கவிமாமணி இளையவன்
கவிமாமணி இளையவன் கவிதை, சிறுகதை, நாவல், சொற்பொழிவு என்று பல துறைகளில் தேர்ந்தவராக இருந்தும் "கவிதை எனக்குக் கைவாள்" என்று அதனையே தனக்கான களமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். இளையோர் பலரைக் கவிஞர்களாக்கியவர். இன்றும் ஊக்குவித்து வருபவர். குன்றக்குடி அடிகளார் அளித்த 'பட்டிமன்றச் சீராளர்' விருது துவங்கி கண்ணதாசன் விருது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது தவிர, கவி காளமேகம், கவிச்சக்கரவர்த்தி, கவிஞானவாரிதி, எழுத்துச்சுடர் எனப் பட்டங்களும் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் துளசிபட் என்பவரும் தமிழில் ஜெயந்தி நாகராஜனும் எழுதியுள்ளனர். 'மரபுப் பூங்காவில் இளையவன்' என்ற தலைப்பில் மஞ்சுளா இவரது கவிதைபற்றிய ஆராய்ச்சிநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பூர்ணிமா என்பவர் இளையவனுடைய கவிதைகளை ஆராய்ந்து தெரசா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றுள்ளார். கவிஞர் வைரபாரதி இவரைப்பற்றி 'காவிய தவம்' என்ற நூலை எழுதிவருகிறார். இவரால் ஊக்கம்பெற்ற மாணவர்கள் 'இளையவன்' என்ற பெயரில் சிற்றிதழ் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். 'இலக்கியச்சாரல்' அமைப்பின் 18ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்கச் சென்னை வந்தவரைச் சந்தித்தோம். அதிலிருந்து...

*****


கே: கவிதையின் மீது உங்களுக்கு ஆர்வம் முகிழ்த்தது எப்படி?
ப: உரைநடை என்னைக் கவர்வதற்கு முன்பே கவிதையார்வம் வந்துவிட்டது. பள்ளியில் படிக்கும்போது அழ. வள்ளியப்பாவின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

காலைக் கோழி கூவும் முன்னே
கண் விழித்துக் கொள்ளலாம்
எண்ணெய் தேய்த்து முழுகலாம்
பட்டணத்தில் வாங்கி வந்த
பட்டாடையை உடுத்தலாம்

என்று ஐந்து வயதில் படித்த கவிதை இன்றளவும் நினைவில் நிற்கிறது. காரணம் அதன் எளிமை, வரிகளின் இனிமை. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளைத் தேடித்தேடிப் படிப்பேன். எதையுமே கவிதாபூர்வமாகப் பார்க்கும் மனது எனக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. சிறுவயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கிவிட்டேன். 1954ல் எனது சகோதரர் மாயூரன் குழந்தை இதழ்களுக்கு எழுதத் துவங்கினார். 1956ல், நான் எனது முதல் கவிதையே எழுதினேன். அப்போது "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" என்ற படம் வந்திருந்தது. அதில் 'அழகான பொண்ணு நான்' என்ற பாடல் மிகவும் பிரபலம். அந்தப் பாதிப்பில், நானும் விளையாட்டாக,

அழகான பையன் நான்
அதுக்கேற்ற சட்டை தான்
என்கிட்ட இருப்பதெல்லாம்
கலர் சட்டை ஒண்ணுதான்

என்ற பாடலை எழுதி, அதை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். விளையாட்டாக எழுதியதுதான் என்றாலும் அதுதான் என் முதல் முயற்சி.

கே: அச்சில் வெளியான முதல் கவிதை பற்றி...
ப: ஒருசமயம் எங்கள் ஊரில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் ராமாயண உபன்யாசம் நடந்தது. தினந்தோறும் உபன்யாசத்தைத் துவங்கும்போதும், முடிக்கும்போதும் அவர் 'அயிகிரி நந்தினி' பாட்டைப் பாடுவார். ராமாயணக்கதை என்னைக் கவர்ந்தது. 'அயிகிரி நந்தினி'யின் சந்தம் என்னை ஈர்த்தது. அதை அடிப்படையாக வைத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டே நான் ஒரு பாடல் பாடினேன்.

அன்பும் அடக்கமும் பண்புடன் வீரமும்
அனைவரும் கற்றிட வேண்டி யதே
தொன்புகழ் இராம கதைதினம் படித்திட
தோன்றிடும் செல்வமும் மாண்பும் மிகும்

அத்தகைய கதை எத்தனை முறையினும்
இனிதுறப் படித்திட இன்ப மிகும்
பல்கலி தீர்த்திடும் இராமப் பிரபுவது
பாதம் பணிந்துமே பயன் பெறுவோம்!

