எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 12)
அருணுக்குத் திடீரென்று நம்பிக்கை பிறந்தது. அந்தக் கடிதத்தில் என்ன எழுதியிருக்குமோ என்று பரபரப்புடன் பிரித்தான். அதற்குள் கீதாவும் வண்டியிலிருந்து இறங்கி ஓடிவந்தார். அம்மாவிடம் லெட்டரைக் கொடுத்தான்.

"அருண்,
உன் செல்ல நாய்க்குட்டிக்காக நீ மன்றாடியதைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.எனக்கு மனது கேட்கவில்லை. டேவிட் ராப்ளே பிடிவாதக்காரன் மட்டுமல்ல, ஈவிரக்கம் இல்லாத மனிதனும்கூட.

விதையை நீ எவ்வளவு சீக்கிரம் நட்டு அதிலிருந்து வரும் பழத்தைப் பிழிந்து சாற்றை பக்கரூவுக்குக் கொடுக்கிறாயோ, அவ்வளவு நல்லது.

நான் மேற்கொண்டு சொல்வதை கவனமாகப் பின்பற்றவும். ஹோர்ஷியானா நிறுவனம் தனது வளாகத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு பொதுநிலத்தைத் தன்வசம் வைத்துள்ளது. அந்தப் பகுதியில் வேலிபோட்டு அங்குள்ள ஒரு சிறு குளத்தையும் சட்டத்தை மீறி வைத்துள்ளது. அந்தப் பகுதி நம் எல்லோருக்கும் சொந்தம். உள்ளே செல்ல நமக்கு எந்த அனுமதியும் வேண்டாம். மாதம் ஒருமுறை அந்தக் குளத்து நீரை வெளியே உள்ள இடங்களுக்குப் பாய்ச்ச ஒரு மதகைத் திறப்பார்கள். அது திறக்கும் சமயம் நைஸாக நுழைந்துவிட்டால், உள்ளே சென்று விதையை நட்டுவிடலாம். இன்றிரவு, எட்டுமணி அளவில் மதகு திறக்கவிருக்கிறது. நாளையே உனக்கு அந்தப் பழம் கிடைத்துவிடும். இன்று முடியாவிட்டால் இன்னும் ஒருமாதம் கழித்துதான் அந்த வாய்ப்பு கிடைக்கும். பக்கரூவைப் பிழைக்கவைக்க இதுதான் கடைசி வழி. எல்லாம் நல்லபடி நடக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

கீதா மணியைப் பார்த்தார். எட்டு ஆக அரைமணி நேரம் இருந்தது. வீட்டுக் கதவைத் திறக்க இருந்தவர், சடாலென்று அருணின் கையை இழுத்து, "கண்ணா வா. இந்த லெட்டர் சொல்ற இடத்துக்குப் போகலாம்" என்றார்.

"நிஜமாவா?"

"ஆமாம். வா, போய்க்கொண்டே பேசலாம்" என்றார்.

மீண்டும் வண்டியில் அமர்ந்தார்கள். கீதா கிடுகிடுவென்று ரமேஷுக்கு டெக்ஸ்ட் செய்தார். நேரடியாகச் சொல்லாமல், வரத் தாமதமாகும் என்றுமட்டும் தகவல் கொடுத்தார். வண்டியைக் கிளப்பும்போது சிறிது தூறல் போட ஆரம்பித்தது. வண்டி சிறிது தூரந்தான் போயிருக்கும், இடி மின்னலோடு மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

இருட்டு, மழை இரண்டும் சேர்ந்ததில் வழி சரியாகத் தெரியவில்லை. கடிதம் சொன்ன இடத்தை அடைந்துவிட்டனர். ஆனால், அந்த மதகை இருட்டில் கண்டுபிடிக்க முடியவில்லை. மணி எட்டு ஆகச் சில நிமிடங்களே இருந்தது. "ஃப்ளாஷ் லைட் கொடுங்கம்மா. நான் இறங்கிப் போய் பாக்கறேன்" என்றான் அருண். இருட்டில், கொட்டும் மழையில் தனியே அருணை அனுப்பக் கீதாவுக்கு மனமில்லை. அவனை பக்கரூவோடு விட்டுவிட்டுப் போகவும் இஷ்டமில்லை. கணவரை அழைத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது. இனிமேல் அதை நினைத்துப் பிரயோஜனம் இல்லை.

எட்டாகிவிட்டது. இருட்டு. மழையோடு காற்றும் சேர்ந்து சத்தம் பெரிதானது. தடங்கலுக்குமேல் தடங்கலாக நாள்முழுவதும் சந்தித்ததில் கீதா மிகச் சோர்ந்திருந்தார். அப்பொழுது ஒரு விசைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் வண்டியைத் திருப்பி ஹை பீம் விளக்கை அந்தப்பக்கம் காட்டினார். கடிதம் சொன்னதுபோல் மதகு டாண் என்று 8 மணிக்குத் திறப்பது தெரிந்தது.

