அபிநயா: 'வானர லீலா'
2016 நவம்பர் 12, 13 தேதிகளில் சான் ஹோசேயின் அபிநயா டான்ஸ் கம்பனி இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியாக 'வானர லீலா' நாட்டிய நாடகத்தை மெக்ஸிகன் ஹெரிடேஜ் ப்ளாசாவில் வழங்க உள்ளனர். ராமாயண காவியத்தின் முக்கியப்பகுதி வனவாசம் சென்ற ராமர் வானரங்களுடன் கொள்ளும் நட்பு. 'வானர லீலா' ராமாயணத்தில் வானரங்களின் பங்கினை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வானர உருவில் வந்த கடவுளான ஹனுமனிடமும், வானர அரசனான சுக்ரீவனிடமும் ராமர் சீதையை மீட்க உதவிகேட்பது, மீட்பில் வானரங்களின் உற்சாகமான பங்கு, ஹனுமனின் துணிச்சலான லங்கா விஜயம், சீதையைக் கண்ட மகிழ்ச்சியை ராமரிடம் பகிர்வது, பின்பு சீதையை மீட்கப் பாலம் அமைத்தல் போன்ற சம்பவங்களை நடனவடிவில் வழங்க உள்ளனர்.

இதற்குத் தூண்டுதலாக அமைந்தது 'ஏசியன் ஆர்ட் மியூசியம்' நடத்தும் ராமாயணக் கண்காட்சி. அபிநயாவின் வானர லீலாவும், இந்தக் கண்காட்சியும் விரிகுடாப்பகுதியில் வாழும் இந்தத் தலைமுறையினருக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.

நாட்டியப்பள்ளி முதல்வர் மைதிலி குமார் மற்றும் துணைமுதல்வர் ரசிகா குமார் 'வானர லீலா'வை இயக்கியுள்ளனர். ஹனுமனின் முக்கியப் பங்கினை நடனவடிவில் வழங்க இருப்பது ரசிகா குமார். மைதிலி குமார், ரசிகா குமார், மாளவிகா குமார் மற்றும் அஞ்சனா தாஸ் நடன வடிவமைக்க, ஆஷா ரமேஷின் இசையாக்கத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் நடனமாட உள்ளனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com