என்று பாடப்பாட அது தானாக வந்ததால் ஒரு தாளில் எழுதிக்கொண்டேன். பாடலைக் கேட்ட என் தந்தை நன்றாக இருப்பதாகச் சொல்லி அதற்கு ஒரு பலச்ருதி (பாடலைப் பாடினால் கிடைக்கும் பயன் என்ன என்று கூறுவது) எழுதச் சொன்னார். அப்படியாக மொத்தம் 16 பாடல்களை எழுதினேன். அதனை எழுத்தாளர் ரமணீயன் நடத்திவந்த அகல் பதிப்பகம் தனது முதல் நூலாக, ஒரு சிறுநூலை வெளியிட்டது. அப்போது எனக்கு 15 வயது இருக்கும். அந்தப் பாடலுக்குப் பல பெருமைகள் உண்டு. இன்றுவரைக்கும் அந்தப் பாடலின் சீதா கல்யாணம் வரையிலான பகுதி, சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பட்டு வருகிறது. பள்ளியின் டயரியிலும் அந்தப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. அதுபோல ரத்னபாலா ஆசிரியராக இருந்த கே.ஆர். வாசுதேவன் அவர்கள் அந்தப் பாடலினால் கவரப்பட்டு அந்த நூலை தன் மகனுக்கு வாங்கிக் கொடுக்க, அவரது மகனான டாக்டர் வா. மைத்ரேயன் சிறுவயதிலேயே அதை மனப்பாடம் செய்து பூஜையறையில் தினந்தோறும் பாடி வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இராமனைக் குறித்த அந்தப் பாடலை எழுதியதுமுதல் எனக்கும் வாழ்க்கையில் உயர்வு வந்தது.

கே: சிறுகதை, நாவல் போன்றவையும் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: சிறுவயதில் நிறைய எழுதி இருக்கிறேன். என் அண்ணன் கதை எழுதுவார் என்பதால் நானும் நோட்புக்கில் எதையாவது கதை போன்று எழுதுவது வழக்கம். அப்படி 'எமன் வேஷம்' என்ற என்னுடைய கதை செம்மைப்படுத்தப்பட்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த 'டிங் டாங்' இதழில் பிரசுரமானது. குழந்தை இலக்கிய ஊக்குவிப்பாளர் திரு. பி. வெங்கட்ராமன் அப்போது அதன் ஆசிரியர். அவருக்கு அப்போது 18 வயதிருக்கும். அவர் என்னுடைய முதல் கதையை வெளியிட்டு ஊக்குவித்தார். 'கி. பாலு' என்ற புனைபெயரில் தொடர்ந்து அதில் எழுதினேன். 6ம் வகுப்பு படிக்கும்போதே எழுத்தாளன் ஆகிவிட்டேன். 'கண்ணன்' தொடர்கதைப் போட்டிக்காக "புதுமை நெஞ்சம்" என்ற நாவல் எழுதிப் பரிசு பெற்றிருக்கிறேன். அது நூலாக வெளிவந்து இலங்கையில் மிக அதிகம் விற்பனையானது. அதன் விலை ரு.1.25. எனக்கு ராயல்டியாக அந்தக் காலத்திலேயே 97 ரூபாய் கிடைத்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கே: பாலு, இளையவன் ஆனது ஏன்?
ப: காஞ்சிப்பெரியவர் ஜயேந்திர சரஸ்வதிகள் பட்டத்துக்கு வந்திருந்த சமயம். மகாபெரியவர் இளையாற்றங்குடி சதஸ் முடித்துவிட்டு காஞ்சிபுரம் வந்திருந்தார். ஐந்து வயதிலேயே அவரைச் சந்தித்து ஆசிபெற்று அவர் கையால் அருட்கனி வாங்கியிருக்கிறேன். மீண்டும் அவரைத் தரிசிப்பதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தோம். நான் மகாபெரியவரைப் பற்றி ஒரு கவிதை எழுதிச் சென்றிருந்தேன். அவர் முன்னிலையில் படித்தேன். பெரியவரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அப்போது ஜயேந்திரர் அருகே இருந்தார். "அம்பி இங்கே வா" என்று என்னை அழைத்தார். நான் சென்றதும் "என்ன அது?" என்று கேட்டார். "பெரியவாபத்தி ஒரு கவிதை" என்றேன். "இன்றைக்குப் பெரியவா மௌனவிரதம். பேச மாட்டா. அதை என்கிட்ட படி" என்றார், படித்தேன். "ரொம்ப நன்னா இருக்கே!" என்று சொல்லி, நான் எழுதியதை வாங்கிப் படித்துப் பார்த்தார். "பாசுமன்" புனை பெயரில் அந்தக் கவிதையை நான் எழுதியிருந்தேன். "அது என்ன பாசுமன்?" என்றார் ஜயேந்திரர். "பாலசுப்பிரமணியன் என்பதன் சுருக்கம்" என்றேன் நான். "அதெல்லாம் வேண்டாம். விநாயகருக்கு இளையவன் சுப்பிரமணியன். அதனால் இளையவன் என்று வைத்துக் கொள்" என்று சொல்லி, கவிதையின் மீது குங்குமம் வைத்து ஆசிர்வதித்துக் கொடுத்தார். அதுமுதல் 'இளையவன்' என்ற பெயரிலேயே எழுதத் துவங்கினேன்.



