பதே தவறு. அதுவும் சிறுவயதில் இந்தப் போட்டிகள் குழந்தைகள் மனதைக் கெடுத்துவிடும். தோற்றுப்போனால் மனதில் வேதனை ஏற்படும். தாழ்வு மனப்பான்மை வரவும் வாய்ப்பு இருக்கு. இந்த காம்பெடீஷனில் எல்லாம் சேரவேண்டாம். அதில் எவ்வளவு ப்ரெஷர், ஸ்ட்ரெஸ் இருக்கும் தெரியுமா? அதனால் உனக்குப் பிடித்ததை மட்டுமே செய். அதை எந்த முறையில் பயன்படுத்த விரும்புகிறாயோ அப்படியே செய்."

ஷக்தி யோசித்தாள். அவளுக்கும் இதுதான் பிடித்தது. அப்பா சொன்னது எவ்வளவு உண்மை? ஏனென்றால், அம்மாவுக்குத் தெரியாத பல விஷயங்கள் அவளுடைய நெருங்கிய தோழியான 'சூப்பர் ஸ்டார்' சுப்ரஜா பற்றி அவளுக்குத் தெரியும். அதையெல்லாம் அம்மாவிடம் சொல்ல ஷக்திக்கு தைரியம் இல்லை. சொன்னால் அம்மா ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.

சுப்ரஜா தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவள். இந்த நிகழ்ச்சியில் தன்மகள் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே ஆந்திர மாநிலத்திலிருந்து அவளுடைய அம்மா சீதாலட்சுமி சென்னை வந்துவிட்டாள். சுப்ரஜாவின் அப்பா மூர்த்தி விசாகப்பட்டினத்தில் வேலையில் இருக்கிறார். அவர் பேச்சைக் கேட்காமல் அவரை விட்டுவிட்டு, ஒரு வங்கியில் லோன் போட்டு லட்சக்கணக்கில் பணம் எடுத்துக்கொண்டு எப்படியாவது மகளை இந்தப் போட்டியில் ஜெயிக்க வைக்கவேண்டும் என்று சென்னை வந்தவள் சீதாலட்சுமி.

சுப்ரஜா சென்னையில் ஷக்தி படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டாள். இருவரும் தினமும் ஒன்றாகச் சைக்கிளில் போனதால் மனம்விட்டுப் பேசமுடிந்தது. ஆனால் சில நாட்களிலேயே "இன்னிக்கு ரிகர்சல் இருக்கு ஷக்தி. என்னாலே வரமுடியாது. நீமட்டும் போ. அம்மா எனக்காக எத்தனை லட்சம் செலவழிக்கிறாங்க தெரியுமா? அவங்களை ஏமாற்ற விரும்பலை. எப்படியாவது நான் ஜெயிக்கணும்" என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்.

சுப்ரஜாவால் தினமும் பள்ளிக்கு வர இயலாததால் எந்தப் பரிட்சையையும் எழுதமுடியாமல் போயிற்று.

பள்ளிக்கூடத்தில் எல்லாரும் ஒன்றாக வேலூர்க்கோட்டைக்கு எக்ஸ்கர்ஷன் சென்றுவந்தார்கள். சுப்ரஜா அதற்கும் வரவில்லை. திங்கள் அன்று காலையில் மற்றவர்கள் மறுபடி வகுப்புக்கு வந்து கலகலவென்று சிரித்தபடி உல்லாசப் பயணத்தில் நடந்ததைப் பேசிக்கொண்டு இருந்தபோது சுப்ரஜா மட்டும் தனியாக, கொஞ்சம் சோகமாகவே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள் ஷக்தி.

அவள் பிரபலமாக ஆக மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவளைவிட்டு நகர ஆரம்பித்தார்கள். ஒன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சுப்ரஜா வந்தால் சட்டென்று அந்த இடம் மௌனமாகிவிடும். இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிற விஷயம்தான்.

அவளிடம் வந்த ஷக்தி மெதுவான குரலில், "இதுக்கெல்லாம் வருத்தப்படாதே சுப்ரஜா. உனக்குன்னு ஒரு பெரிய மிஷன் இருக்கு. அதை யாகமா நினைச்சு நடத்து. நிச்சயமா வெற்றி உனக்குத்தான்" என்றாள்.

