ஆகஸ்ட் 20, 2016 அன்று செல்வன். ஸ்ரீராம் சுப்பிரமணியனின் மிருதங்க அரங்கேற்றம் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் மில்பிடாஸ் ஜெயின் சென்டர் அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீராம், மிருதங்க வித்வான் ஸ்ரீகோபி லக்ஷ்மிநாராயணன் ஃப்ரீமான்டில் நடத்தும் சாரதா தாளவாத்தியப் பள்ளியின் மாணவர்.
சங்கீத ரத்னாகரா வித்வான் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் கச்சேரியில், வித்வான் டெல்லி சுந்தராஜன் (வயலின்), செல்வன். அஜய் கோபி (கஞ்சிரா), ஆகியோர் உடன் வாசிக்க, ஸ்ரீராமின் அரங்கேற்றம் நடந்தேறியது. ஜனரஞ்சனி வர்ணத்தில் ஆரம்பித்து, சக்தி கணபதிம் (நாட்டை), தண்யுடெவ்யுடே (மலயமாருதம்), தல்லி நின்னு (கல்யாணி), பரமபுருஷம் (லலித பஞ்சமம்), ராமா நீயட (கரஹரப்ரியா), சதாமதின் (கம்பீரவாணி), ராகம் தானம் பல்லவி (கேதார கெளளை), அஷ்டபதி (செளராஷ்ட்ரம்), தில்லானா (பெஹாக்) ஆகிய பாடல்களை பக்தி பாவங்களுடன் தனக்கேயுரிய பாணியில் அருமையாகப் பாடினார் சந்தானகோபாலன்.
ஸ்ரீராம் பாடல்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, நிரவல் மற்றும் ஸ்வரங்களைக் கையாண்டவிதம் நன்றாக இருந்தது. இரட்டை களை ஆதிதாளத்தில் அமைந்த தனி ஆவர்த்தனத்தில் சதுஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம் ஆகிய நடைகளை வாசித்தவிதம் சிறப்பு. டெல்லி சுந்தராஜனின் வயலின் இசைக்கு ஈடுகொடுத்து அஜய் கஞ்சிரா வாசித்தது வெகுநேர்த்தி. சந்தானகோபாலனின் சிஷ்யர்கள் திரு. ஹரி தேவநாத், திருமதி கஸ்தூரி சிவகுமார், திரு. விவ்ரித் ப்ரசன்னா ஆகியோரின் பின்பாட்டு நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தது.
முக்கியவிருந்தினர் அஷோக் சுப்ரமணியம் வித்வான்களையும், குறிப்பாக ஸ்ரீராமின் திறமையையும், குருவின் உழைப்பையும் பாராட்டிப் பேசினார். ஸ்ரீராமின் தந்தை சுப்ரமணியன், தாயார் சாந்தி, சகோதரி சுவாதி, ஆகியோரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
வசந்தா, மில்பிடாஸ், கலிஃபோர்னியா |