கே: கவிதைதான் உங்கள் களம் என்று தீர்மானித்தது ஏன்?
இளையவன்: நான் அக்காலகட்டத்தில் கதை, நாவல், கவிதை, உபன்யாசம் என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருந்தேன். ஒருசமயம் எழுத்தாளர் ஆர்வி அவர்களைச் சந்தித்தபோது, "நீ ஆசைக்கு நிறைய கதைகளை எழுதியிருக்கிறாய். பரவாயில்லை. ஆனால், கவிதைதான் உன் களம். நீ உள்ளொளி நிறைந்த கவிஞன். தடம்மாறி வரக்கூடாது" என்றார். ஒருமுறை சாண்டில்யன் வீட்டில் நான் சீதா கல்யாண உபன்யாசம் சொல்லிக் கொண்டிருந்தேன். ரத்னபாலா ஆசிரியர் கே.ஆர். வாசுதேவன் உள்ளிட்ட பலர் அதைக் கேட்க வந்திருந்தனர். உபன்யாசம் முடிந்ததும் வாசுதேவன் மிகவும் பாராட்டிப் பேசினார். மறுநாள் அவரைப் பார்த்தபோது அவர் கடிந்துகொண்டார். "நீ கவிஞன். உபன்யாசம் எல்லாம் உனக்கு வேண்டாத வேலை. ஒழுங்காகக் கவிதை எழுதப் பார்" என்று அறிவுறுத்தினார். அழ. வள்ளியப்பா அவர்களைச் சந்தித்தபோது அவரும் "கவிதைதான் உனக்கான சிறந்த களம்" என்று சொன்னார். இப்படிப் பெரியவர்கள், சான்றோர்கள் எல்லாம் அறிவுறுத்தவே "இனிமேல் கவிதை மட்டும்தான்" என்று நானும் முடிவுசெய்து, அதிலேயே முழுக்கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். மகாத்மா காந்தியின் வரலாற்றை 'மோகனப் புயல்' என்ற தலைப்பில் கவிதைத்தொடராகக் கலைமகளில் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு. அது நூலாக வெளியானபோது ஒரே நாளில் 100 பிரதிகள் விற்றுவிட்டன. 'பெருந்தலைவர் காமராஜர்' பற்றி எழுதிய தொடரை மணிவாசகர் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பற்றிப் புதுக்கவிதையில் எழுதிய காவிய நூலுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. கவிதை எனக்குக் கை வாளானது.

கே: உங்களது வழிகாட்டிகள் என்று யாரைச் சொல்வீர்கள்?
ப: குழந்தைக் கவிதைகளுக்காக அழ. வள்ளியப்பாவைப் பிடிக்கும் என்றால், மரபுக்கவிதைகளுக்காகக் கவிஞர் சுரதாவை ரொம்பப் பிடிக்கும். அவருடைய எண்சீர், அறுசீர் விருத்தங்கள் பிரமாதமாக இருக்கும். கண்ணன் பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்த லெட்சுமணன் (லெமன்) கவிதைகள் என்னை மிகவும் ஈர்த்தன. அவருடைய நான்சென்ஸ் ரைம்ஸ் எனப்படும் அங்கதக் கவிதைகள் சிறப்பாக இருக்கும். மூவருமே எனது வழிகாட்டிகள்.