சுப்ரஜா ஒன்றும் பதில் சொல்லாமல் தோழியையே வெறித்துப் பார்த்தாள். சில வினாடி மௌனத்திற்குப் பிறகு சொன்னாள். "இது என்னுடைய மிஷன் இல்லை ஷக்தி. என் அம்மாவுது. அவங்க அப்பா, தாத்தா எல்லோரும் பெரிய சங்கீத பரம்பரை. அம்மாவுக்கு உலகமெல்லாம் புகழும் மிகப்பெரிய மேடைப்பாடகியா வரணும்னு ஆசை. வீட்டுப் பெரியவங்க பாடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. கல்யாணம் ஆனபிறகு என் அப்பாவும் அப்படி ஒண்ணும் சப்போர்ட் பண்ணலை. இப்ப இந்த நிகழ்ச்சிக்காக, நான் பிறந்து வளர்ந்த ஊர், என்னோட டாடி, சினேகிதர்கள் எல்லாரையும் விட்டுட்டு புது இடத்துக்கு வந்து உழைக்கிறேன். எனக்கு உங்க மொழிகூட சரியா தெரியலை. என் அப்பாவுக்கும் இது பிடிக்கவேயில்லை. அதனாலே அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் எப்போதும் சண்டையும் மனஸ்தாபமும்தான். அவங்க ஒண்ணுசேர்ந்து எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னுதான் தினம் கடவுளை வேண்டிக்கிறேன். அது நடக்குமான்னு தெரியலை!"

"நீ என்ன சொல்றே சுப்ரஜா?"

"அப்பா என்னோட டெலிஃபோனில் பேசும்போது 'அம்மாகிட்டே கொடுக்கவா?'ன்னு கேட்டேன். அதுக்கு 'வேண்டாம். சீதாலட்சுமி ரொம்பவே மாறிட்டா. எனக்கு அவளோட பேசறதுக்கு ஒண்ணும் இல்லை. ஆனா... ஒண்ணுமட்டும் நினைவிலே இருக்கட்டும். நான் எப்பவும் உன் பக்கத்திலயேதான் இருக்கேன்' அப்படின்னு சொன்னார். அம்மாவும் அப்பாவும் டைவர்ஸ் பண்ணிடுவாங்களோன்னு பயப்படறேன் ஷக்தி!"

சுப்ரஜா சொன்ன விஷயங்கள் ஷக்தியின் மனதில் அழுத்தமாகப் பதிந்தன. பாவம் சுப்ரஜா! மறுபடி "ஐஸ்க்ரீம் பார்லர் போலாமா டாடி?" என்று கேட்டபோது மகள் தன்னிடம் ஏதோ தனியாகப் பேசவிரும்புகிறாள் என்பதை அப்பா புரிந்துகொண்டார்.

பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமை மெதுவாகச் சுவைத்தவள் "டாடி, ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் அம்மா பாடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டீங்க? அவங்க மனசு எவ்வளவு வருத்தப்பட்டிருக்கும்? அதுவும் அவங்க பிரபலமாய்ட்டு வந்த பீக் டைம்லே தடை பண்ணிட்டீங்களே!"

பெண்ணின் குரலிலிருந்த வருத்தம் அவனுக்குப் புரிந்தது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு தாழ்ந்த குரலில் பதில் சொன்னான். "எங்களுடையது அரேஞ்ச்டு மேரேஜ்தான் கண்ணம்மா. வீட்டிலே எவ்வளவு வேணும்னாலும் பாடிக்கலாம். அல்லது சொல்லிக் கொடுக்கலாம். ஆனா மேடையிலே பாட ஆரம்பிச்சா அதுக்கப்புறம் வீட்டிலே தங்கமுடியாது. உலகம் முழுதும் தினம் சுத்தினாதான் கச்சேரி, கரீயர். நீயும் ஒரு வருஷத்திலே பிறந்துட்டே. உன்னைத் தனியா வீட்டிலே விட்டுட்டுப் போனா உன்னை யார் பார்த்துக்கறது? அவ தினம் ஒரு ஊர்லே. அல்லது நாட்டிலே, நான் இங்கே ஆஃபீஸ்னு போய்க்கிட்டு இருந்தா என்ன குடும்ப லைஃப் இருக்க முடியும்? அதுக்குத்தான் யோசிச்சு முடிவு பண்ணினோம். காயத்ரியும் சரின்னுதான் சொன்னா. ஆனா அவ மனசுக்குள்ளே இன்னும் அந்தக் குறை இருக்குன்னு எனக்கும் தெரியும்."

ஷக்தி அப்பா சொன்னதை அன்று முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தாள். அவர் சொல்வதைப் பார்த்தால் ஒரு பெண் - மனைவி, அதன்பின் தாயாகும்போது சங்கீதம், நாட்டியம் என்று கரீயரை வைத்துக்கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தமா? அப்படி என்றால் சுப்ரஜா அந்த வயதுக்கு வரும்போது என்ன செய்யப்போகிறாள்?