"அம்மா, நான் போறேன்" என்று சொல்லி, பக்கரூவைத் தோளில் தூக்கிக்கொண்டு அருண் ஓடினான். அது அவரைத் திடுக்கிட வைத்தாலும் அவன் செய்வது அந்த நேரத்திற்குத் தகுந்ததுதான் என்று நினைத்தார். மேலும் ஒரு தடங்கல்! பாதி திறந்துகொண்டிருந்த மதகு பெருங்காற்றில் மின்சாரத்தடை உண்டாகி அப்படியே நின்றுபோனது. மதகடி வழியே நுழைந்து போகலாம் என்றால் மிகவும் குறுகலாக இருந்தது. கீதாவுக்கு அழுகையும் கோபமுமாகப் பொங்கிவந்தன.

"அம்மா, நான் அந்த இடைவெளியில் போய்ப் பார்க்கிறேன்" என்றபடி பக்கரூவைத் தூக்கிக் கொண்டுபோனான். கையில் ஃப்ளாஷ் லைட்டை எடுத்துக்கொண்டான். சிலநொடிகளில் நுழைந்து மறுபக்கம் போய்விட்டான். "நான் விதையை நட்டுக்கறேன். கவலைப்படாதீங்க" என்று அவன் குரல் கேட்டது. பிரார்த்தனை செய்தபடி கீதா அப்படியே நின்றார். எதற்கோ பேண்ட் பாக்கட்டிற்குள் கைவிட்டவர், விதைகள் உள்ள கவர் தன்னிடமே இருப்பதை அறிந்தார்.

"அருண்… அருண்" சக்தியை மீறிக் கத்தினார். அந்தப் பெரும் காற்றின் சத்தத்தில் அது காணாமல் போனது. "அருண்! அருண்! எங்கே கண்ணா நீ இருக்கே?" அருணிடமிருந்து பதில் இல்லை. கீதாவால் அந்த குறுகலான இடைவெளியில் போக முடியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்தார்.

"அம்மா!" எங்கிருந்தோ ஒரு சத்தம்.

"கண்ணா!" கீதா சக்தியெல்லாம் ஒன்றுதிரட்டிக் கத்தினார்.

"விதைகளை எடுத்துக்க மறந்துட்டேன் அம்மா. தரீங்களா?" கேட்டின் மறுபுறத்திலிருந்து அருணின் குரல் கேட்டது. கீழே குனிந்து, கையை இடைவெளியில் நீட்டி, விதைகள் கொண்ட பிளாஸ்டிக் கவரைக் கொடுத்தார்.

"கவலைப்படாதீங்க. நான் பாத்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு அருண் ஓடிப் போய்விட்டான்.

அம்மா கொடுத்த கவரில் இருந்த இரண்டு விதைகளில் ஒன்றைக் கையில் எடுத்தான். மழை ஈரத்தில் விதை நழுவி விழுந்து தண்ணீரோடு போனது. பக்கரூவைக் கழுத்திலிருந்து இறக்கி, வெகு ஜாக்கிரதையாக மீதமிருந்த ஒரே விதையை எடுத்தான். மண்டியிட்டு அமர்ந்து, ஒருகுழி தோண்டி, அதில் விதையை நட்டு, மழைத்தண்ணீரில் அடித்துப் போகாமல் கையால் அணைத்தான். சோர்வு கொஞ்சம் கொஞ்சமாகத் தாக்கியது. அப்படியே தூங்கிப்போனான்.

*****


மறுநாள் காலை கதிரவனின் வெளிச்சம் பட்டுத்தான் அருண் விழித்தான். கையருகே ஒரு சின்னச்செடி! நெஞ்சு படபடக்க, அந்தக் கடிதம் சொன்னதுபோல் சிறு பழம் வந்திருக்கிறதா என்று பார்த்தான். இல்லை! அவனால் அதற்குமேல் தாங்கமுடியவில்லை. சத்தம்போட்டு அழ ஆரம்பித்தான்.

யாரோ தன் முகத்தை நக்குவதாக உணர்ந்து, கண் திறந்து பார்த்தால் பக்கரூ! மிகவும் உற்சாகமாக அருண்மேல் முட்டிமோதிக் குதித்தது.

பக்கரூவின் வாய் ஓரத்தில், சிகப்பு நிறத்தில் பழத்தோல்போலத் தெரிந்தது. சந்தோஷத்தில் அருண் பக்கரூவைக் கட்டி முத்தம் கொடுத்து, "செல்லமே! இப்படி பயப்படுத்திட்டியே என்னை. வா, வீட்டுக்குப் போகலாம். நம்மால இந்த ஊருக்கு இன்னும் நல்லது நடக்கப்போகுது", என்றான்.

-முற்றும்-

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com