கே: பாரதி கலைக்கழகத்துடன் உங்கள் அனுபவம் குறித்து...
ப: அது ஒரு ஆலமரம். ஐயா பாரதி சுராஜ்தான் அந்த ஆலமரம். நான், ரவி, ரமணன் உள்படப் பல புகழ்பெற்ற கவிஞர்கள் எல்லாம் அங்கு வளர்ந்தவர்கள் தான். கவிதை சிறப்பாக இருந்தால் மிகவும் பாராட்டுவார் பாரதி சுராஜ். பத்திரிகையில் வந்த என்னுடைய கவிதைகளை வெட்டித் தனது மூக்குக்கண்ணாடிக் கூட்டில் வைத்திருப்பார். போகும் இடத்திலெல்லாம் படித்துக்காட்டி "கவிதை என்றால் இப்படி இருக்கவேண்டும்" என்று புகழ்வார். உதாரணமாக "அப்படி ஒரு புயல் வரவேண்டும்; சில ஆலமரங்கள் விழவேண்டும்" என்ற என் கவிதையைப் பல கவியரங்குகளில் வாசித்துச் சிலாகித்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த விருது என்றால் அது பாரதி கலைக்கழகம் வழங்கிய 'கவிமாமணி' விருதுதான். காரணம், அந்த விருது பெறும்போது எனது மனைவியும் உடனிருந்தார். பாரதி கலைக்கழகத்தின் மரபு அது. தம்பதி சமேதராகத்தான் விருது வாங்கிக்கொள்ள வேண்டும். மாலையும், கழுத்துமாய் மனைவியுடன் பெற்ற ஒரே விருது அதுதான். ஆகவே, அதைமட்டும் என் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்கிறேன். மற்றவற்றையெல்லாம் கம்பனுக்கும், பாரதிக்குமே சமர்ப்பித்துவிட்டேன். சுராஜ் அவர்கள் ஊக்குவிப்பால் பல கவியரங்குகளில் தலைமை வகித்திருக்கிறேன். அதில் ஒரு சம்பவம் மட்டும் என்னால் இன்னமும் மறக்க முடியாது.

கே: என்ன அது?
ப: சுகி. சிவம் இன்றைக்கு மிகச்சிறந்த பேச்சாளர். அவர் ஆரம்ப காலகட்டத்தில் நிறையக் கவிதைகள் எழுதுவார். சொற்பொழிவுகளிலும் ஈடுபாடுண்டு. முறையாக ஸ்ரீவைஷ்ணவம் படித்தவர். ஒரு சமயம் நான் தலைமை வகித்த கவியரங்கிற்குப் பார்வையாளராக வந்திருந்தார். இருக்கையில் அமர்ந்தவாறே 'என்னைக் கூப்பிடாதீர்கள்' என்று சாடையில் சொன்னார். நல்லகவிஞர், அவரும் அங்கே கவிதை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், அவரைப்பற்றிய அறிமுகம் சொல்லிக் கவிதை வாசிக்கக் கூப்பிட்டுவிட்டேன்.

'கூப்பிடாதீர்கள்' என்று சொன்ன பின்னரும் கூப்பிட்ட என்னைக் கடிந்துகொள்ளாமல் பெருந்தன்மையுடன் மேடையேறிக் கவிதை சொல்ல ஆரம்பித்தார்.

"கவிதை எழுதிவரவில்லை
காரணம்
கவிதை எழுதவரவில்லை

கவிதை எழுதிவரவில்லை
காரணம்
கவிதையில் எனக்கு வரவில்லை"

என்றார். உண்மையை அந்த அவையில் அவர் உடைத்துப் பேசிவிட்டார். ஏனென்றால் கவிதை எழுதிச் சம்பாதித்தவர்கள் யாருமில்லை. புகழ் வேண்டுமானால் கிடைக்கும். பணம் கிடைக்காது. அதைத்தான் அவர் நகைச்சுவையோடும், சொற்சுவையோடும் அப்படிப் பேசினார். பலரும் அதை ரசித்துப் பாராட்டினர்.

கே: கவிஞர்களுடனான உங்கள் அனுபவங்கள் குறித்து...
ப: இளந்தேவன் மறக்கமுடியாத கவிஞர். கவி ராட்சசன் என்று சொல்லலாம். இலந்தை சு. ராமசாமி சிறந்த மரபுக்கவிஞர். சந்தக்கவிமாமணி தமிழழகன் பல பாவினங்களை முயன்று வெற்றிகண்டவர். மைலாப்பூரில் வாழ்ந்துவரும் சிவ சூரியநாராயணன் என்கிற சிவசூரி நல்ல கவிஞர். கவிஞர் மதிவண்ணன் கவிதையிலிருந்து ஆன்மிகச் சொற்பொழிவுக்குப் போய்விட்டார். 'வாழைப்பூ நிமிர்ந்தது போல் வணக்கம் சொன்னேன்' என்பார். 'தண்ணீரின் ஏப்பம்தானோ அலைகள்' என்பார். அருவியைப்பற்றி 'தொங்குகின்ற ஊதுபத்திப் புகையோ; நீரின் தொடர்கதையோ' என்பார். இப்படி கற்பனைத் திறனும், கவித்திறனும் மிகுந்த உன்னதக் கவிஞர் அவர். திருப்புகழ்ப் பாடல்கள் அவருக்கு மனப்பாடம். புதுவயல் செல்லப்பன் சிறந்த கவிஞர். 'காரமோ தித்திக்கும் காண்' என்பதை ஈற்றடியாக வைத்து எழுதிய கவிதையை 'சிலப்பதி - காரமோ தித்திக்கும் காண்' என்று அழகாக முடித்திருந்தார். இத்தகைய கவிஞர்களுடன் பழகியதும், பழகிவருவதும் மறக்க முடியாதது.



