ஆகஸ்ட் 27, 2016 அன்று செல்வியர் அனன்யா மற்றும் அக்ஷயா சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் மில்வாக்கி நியூ பெர்லின் வெஸ்ட் பெர்ஃபார்மிங் சென்டர் கலையரங்கில் நடைபெற்றது. இவர்கள் நாட்டியர்ப்பணா நடனப்பள்ளி இயக்குனர் 'நிருத்ய சேவாமணி' திருமதி. கிருபா பாஸ்கரின் மாணவிகள்.
தோடயமங்களம் "ஜெயஜெய சம்போ" என்ற ராகமாலிகையுடன் நிகழ்ச்சி துவங்கியது. பின் "அழகிய மயிலே" என்ற பாரதிதாசன் பதத்தை அடுத்து "கண்ணா கார்மேக வண்ணா" என்ற சிம்மேந்திரமத்யம வர்ணம். இதற்குக் கிருஷ்ண லீலைகளை முகபாவத்தில் காட்டியது நேர்த்தி. தொடர்ந்து "அழகு தெய்வமாக வந்து" என்ற காவடிச்சிந்து கைதட்டலை அள்ளியது. ஊத்துக்காடு வேங்கடகவியின் "அசைந்தாடும் மயிலொன்று" பதம் மேடையில் வண்ணமயில்கள் நடனமாடுவதுபோல் இருந்தது. பாரதியாரின் "காலா உன்னை நான்" என்ற பாட்டு புதுமையாக இருந்தது. அர்ச்சித் பாஸ்கர் சுவைபட நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். பின்னர் தில்லானா, மங்களத்துடன் அரங்கேற்றத்தை நிறைவு செய்தனர்.
சகோதரிகளின் பெற்றோர் டாக்டர் கீதா, பிரகாஷ் கணேஷ் வழங்கிய நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. திருமதி. கிருபா பாஸ்கரன் (நட்டுவாங்கம்), திரு. முரளி பார்த்தசாரதி (வாய்ப்பாட்டு), திரு. எம்.எஸ். சுக்கி (மிருதங்கம்), திரு. சுவாமிநாதன் நடராஜன் (வயலின்), மாஸ்டர் அர்ச்சித் பாஸ்கர் (கீபோர்ட்) ஆகியோரின் துணை நிகழ்ச்சியைச் சிறப்புறச் செய்தது. மேலும் திருமதி. வித்யா ராஜாராமின் மேடையலங்காரம் கண்கொள்ளாக் காட்சி.
லலிதா வெங்கட்ராமன், மில்வாக்கி, விஸ்கான்சின் |