சிருஷ்டி: 'சம்பாவனா' நடன சமர்ப்பணம்
2016 செப்டம்பர் 17, 18 நாட்களில் சிருஷ்டி நடனப்பள்ளியின் மாணவியர் 'சம்பாவனா' என்ற நடனநிகழ்ச்சியை வழங்கினர். கலைமாமணி குரு சாருலதா ஜெயராமன் தென்கலிஃபோர்னியாவின் இர்வைன் நகரில் இந்த நடனப்பள்ளியை நிறுவி நடத்திவருகிறார். இவ்வாண்டில் முதன்முறையாக, அரங்கேற்றம் நடந்தேறிய தமது ஆறு மாணவிகளின் ஆறு தனிநடன நிகழ்ச்சிகளை, ஒருநாளுக்கு மூன்று என வழங்கினார்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு சிஷ்யைக்கும் ஒரு வாக்கேயக்காரரின் படைப்பைத் தேர்ந்தெடுத்து 'சம்பாவனா' (காணிக்கை) என்ற தலைப்பில் அளித்தார்:

செல்வி அனன்யா - பாபநாசம் சிவன்;
செல்வி விபா - தஞ்சை நால்வர் திருவாளர்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு;
செல்வி ஹன்சிகா - கே.என். தண்டாயுதபாணி பிள்ளை;
திருமதி. ஸ்ரீலதா - ஸ்வாதித்திருநாள்;
செல்வி மான்ஸி - லால்குடி ஜெயராமன்;
செல்வி சௌம்யா - பாலமுரளி கிருஷ்ணா

புராண, இதிகாசக் கதைகளை நடன வடிவமைப்பில் கோவையாக உள்ளடக்கி மனதைக் கொள்ளைகொள்ளும் விதத்தில் குரு சாருலதா வழங்கினார். மாணவிகளின் திறமை, அபிநய பாவத்திற்கேற்ப பாடல்களையும், உருப்படிகளையும் தேர்வுசெய்து அற்புதமான நடன விழாவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திரு. ப்ரவீண் (வாய்ப்பாட்டு), காரைக்கால் திரு. வெங்கட் (வயலின்), திரு. அதுல்குமார் (குழலிசை), மாயவரம் திரு. டி. விஸ்வநாதன் (மிருதங்கம்) இவர்களோடு நட்டுவாங்கத்தில் குரு சாருலதா தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தனர்.

இந்திரா பார்த்தசாரதி,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com