கே: கவியரங்குகளில் நிகழ்ந்த மறக்கமுடியாத அனுபவங்கள் ஏதாவது?
ப: 560க்கு மேலான கவியரங்குகளில் பங்கேற்றிருக்கிறேன். ஒரு சமயம் வானவில் பண்பாட்டு மையத்தின் கே. ரவி வீட்டில் ஒரு கவியரங்கம். ரவி, அவரது துணைவியார் ஷோபனா ரவி, செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபால் எனப் பலர் இருந்த அரங்கம். 'மணி மாமா' என்றொரு கவிதையை நான் வாசித்தேன். மணி மாமா ஒரு சாஸ்திரிகள். அவர் இல்லாமல் அந்த வீட்டில் எந்தக் காரியமும் நடக்காது. அந்த அளவுக்குப் பொறுப்பானவர். அவர் திடீரென இறந்துபோனதாகத் தந்தி வருகிறது.

மணி மாமா இல்லாமல்
நுனி இலைச் சாப்பாடு - வீட்டில்
நுழைந்ததே கிடையாது

என்று ஆரம்பித்து,

தஞ்சாவூர் காட்டில்
இந்நேரம் தகனமாய்ப்
போயிருப்பார்

என்று முடித்தேன். பார்த்தால் அரங்கத்தில் பெண்களின் விசும்பல் சத்தம். கவிதை அவர்கள் மனதைத் தொட்டிருந்தது. எனக்குப் பின்னால் இலந்தை ராமசாமி, இளந்தேவன் போன்ற பெருங்கவிஞர்கள் கவிதை வாசிக்கவேண்டும். அப்போது மேடையேறிய ரவி, "இந்தக் கவியரங்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது" என்று முடித்துவிட்டார். இன்னும் எனக்குப் பின்னால் 20 கவிஞர்கள் படிக்கக் காத்திருக்கின்றனர். ஆனால், அவர் கவியரங்கம் முடிவதாக அறிவித்துவிட்டார். அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எல்லாரும் இருந்தனர். ஒரு கவியரங்கம் பாதியில் நின்றுபோனது அன்றைக்குத்தான்.

ஒருசமயம் இலந்தை ராமசாமி 'பிச்சைக்காரன்' என்ற தலைப்பில் ஒரு கவிதை படித்தார். மிகச்சிறந்த கவிதை. அடுத்து நான் வாசிக்கவேண்டும், மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். "இலந்தையின் இந்தக் கவிதைக்குப் பின்னால் என் கவிதையை அரங்கேற்றும் எண்ணம் எனக்கு இல்லை. மன்னிக்கவேண்டும்" என்று சொல்லிவிட்டேன். உரைநடைக்கெல்லாம் இந்த அனுபவம் வராது. கவிதைக்குத்தான் வரும். அதுதான் கவிதையின் சிறப்பு.

அதுபோல பாரதி பற்றி ஒரு கவியரங்கம், கவியரசு வைரமுத்து வந்திருந்தார். நான், பாரதிபற்றி,

அவன் ஒரு அதிசயம்
அவன் ஒரு அவசியம்
அவன் ஒரு புதிரின் அவதாரம்
அவன் ஒரு லட்சியம்
அவன் ஒரு ரகசியம்
அவன் ஒரு ஸ்ருதியின் ஆதாரம்

என்று தொடங்கிப் பாடினேன். அதைக்கேட்டு வைரமுத்து, "இளையவன் செம்ம ஃபார்ம்ல இருக்கீங்க" என்று பாராட்டினார். அது மனநிறைவைத் தந்தது

கே: இன்றைய கவிதை உலகம் குறித்து...
ப: நன்றாகவே இருக்கிறது. நிறைய இளங்கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். குறிப்பாக மிகச் சிறப்பாகப் பலர் 'துளிப்பா' எழுதுகின்றனர்.

