மாயா ராமச்சந்திரன் நடன அரங்கேற்றம்
ஜூலை 5, 2005 அன்று மாயா ராமச்சந்திரனின் நடன அரங்கேற்றம் கலி·போர்னியாவின் ·பிரிமான்ட், ஓலோனி கல்லூரி, ஜாக்சன் அரங்கத்தில் நடைபெற்றது.

மாதா, பிதா, குரு, தெய்வம், பூமித்தாய் ஆகியோருக்கு வந்தனம் செய்து நிகழ்ச்சியைத் தொடங்கியவிதம் மிக நன்று. புஷ்பாஞ்சலிக்கு, கணேச ஸ்துதிக்குப் பின், ஆபோகி ராக வர்ணத்திற்கு மாயா அருமையாகப் பதம் பிடித்தார்.

'தேவி நீயே துணை' எனும் கீரவாணி ராகக் கீர்த்தனையில் மதுரை மீனாட்சியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, வந்திருந்தோரின் பாராட்டைப் பெற்றார்.

'ஆடிக்கொண்டார்' கிருதியில் தில்லை அரசனைக் காண ஆயிரம் கண் போதாது எனச் சிவனைச் சித்தரித்த விதம் சித்தத்தைக் கொள்ளை கொண்டது. சிறிய வயதிலேயே அபாரத் திறமையுடன் ஆடுகிறார் என்பதில் ஐயமில்லை.

அடுத்து 'நான் ஏனோ மாடிதெனே' என்னும் புரந்தரதாசர் கிருதியில் யானை கதறியதும் பகவான் ஓடிவந்து உதவியதையும் தத்ரூபமாக அபிநயம் பிடித்தது அருமை.

இறுதியில் வந்த தில்லானா நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் அறிமுகப்படுத்தியது.

சீறும் காளிங்கனின் தலையில் நடனமாடி பகவான் கிருஷ்ணன் கடைசியில் காளிங்கனுக்கு மோட்சமளித்ததை அப்படியே படம் பிடித்துக் காண்பித்து, நிகழ்ச்சியை உச்சத்திற்கு எடுத்துச் சென்று விட்டார் மாயா.

குரு விஷால் ரமணி ஒவ்வொரு அரங் கேற்றத்திலும் புதுவிதமாக நிகழ்ச்சிகளை ரசிக்கும் விதமாக அமைத்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. மதுரை முரளிதரன் நட்டுவாங்கம், கோமதிநாயகம் குரலிசை, மற்றும் வயலின், மிருதங்க வித்வான்களின் ஒத்துழைப்பு யாவும் நிகழ்ச்சியைக் களை கட்டச் செய்தன.

சீதா துரைராஜ்

© TamilOnline.com