மறுநாள் பள்ளிக்கு சுப்ரஜா வரவில்லை. ஷக்தி அவளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாள். சுப்ரஜா உடனே செல்லில் பேசினாள். அவள் குரல் உடைந்திருந்தது. மிகவும் அழுதமாதிரித் தோன்றியதால் "என்ன விஷயம் சுப்ரஜா?" என்றாள். "ஷக்தி. நான் இப்ப ரிகர்ஸல்லே இருக்கேன். ரொம்பநேரம் பேசமுடியாது. அடிக்கடி இப்படி ரிகர்சல், டிவி ரெகார்டிங்னு காரணம் காட்டி வராததாலே எனக்கு ஸ்கூல்லே டி.சி. கொடுத்திட்டாங்க. ப்ரின்ஸிபலிடம் என் அம்மா எவ்வளவோ கெஞ்சிப்பாத்தாங்க. ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல காலேஜிலே சேர்த்துக்கிடறதில்லையா அதுமாதிரி வச்சுக்கங்களேன்னு கூட கேட்டுப்பாத்தாங்க. ஒண்ணும் பலிக்கலை. இனிமே நான் எந்த ஸ்கூலுக்குப் போறது? எப்படி டாக்டராவது? அதுதானே என்னுடைய கனவு. எனக்கு ஒண்ணுமே புரியலை ஷக்தி..." அவள் நன்றாகவே அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஷக்திக்கு அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. டாக்டராக வேண்டும் என்பதுதான் அவளுடைய கனவு என்பதே முதலில் அவளுக்குப் புதிதாக, புதிராக இருந்தது.

அன்று சாயந்திரம் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தபோது அம்மா எப்போதும்போல் டிவி முன்னாடி அமர்ந்திருந்தாள். மடியில் திருத்துவதற்கு டெஸ்ட் பேப்பர்கள். பெண்ணைப் பார்த்தவுடன் அவள் முகம் மலர்ந்தது. "இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா? உன் ஃப்ரண்ட் சுப்ரஜாவுக்கு டி.சி. கொடுத்து ஸ்கூலைவிட்டு அனுப்பிட்டோம். தெரியுமா?"

"அனுப்பி...ட்டோமா? அப்படின்னா?"

"ஆமா... ஹேவ் தி கேக் அண்ட் ஈட் இட் டூ அப்படின்னு ஒரு பழமொழி இருக்கே தெரியுமா? அதுமாதிரி சுப்ரஜாவுக்கு பிரபலமாகவும் இருக்கணும். பள்ளிக்கூடத்துக்கும் வரணும்னா நான் விடுவேனா? நான்தான் ப்ரின்ஸிபலிடம் டி.சி. கொடுக்கச்சொல்லி சிபாரிசு பண்ணினேன். அவ அம்மா ஒரு சண்டிராணி. ப்ரின்ஸ்பல் ரூமுக்கே வந்துட்டா. நானும் அங்கே இருந்தேன். 'என் மக சுப்ரஜா இப்ப ஒரு செலிப்ரிடி. அவ உங்க ஸ்கூல்லே படிச்சா உங்களுக்குத்தானே பெருமை... அவளை நீங்க மறுபடி சேர்த்துக்காம போனா நான் லாயர் வச்சு சூ பண்ணுவேன்'னு பயமுறுத்திட்டுப் போனா."

ஷக்தி பேசிக்கொண்டே போன தன் அம்மாவைப் பார்த்தாள். பதில் பேசாமல் மௌனமாகத் தன் அறைக்குச் சென்று படுக்கையில் தொப்பென்று விழுந்தாள்.

கட்டிய கணவனை விட்டுவிட்டு, டாக்டராக வேண்டும் என்று நினைக்கும் மகளின் மனதைப்பற்றி யோசிக்காமல் மேடை ஏறவிடும் ஒரு அம்மா!

தானோ தன் பெண்ணோ புகழாரம் சூடமுடியாத நிலையில் வாழ, வேறொரு சூழ்நிலையில் அப்படி முன்னுக்கு வரும் ஒரு சிறுசை முளையிலேயே கிள்ளிவிடத் துடிக்கிற ஒரு அம்மா!

அம்மா என்றால் தெய்வம். நம் கலாசாரம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அம்மா தன் குழந்தைக்குத்தான் தெய்வம். மற்றக் குழந்தைகளுக்கு அல்ல. அவர்களும் ஆசாபாசங்கள் நிரம்பிய சராசரி மனிதர்கள்தான்.

இந்த உண்மை உறைக்க, ஷக்தி பாட்டு சாதகம் பண்ணலாம் என்று எடுத்துவைத்திருந்த எலெக்ட்ரானிக் தம்புராவை அதன் பையில் வைத்துப் பரண்மேலே எறிந்துவிட்டு மறுபடி படுக்கையில் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்.

அவளுக்கு அடக்கமுடியாமல் அழுகை வந்தது.

கீதா பென்னெட்,
லா வெர்ன், கலிஃபோர்னியா

© TamilOnline.com