"இந்த வீட்டில்
பொம்மை பேசுகிறது
குழந்தையிடம் மட்டும்"

இது முனைவர் தாமோதரக்கண்ணன் எழுதிய துளிப்பா. இவர் திருச்சி பாரதனின் பேரன். அதேபோல வைரபாரதி எழுதிய இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

"வாசலில் மழை
குடை வேண்டாம்
குடம் கொண்டுவா"

தண்ணீர்ப்பஞ்சத்தை எவ்வளவு அழகாக இந்தக் கவிதை சொல்கிறது!.

எதிர்வீட்டு ஜன்னலில்தான்
எத்தனை சட்டைகள்
என் சட்டையில்தான்
எத்தனை ஜன்னல்கள்!

வறுமையைச் சொல்கிறது இந்தக் கவிதை. இப்படி இன்றைக்கு நன்றாக எழுதுபவர்கள் நிறைய இருக்கின்றனர்.

கே: யாருக்கும் புரியாத வகையில் எழுதப்படும் கவிதைகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் என்ன பயன் என்றும் தெரியவில்லை. புதுக்கவிதையில் அதுமாதிரிப் பலர் செய்கின்றனர். அதை ஒரு இலக்கிய வகையாகச் சிலர் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை;
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை

என்று கவிதைக்கு இலக்கணம் வரைந்துள்ளார் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை. ஆனால், பல கவிதைகள் இன்றைக்கு அதற்கு மாறாக இருக்கின்றன. படித்தால் புரியவேண்டும். அதுதான் கவிதை. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வள்ளுவர், எவ்வளவும் எளிமையாகக் குறளை படிப்பவருக்குப் புரியும்படி எளிமையாக எழுதியிருக்கிறார். 'நன்றி மறப்பது நன்றன்று' என்பதும், 'ஒழுக்கம் விழுப்பம் தரலான்' என்பதும் இன்றைக்கும் புரியும்படிதானே இருக்கிறது? பாரதிக்குத் தெரியாத கவிதை இலக்கணமா? அவன் ஏன் எளிய மொழியில் பாடினான்? எளிமையாகச் சொல்லி, மக்கள் மனதில் அந்தக் கருத்தை விதைப்பதுதான் கவிதை. கவிதையே அதை வாசிப்பவனுக்குப் புரியவில்லை என்றால் அது சொல்லும் கருத்து எப்படிப் புரியும்? எனக்கு இதில் ஏற்பு இல்லை.

கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: மனைவி பவானி. அவரது சப்போர்ட் இல்லாவிட்டால் என்னால் இந்த அளவுக்கு இலக்கியப் பணியில் ஈடுபட்டிருக்க முடியாது. மூத்தமகனுக்குக் கவிதை ஆர்வம் உண்டு. அவன் எழுதிய முதல் கவிதையே என்னைப் பற்றியதுதான். எனது இளையமகன் என்னைப் பற்றிய குறிப்புகளை, எனது கவிதைகளை, ஒலிப்பதிவு செய்து வருகிறார். மற்றபடி என்னைப் பின்பற்றி அவர்கள் இத்துறைக்கு வரவில்லை என்பதில் எனது மனைவிக்கு மிகவும் மனத்திருப்தி. காரணம், கவிதை புகழ் சேர்க்கும், ஆனால் செல்வத்தையோ, வாழ்க்கை வளத்தையோ தராது.



கே: இலக்கியச்சாரல், நிறை இந்த அமைப்புகளின் நோக்கமென்ன? அவற்றின்மூலம் நீங்கள் செய்து வரும் பணிகள் என்ன?
ப: நான் பார்த்த பணியின் காரணமாகச் சிலகாலம் திருச்சியில் தனியாக வசித்தேன். ஓய்வுநேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கவும், குழந்தைகளின் திறனறிந்து ஊக்குவிக்கவும், என் குழந்தைகளுக்குப் பதிலாக அந்தக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிப்பதற்காகவும் நான் ஆரம்பித்ததுதான் 'இலக்கியச் சாரல்'.

