ஆமருவி தேவநாதன் எழுதிய 'நான் இராமானுசன்'
கம்பன் பிறந்த தேரழுந்தூரைச் சொந்தஊராகக் கொண்ட ஆமருவி தேவநாதன், சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். www.amaruvi.in என்னும் வலைத்தளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுகிறார். இவரது 'பழைய கணக்கு' தொகுப்பில் வந்த 'ஸார் வீட்டுக்குப் போகணும்' சிறுகதை இந்திய தேசிய புத்தக நிறுவனத்தின் 'சிறந்த 25 சிறுகதைகள்' வரிசையில் இடம்பெற்றது. 'நான் இராமானுசன்' இவரது மூன்றாவது நூல். இது ஸ்ரீமத் இராமனுசரே பேசுவதாக அமைந்துள்ளது. அதன் தொடக்கப் பகுதியிலிருந்து சிறிது:

எழுத வேண்டி உள்ளது

மாலை ஆராதனத்துக்குத் தேவையான சாமக்கிரியைகள் மடத்தில் வந்து இறங்கிக்கொண்டு இருக்கின்றன. விளக்கு காண்பித்துக்கொண்டிருந்த உறங்காவில்லிகூட தற்போது பூக்களைக் கட்டத் துவங்கிவிட்டான். எனக்கு அவனைப்போல் இருக்கவேண்டும் என்று ஆசை. பல வேலைகளை ஒன்றாகச் செய்ய விருப்பம். ஆனால் உடல் இடம் கொடுப்பதில்லை. நான் ஏதாவது செய்யத் துவங்கினால்கூட, 'ஸ்வாமி, நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்', என்று பணிவாகக் கூறுகின்றனர் சிஷ்யர்கள்.

பெருமாளுக்குப் பூ தொடுப்பது என்றால் உறங்காவில்லிக்கு ரொம்பவும் ஆசை. அதுவே அவனுக்கு விருப்பமான கைங்கர்யம். தான் தொடுத்த பூவை அரங்கன் சூடுவது அவனுக்கு ரொம்ப திருப்தியாயிருக்க வேண்டும். 'பெருமாளுக்கு யார் பூ தொடுப்பது?' என்பதில் அவனுக்கும் அவன் மனைவி பொன்னாச்சிக்கும் இடையே போட்டி உண்டு. அரங்கனுக்கு யார் அதிகம் சேவை செய்கிறார்கள் என்பதில் அவர்களுக்குள் ஒரு போட்டி.

இவர்களைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், வருங்காலத்தில் வரலாற்றில் இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகப்போகிறது என்பது எனக்குத் தெரிகிறது. நீங்கள் படிக்கும் காலத்திலோ, அதற்கு முன்னாலேயோ இவர்கள் மறக்கடிக்கப்படுவர். இந்தப் பிறழ்வுகள் நிகழப்போவது உறுதி. இவற்றைத் தடுக்க எனக்குச் சக்தியில்லை. என்னால் ஆனது இவர்களைப் பற்றியெல்லாம் எழுதிவைப்பது மட்டுமே.

இவர்களைப்பற்றி மட்டுமா மாற்றிப் பேசப்போகிறார்கள்? விசிஷ்டாத்வைதம் பற்றியுமே பலவிதமாகப் பேசப்போகிறார்கள். அதில் என் பிரியமான சிஷ்யர்கள் உறங்காவில்லி, கூரன், அனந்தன் இவர்கள் எல்லாம் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. எனவே என் எழுத்தில் இவர்களைப் பற்றியும் இவர்களது சேவை, தொண்டு பற்றியும் பதிவுபண்ண வேண்டியது என் கடமை என்று உணர்கிறேன்.

என் சிஷ்யர்களைப் பற்றி மட்டும் அல்ல. எனக்கு, என் முன்னோர்கள், என்னுடன் பெருமாளுக்கு சேவை செய்தவர்கள்- இவர்கள் பற்றியும், விசிஷ்டாத்வைத சித்தாந்தம், இந்த சித்தாந்தம் பற்றிய என் உண்மையான எண்ணங்கள் என்ன என்று எழுதிவைக்க வேண்டியது தேவை என்று உணர்கிறேன்.

விசிஷ்டாத்வைதம் என்று உங்களுக்கு விளக்கிக் கூறியவர்கள் நிஜமாகவே அரங்கன் அருளால் நான் உணர்ந்து சொன்னதையேதான் சொன்னார்களா அல்லது அவர்கள் மனப்படி சொன்னார்களா என்று நீங்கள் அறிய வேண்டும் அல்லவா? எனவே அவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்காகவே நான் எனது உண்மையான எண்ணங்களை எழுதிவைக்கிறேன். ப்ராப்தம் இருந்து நீங்கள் இதைப் படிக்க அரங்கன் உங்களுக்கு அருள்புரிந்தால், நீங்கள் இதனைப் படிப்பீர்கள். இதனைப் படிக்கிறீர்கள் என்பதாலேயே அவன் அருள் உங்களுக்கு உள்ளது என்று உணருங்கள்.

சித்தாந்தத்திற்குள் போகும்முன் உங்களிடம் ஒன்று சொல்கிறேன். இந்த சித்தாந்தம் நான் அறிந்தவரையே. நான் எப்படி அறிந்தேன்? பலரிடம் கேட்டு அறிந்தேன். சிலரிடம் வாதிட்டு அறிந்தேன். பல நூல்கள் வாசித்து அறிந்தேன். பிறசமயவாதிகளிடம் வாதம் செய்து தெரிந்துகொண்டேன். எல்லாவற்றிற்கும் மேல் அரங்கன் திருவருள்.

பிறசமயத்தினரிடம் வாதிட்டு நான் வெற்றிபெற்றேன் என்று என்னைப்பற்றிப் பலர் கூறுகின்றனர். நீங்களும் அவைபற்றிப் படித்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை வாத விவாதங்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் கருவிகள் அல்ல.

(நான் இராமானுசன் - விஜயபாரதம் பதிப்பக வெளியீடு; விலை ரூ.60; மின்னஞ்சல்: amaruvi@gmail.com)

மதுரபாரதி

© TamilOnline.com