தீபாவளி என்றறியப்படும் நரகசதுர்த்தசி, எப்படி ஒரு மனிதனின் குணநலன்கள் ஒருவனைத் தேவனாகவோ அசுரனாகவோ மாற்றுகிறது, என்பதைப் போதிக்கிறது.
நரகன் முதலில் நரனாகத்தான் (மனிதனாக) இருந்தான். அவன் ஓர் அரக்கனாக மாறிவிடவே அவனை 'நரகாசுரன்' என்று அழைத்தனர். தனது அசுரகுணத்தால் அவன் நரகத்தை நோக்கி நடைபோட்டான். ஓர் அரசனான அவன் இடைவிடாத போதனை மற்றும் கட்டளைகளால் தனது குடிமக்களையும் தன்னைப்போலவே அரக்ககுணம் கொண்டவர்களாக்கி விட்டான். தீமையும் வன்முறையும் அந்த நாட்டில் தலைவிரித்தாடின.
நரகாசுரனை அழித்து, மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற பகவான் தீர்மானித்தார். பணிவு, நற்குணம் என்னும் சாத்விகமான பாதையில் அவர்களைச் செலுத்த எண்ணினார். இதற்குப் பகவான் ஒரு வினோதமான நடைமுறையைக் கையாண்டதை நீங்கள் கவனிக்கவேண்டும். நரகாசுரனின் தேசத்தின் மீது பகவான் படையெடுத்தார், ஒருமுறையல்ல, பலமுறை! முதல் தாக்குதலின்போதே அவரால் அவனை அழித்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. திரும்பத் திரும்ப அவனைக் கோபத்தில் வெடித்தெழச் செய்தார். ஒவ்வொரு தாக்குதலும் அவனை வலுவிழக்கச் செய்தது. அவனுடைய எதிர்ப்பும் வலுவற்றதானது.
கோபம் ஒருவரை மிகவும் வலுவிழக்கச் செய்துவிடும். அதனால்தான் அவர் அவனுக்குத் திரும்பத் திரும்பக் கோபமூட்டினார். அவன் மிகவும் பலவீனனாக ஆனபின்பும் அவனது மரணம் தன் கையால் நேரக்கூடாதென எண்ணினார். தனது தேவியான சத்தியபாமாவை அழைத்துச் சென்று நரகாசுரனைக் கொல்லும்படிக் கூறினார். பகவானின் போர்த்தந்திரத்தால் அவனது வலுவில் முக்கால் பங்கு போய்விடவே, சத்தியபாமா அவனை எளிதில் கொன்றுவிட்டாள்.
அத்தகைய அசுரனின் அழிவைக் கொண்டாடுகிறது தீபாவளித் திருநாள். அஞ்ஞான இருளைப் பகவான் அழித்ததால் அன்றைக்கு மக்களிடமிருந்து ஆத்மஞானத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. எங்கே ஆத்மஞானத்தின் ஒளி வீசுகிறதோ அங்கே எண்ணம், சொல், செயல் இவற்றிலிருந்து தீமைகள் அஞ்சி ஓடிவிடும்.
ஸ்ரீ சத்திய சாயிபாபா நன்றி: சனாதன சாரதி |