அருகிலிருந்த பள்ளி மாணவர்களை அழைத்து திருக்குறள், பாரதியார் கவிதை, இலக்கியங்களை அறிமுகப்படுத்துவது, அதிலிருந்து கேள்விகள் கேட்பது, பதில் சொல்பவர்களுக்குப் பரிசளிப்பது என்பதாக அது வளர்ச்சியடைந்தது. நான் வானொலியில் சான்றோர் சிந்தனையில் பேசுவேன். அதைக் குறிப்பெடுத்து சரியான முறையில் கட்டுரை எழுதி அனுப்புபவர்களுக்குப் பரிசு கொடுப்பேன். ஒருசமயம் 96 மாணவிகள் கட்டுரை அனுப்பியிருந்தார்கள். பின்னர் அதனைச் சென்னையிலும் தொடங்கி நடத்தினேன். இங்கும் பல பெண்கள் இலக்கியச்சாரலில் செயலாளர்களாக இருந்து சாதனை படைத்துள்ளனர். திறமையுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது அதன் நோக்கம். அது நல்ல முறையில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. இலக்கியச்சாரல் என்ற பெயரில் இதழ் ஒன்றும் 18 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

நான் ஹைதராபாதுக்குக் குடிபெயர்ந்தபொழுது, அங்குள்ள தமிழார்வமிக்க பலரது திறமைகளை வெளிக்கொணர்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது நிறை இலக்கிய வட்டம். அங்கே முத்துசாமி என்ற சிறந்த சைவசித்தாந்தி இருந்தார். அவர்தான் 'நிறை' என்ற பெயரைச் சூட்டினார். 'நிறை' என்ற இதழும் தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகளாக அது ஹைதராபாத் வாழ் தமிழர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகிறது. பட்டிமன்றம், கவியரங்கம் என்று எதிலும் சிறப்பாக, சென்னையில் இருப்பவர்களுக்குச் சமமாக, பேசக்கூடியவர்கள் அங்கே உள்ளனர். சீனிவாசன் என்பவர் தலைமையில் சிறந்த இலக்கியப் பேச்சாளர்கள் அணி அங்கே உள்ளது. கவிஞர் அருள்மதி தலைமையில் கவியரங்க அணி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். நகைச்சுவைப் பேச்சாளர்கள் அணி, பாடகர்கள் அணி என்று பல அணிகள் ஆந்திர மண்ணில் நிறை இலக்கிய வட்டம் மூலம் உருவாகியுள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போதும், கம்பன் விழாக்களின் போதும் 'நிறை' சிறப்பிதழ்களை வெளியிடுகிறது.

ஆந்திராவில் முதன்முதலாகக் கம்பன் விழாவை நிறை இலக்கிய வட்டம் நடத்தியது. முதலாண்டு விழாவிற்கு அருளாளர் ஆர்.எம். வீரப்பன் வாழ்த்துரை வழங்கி ஊக்குவித்தார். கடந்த ஆண்டு கவிஞர்கள் 'ஹரிமொழி' ஹரி கிருஷ்ணன், பா. வீரராகவன் உள்ளிட்டோரை அழைத்து பட்டிமன்றம், கவியரங்கம் எல்லாம் நடத்தினோம். வரும் ஃபிப்ரவரியில் ஆறாவது ஆண்டு கம்பன் விழா நடக்கவிருக்கிறது.

"இளைஞர்களின் திறனறிந்து ஊக்குவிப்பதே என் முக்கியப் பணி" என்கிறார் கவிமாமணி இளையவன். அவரது முயற்சிகளுக்கு வாழ்த்தும் நன்றியும் கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


"ஐயா, நீங்க யாருங்க?"
மதுரை ஆதீனம் அவர்கள் கொடுத்த "கவிஞான வாரிதி" என்ற விருதை என்னால் மறக்கமுடியாது. அப்போது நான் திருச்சியில் இருந்தேன். இரவு மணி 10.15 இருக்கும். "உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது" என்று ஒருவர் சொன்னார். என்னவோ ஏதோ என்று கீழே ஓடினேன். அப்போது மொபைல் ஃபோன் கிடையாது. போனை எடுத்து 'ஹலோ' என்றேன்.

"நான் மதுரை ஆதீனம் பேசறேன்" என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு ஒரே திகைப்பு. தொடர்ந்து "வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு விருதளிக்க முடிவு. அவசியம் வந்து விருதைப் பெற்றுச் செல்க" என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார். எங்கே போய் விருதை வாங்கிக் கொள்வது என்று புரியாமல் கொஞ்சநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். பின்னர் அறைக்குச் சென்றேன்.

மறுநாள் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்குச் சென்று மதுரை ஆதீனம் முகவரியைத் தெரிந்துகொண்டேன். ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களுடன் ஒரு காரில் மதுரை சென்றேன்.

மிகச் சிறப்பாக விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஆதீனத்தின் மேனேஜர் "ஐயா, நீங்க யாருங்க?" என்று மிகப் பணிவுடன் விசாரித்தார். "நான் கே. பாலசுப்பிரமணியன்., ரீஜனல் சூப்பிரண்டெண்ட், வேர்ல்ட் பேங்க் ப்ராஜெக்ட்" என்றேன்.

