அரங்கேற்றம்: ராஹுல் சுவாமிநாதன்
செப்டம்பர் 18, 2016 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ ராஹுல் சுவாமிநாதனின் மிருதங்க அரங்கேற்றம் மில்பிடாஸ் ஜெயின் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. இவர் பிரபல மிருதங்க வித்வான் கோபி லக்ஷ்மிநாராயணன் ஃப்ரீமான்டில் நடத்தும் சாரதா தாளவாத்தியப் பள்ளி மாணவர்.

சங்கீத கலாநிதி சேஷகோபாலன் அவர்களின் பிரதம சிஷ்யர்களில் ஒருவரான வித்வான் கொல்கத்தா விஜயராகவன் (சென்னை) இசைக்கச்சேரியில், திரு. அரவிந்த் லக்ஷ்மிகாந்தன் (வயலின்), திரு. கணேஷ் ராமநாராயணன் (கஞ்சிரா) ஆகியோர் உடன் வாசிக்க, ராகுலின் அரங்கேற்றம் நடந்தது.

சாவேரி வர்ணத்தில் ஆரம்பித்து, ஹம்சத்வனியில் வாதாபி கணபதியை வணங்கி, மார்க்க ஹிந்தோளத்தில் ஆனந்தமார்க்கமாகி, ஆனந்தபைரவியில் சம்பூர்ணமாகி, பூர்விகல்யாணியில் ஸ்வரம் பாடி, பிலஹரியில் சஞ்சரித்து, தோடியில் "தாசரதே"யின் அனுக்கிரஹத்தைத் தேடி, தில்லானாவுடன் ஜனரஞ்சகமாகப் பாடி முடித்தார் விஜயராகவன். கச்சேரி முழுவதும் அனுசரணையாக மிருதங்கம் வாசித்த ராஹுல் தனி ஆவர்த்தனத்தில் இரண்டு களை ஆதிதாளத்தில் கணேஷின் கஞ்சிரா சஹிதம் முத்திரை பதித்தது கச்சேரியின் உச்சக்கட்டம்.

தலைமைதாங்கிய வித்வான் டெல்லி சுந்தரராஜன் மற்றும் சிறப்பு விருந்தினர் கர்னாடிக் சாம்பர் கான்சர்ட்ஸ் (CCC ) நிறுவனர் திருமதி.பத்மா மோகன் இருவரும் வித்வான்களையும், குறிப்பாக ராகுலின் திறமையையும், குரு கோபி லக்ஷ்மிநாராயணின் உழைப்பையும் பாராட்டிப் பேசினார். ராகுலின் பெற்றோர் முரளி சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீவித்யா பாலசுப்ரமணியன் நன்றி உரைக்க அரங்கேற்றம் நிறைவுற்றது.

கிருஷ்ணசுவாமி,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com