ஸ்ரீபாதுகா அகாதமி: அநிருத் ராஜா பாட்டுக்கச்சேரி
செப்டம்பர் 16, 2016 அன்று, சான் ஹோஸேயில் உள்ள Community of Spirit, Hicks Avenue அரங்கில் ஸ்ரீபாதுகா அகாதமியின் ஆதரவில் திரு, அநிருத் ராஜாவின் வாய்ப்பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. பைரவிராக அடதாள வர்ணம், மாணவன் அநிருத்தின் தெளிவான உச்சரிப்பில் நன்றாக இருந்தது. "கணநாதனே, குணபோதனே" எனும் சாரங்காராக பாடலை அழுத்தம் கொடுத்துப் பாடியது சிறப்பு. தொடர்ந்து தோடிராகத்தில் "தணிகைவளர் சரவணபவா" என்னும் பாபநாசம் சிவன் பாடலுக்கு கீழ் ஸ்தாயில் நின்று ஆலாபனை செய்தது, "துள்ளி விளையாட" எனும் இடத்தில் நிரவல், பின் ஸ்வரம் யாவும் பாடியது பிரமாதம்.

"ஸரஸஸாமதான" என்னும் தியாகராஜ கிருதி, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் "ரத்னகஞ்சுகதாரிணி" போன்ற பாடல்களில் அநிருத்தின் ஆலாபனை சிறப்பாக இருந்தது. மாணவன் ஸ்ரேயஸ் சீனிவாசனின் வயலின் தனி ஆலாபனை நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தது. அநிருத் சுருதி விலகாமல், இனிமையாக மேல் ஸ்தாயியில் பாடியதும், எடுப்பான ஸ்வரங்களுடன் முடித்ததும், மாணவன் சந்தோஷ் ரவீந்திர பாரதியின் மிருதங்கம் தனி ஆவர்த்தனமும் வெகு சிறப்பு.

புரந்தரதாசரின் வெங்கடாசல நிலையம், அரியக்குடியின் பிலஹரி ராகத் தில்லானா ஆகியவற்றைச் சிறப்பாகப் பாடி திருப்புகழோடு கச்சேரியை நிறைவு செய்தார் அநிருத்.

ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி இயக்குநர் குரு திருமதி. விஷால் ரமணி தனது உரையில், அநிருத் ராஜா கன ராகங்கள், கடினமான தாளங்களைப் பிசகாமல் கையாண்டதை பாராட்டி, மாணவர்களை வாழ்த்தினார்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com