"அதைக் கேட்கலீங்க. நீங்க யாருங்க" என்றார் மீண்டும்.

"கவிமாமணி இளையவன். கவிஞன்."

"அது இல்லங்க. நீங்க யாருங்க?"

எனக்கு அவர் என்ன கேட்கவருகிறார் என்பதே புரியவில்லை. "எதுக்குக் கேட்கறீங்க" என்றேன்.

"இல்லீங்க. இங்க மரபுப்படி எல்லாரையும் உள்ளே விடமாட்டாங்க. சிவபூஜைய எல்லாம் பாக்க எல்லாரையும் அனுமதிக்கமாட்டாங்க. ஆனா ஆதீனம் உங்களை அனுமதிச்சிருக்காங்க. அதுவும் சிவப்புக் கம்பளம் விரிச்சி, ரதபந்தம் படிச்சு, நிலைமாலை சூட்டி, ஞானப்பால், ஞானக்கனி கொடுத்து, அப்புறம் விருதுன்னு ரொம்பப் பெருமைப்படுத்திட்டாங்க. இதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது. ரொம்பச் சிறப்பு இது. அதுனாலதான் நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கக் கேட்டேன்" என்றார்.

"நான் ரொம்பச் சாதாரணமான ஆளுங்க. ஐயாதான் பெருமைப்படுத்திட்டார்" என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆதீனம் அவருடைய காரிலேயே என்னை திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், யாருக்கும் அளிக்காத சிறப்பை மதுரை ஆதீனம் ஏன் எனக்குக் கொடுத்தார் என்பது எனக்கும் தெரியத்தான் இல்லை. பிறகு ஒரு வருடம் கழித்து ஆதீனம் திருச்சிக்கு வந்தபோது, அவரைச் சென்று பார்த்து வணங்கினேன். அவரும் ஆசிர்வதித்தார்.

அவரிடம், "எனக்கு ஒரு சின்ன சந்தேகம்ங்க" என்றேன்.

"என்ன?" என்றார் உரத்த குரலில்.

"ஐயா, எனக்கு ஏன் அந்த விருது கொடுத்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?" என்றேன்.

"நான் எங்கேய்யா கொடுத்தேன்? மேலேருந்து ஒருத்தன் குடு குடுன்னான் குடுத்தேன்!" என்றார்.

'மேலேருந்து' என்று சொன்னது யாரை என்று இன்றுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை!

- கவிமாமணி இளையவன்

*****


வானவரும் காத்திருப்பார்
ஒருசமயம் எஸ். நல்லபெருமாள் என்ற கவிஞர் ஒரு கவியரங்குக்கு அழைப்பதற்காக வீட்டுக்கு வந்தார். 'கம்பன் கவிநயச்செல்வர்' என்று அவரைச் சொல்வார்கள். நெடுஞ்செழியனின் நண்பர். அவர் வந்தபோது இரவு மணி 9.00. மனைவி, குழந்தைகள் எல்லாம் தூங்கிக்கொண்டிருந்தனர். வீடோ சிறியது. அவரை வாசலிலேயே நிற்கவைத்துப் பேசும்படி ஆகிவிட்டது. ஒரு பெரிய கவிஞரை இப்படிச் செய்துவிட்டேனே என்று மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுநாள் அவர் அழைத்திருந்த கவியரங்கத்திற்குப் போனேன்.

பிள்ளைகள் தூங்கப் பிரிய மனையாளும்
அள்ளிப் படுத்திருந்தாள் ஆதலினால் - விள்ளா
புகழ்க்கவியே உன்னைப் புறத்தேநில் என்றேன்
அகம் வருந்துகின்றேன் அதற்கு

என்றொரு பாடல் எழுதி அவரிடம் மன்னிப்பு வேண்டினேன். உடனே அதற்கு அவர்

நில்லென்று சொல்லி நிறுத்திவைத்துப் போனஇடம்
கொல்லைப்புறம் எனினும் கூசாமல் நானிருப்பேன்
நானென்னடா தோழா நறுங்கவிதை நீதந்தால்
வானவரும் காத்திருப்பார் வந்து

என்று பதில் அனுப்பினார் பெருந்தன்மையுடன் அந்தக் கவிஞர். அந்த அளவுக்குக் கவிதைகள் உணர்ச்சிகளைத் தரவல்லன.

- கவிமாமணி இளையவன்

© TamilOnline.com